12.31.2022

பதிவு. 63

 மிஸ்டர் ஜீல்ஸீடன் ஒரு நாள் – டயான் ப்ரோகோவன் / ஆனந்த்.

நீண்ட காலம் ஒன்றாக வாழ்ந்த துணையை சட்டென இழப்பதைப் போன்ற துயரம் வேறு ஏதுமில்லை. ஆனால் வாழ்வு என்பதே துயரங்களின் தொகுப்புத்தானே. துக்கத்தின் அளவு ஆளுக்கு ஆள் மாறுபடலாம். ஆனால் துயரப்படாத மனிதன் என்பவன் யாருமில்லையே. மரணம் சில நேரங்களில் தீரா துயரத்தை தருகிறது. சில நேரங்களில் அன்பை பெருக்குகிறது. சில நேரங்களில் உண்மையை ஒப்புக்கொள்ள வைக்கிறது. சில நேரங்களை மன்னிப்பை வழங்குகிறது.
ஜீல்ஸீம் ஆலீஸ் அம்பது வருடங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்து வருபவர்கள். பனிப்பொழியும் காலையில் குளிருக்கு இதமாக போர்வையை இழுந்து போர்த்திக்கொண்டு தூங்கிய ஆலீஸ், சமையலையில் கணவர் காபி தாயாரிக்கும் மணத்தை நுகர்ந்து கண்விழித்து சற்றுநேரம் அப்படியே படுத்து இருந்துவிட்டு, காபி குடிக்க ஹாலுக்கு வந்த ஆலீஸ், ஷோபாவில் உட்கார்ந்து இருக்கும் ஜீல்ஸீக்கு அருகில் அமர்ந்து அவரோடு பேச தொடங்குகிறார். ஜீல்ஸீ உட்கார்ந்த நிலையிலேயே மரணம் அடைந்து இருக்கிறார் என்பது ஆலீஸ்க்கு சற்று நேரம் கழித்துத்தான் தெரிகிறது. கணவரின் மரணத்தை வெளியில் யாருக்கும் சொல்லாமல் ஆலீஸ் ஒருநாள் முழுக்க ஜீல்ஸின் உடலோடும், அவரின் நினைவோடும் வாழ்வதை சொல்வதே இந்த நாவலின் கதைச் சுருக்கமாகும்.
இந்த கதையில் டேவிட் என்று ஒரு சிறுவன் வருகிறான். அவன் ஆட்டிச நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை. அவன் தினந்தோறும் ஜீல்ஸிடன் செஸ் விளையாடுபவன். ஆலீஸ் ஜீல்ஸின் மரணத்தை யாருக்கும் தெரிவிக்காமல் இருக்கும் சூழலில் டேவிட் அங்கு வருகிறான். ஜீல்ஸின் மரணத்தை டேவிட் எப்படி எதிர்கொள்ள போகிறான் என ஆவலாக பார்த்திருக்க, அவன் அதை மிக சாதுரியமாக கையாளுகிறான். குழந்தைகள் பெரியவர்களாகும் தருணத்தை டயான் அவ்வளவு அழகாக காட்சிப்படுத்தி எழுதியிருக்கிறார்.
கதை நிகழும் காலம் ஒரே நாள். பிரதான கதாப்பாத்திரங்கள் இரண்டே இரண்டு பேர். சுமார் அறுபது பக்கங்களில் ஆலீஸின் வாழ்வை அல்லது ஜீல்ஸின் கதையை டயான் மிகச்சிறப்பாக சொல்லியுள்ளார். இதற்குள் ஆண் பெண் உறவு சார்ந்த சிக்கல்கள், பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்குமான உறுவுகள், முதுமையின் தனிமை, இளமையின் காதல், திருமணம், கருச்சிதைவு, குழந்தை வளர்ப்பு, வேலை, துரோகம் என எல்லாமே சுருக்கமாகவும் சுவையாகவுமாக, ஒரு நீண்ட வாழ்வு சொல்லப்பட்டு இருக்கிறது.
ஆனந்தின் மொழிப்பெயர்ப்பு சிறப்பாக இருக்கிறது. அவருக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.
இந்த நாவலை நவீன உலக கிளாசிக் நாவல் வரிசையில் காலச்சுவடு பதிப்பகம் சிறப்பாக வெளிட்டுள்ளது.
ஆகாஷ் ஆனந்தின் அட்டைப்படம் அருமையாக இருக்கிறது. நாவலிம் கருப்பொருளை அட்டைப்படம் பிரதிபலிக்கிறது.
இந்த நாவலை படிக்கும் வாய்ப்பை உருவாக்கி தந்த எங்கள் இயக்குனர் பாலாஜி தரணிதரன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
10.10.2022.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புத்தகங்கள் 2024

  இந்த ஆண்டில்(2024) நான் படித்த புத்தகங்கள்: நாவல்: 01. ஹமார்ஷியா – கண்ணன் ராமசாமி. 02. ஆலம் – ஜெயமோகன். 03. வேட்டை நாய்கள் பாகம்.1 – நரன்....