12.31.2022

பதிவு. 64

 சிப்பியின் வயிற்றில் முத்து – போதிசத்வ மைத்ரேய.

சுமார் 42 ஆண்டுகளுக்கு முன்னால் வங்கமொழியில் எழுத்தப்பட்ட நாவல் “சிப்பியின் வயிற்றில் முத்து”. இதன் ஆசிரியர் போதிசத்வ மைத்ரேய. இதை வங்கமொழியிலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்த்தவர் சு. கிருஷ்ணமூர்த்தி. நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம் மூலம் இந்நாவலின் முதல் பதிப்பு 1994 ஆண்டில் வெளியாகியுள்ளது.
இந்நாவலின் கதை நிகழும் காலம் அரை நூற்றாண்டு (1990-1950) காலமாகும். கதையின் பெரும்பகுதி இந்திய சுதந்திரத்திற்கு பிறகான முதல் ஐந்து ஆண்டுகள் காலகட்டமாகும். கதை மூன்று அடுக்குகளில் நடக்கிறது.
ஒன்று தூத்துக்குடி மீனவர்களின் வாழ்வு அவர்களின் பிரதிநிதியாக பீட்டர். இரண்டாவதாக கர்நாடக இசை மற்றும் நாட்டியம் சார்ந்த வாழ்க்கை முறை அவர்களின் பிரதிநிதியாக ராமன், மரகதம். மூன்றாவதாக நவ நாகரிகத்தின் அடையாளமாக அந்தோனி. இவன் லண்டனில் இருந்து தன் அப்பாவின் மரணத்தை ஒட்டி சொந்த ஊர் திரும்பி இருக்கிறான். அந்தோனியும் பீட்டரும் நண்பர்கள். பீட்டருக்கு கர்நாடக இசை மற்றும் நாட்டியத்தில் ஈடுபாடு இருக்கிறது. இக்கதை மாந்தர்கள் எல்லாரும் ஒன்றோடு ஒன்றாக பிணைக்கப் பட்டுள்ளார்கள்.
இந்தியா சுந்திரம் பெற்றால் எல்லாருக்கும் சுகம் வந்துவிடும் என்று நம்பியவர்களின் பிரதிநிதியாக பெரியவர் வெங்கி கதாபாத்திரம். அன்றைய கள்ள சந்தை, சுயநலத்துக்காக அரசியலை பயன்படுத்திக் கொண்டவர்கள் என எல்லோரையும் இந்நாவல் கவனப்படுத்துகிறது. பீட்டருக்கு இந்த சமூகத்தை மாற்ற வேண்டும் என்ற அவ இருக்கிறது. அந்தோணி அதற்காக இங்கையே இருக்க வேண்டுமென விரும்புகிறான். அந்தோணிக்கு பாவப்பட்ட மக்களின் வாழ்க்கையை நெருக்கமாக பார்த்தப்பின் அவர்கள்மீது பரிவு ஏற்படுவதற்கு பதிலாக ஒவ்வாமையே ஏற்படுகிறது. பீட்டரின் ஆசை நிறைவேறியதா இல்லையா என்பது நீண்ட கதையாக இருக்கிறது.
நாவலாசிரியர் வங்காளியாக இருந்த போதிலும் தமிழர்களின் வாழ்வை மிக நுட்பமாக கவனித்து எழுதியுள்ளார். ஆண்டாளின் பாசுரம், திருஞ்சான சம்பந்தரின் பாடல்கள், பாரதியின் கவிதைகள், திருநெல்வேலி, சிதம்பரம், தூத்துக்குடி, சென்னை ஆகிய நகரங்களின் ஆன்மீக மற்றும் அரசியல் சிறப்புகள் என அனைத்தையும் பதிவு செய்துள்ளார். பரதவர் என்ற சொல்லின் மூலம் எது என்றெல்லாம் கூட ஆராய்ந்துள்ளார்.
மீன்பிடிக்க கடலுக்குள் செல்லும் மீனவர்களின் பழக்க வழக்கங்களையும் கர்னாடக இசை மற்றும் பரத நாட்டியம் சார்ந்த நுட்பங்களையும் மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளார். மீன் பிடிப்பதையும் சங்கு எடுப்பதையும் இசைப்பதையும் நாட்டியம் ஆடுவதையும் நேர்த்தியான சொற்களால் சிறைப்பிடித்துள்ளார்.
நேரடியாக தமிழில் எழுதப்பட்டது போலவே சு.கிருஷ்ணமூர்த்தி சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் உரையை கேட்டப்போது இந்த நாவல் பற்றி தெரிந்துக்கொண்டேன். இந்த நாவல் குறித்து அவர் பேசியதிலிருந்து இந்த நாவலை படிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. அவருக்கு என் பாராட்டுகளும் நன்றிகளும்.
இந்த நாவல் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த நண்பர் குமாருக்கு என் மனமார்ந்த நன்றிகள். 11.12.2022.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...