2.28.2023

பதிவு. 67

 மழைக்கண் – செந்தில் ஜெகன்நாதன்.

எட்டுத் தோட்டாக்கள் இயக்குனர் ஸ்ரீகணேஷ் மூலம் அவரின் இணை இயக்குனராக நண்பர் செந்தில் ஜெகன்நாதன் எனக்கு அறிமுகமானார். அப்போதே அவரின் சிறுகதை ஆனந்த விகடனில் வெளிவந்திருப்பதாக ஸ்ரீகணேஷ் சொன்னார். அதை படிக்கும் வாய்ப்பு அமையவில்லை. ஆனாலும் செந்தில் ஒரு எழுத்தாளராக வளர்ந்து வருகிறார் என்ற தகவல் வந்து சேர்ந்துக்கொண்டே இருந்தது.
இந்த புத்தக கண்காட்சியில் 2000 ஆண்டுக்கு பிறகு எழுத வந்த படைப்பாளிகளின் சிறுகதைகளை வாங்க திட்டமிட்டதும் அதில் செந்தில் ஜெகநாதனின் மழைக்கண் சிறுகதை தொகுப்பை சேர்த்துக்கொண்டேன்.
இந்த தொகுப்பில் மொத்தம் ஒன்பது சிறுகதைகள் இருக்கின்றன. மயிலாடுதுறை வட்டார கிராமபுற வாழ்வும் சென்னை மாநகர வாழ்வும் இக்கதைகளின் களமாக இருக்கிறது. சிறுகதைகளின் பெயர்களே வசிகரிக்க கூடியதாக இருக்கிறது. உதாரணமாக எவ்வம், நெருநல் உளலொருத்தி, காகளம், மழைக்கண் போன்றவற்றை சொல்லலாம்.
அப்பாவின் நலனுக்காக அப்பாவை கட்டிப்போட வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும் மகன், பிறந்தநாள் அன்று பிணமாக நடிக்க வேண்டியிருக்கும் நடிகன், தனக்கு பிள்ளைபேறு வாய்க்கவில்லை என்பதற்காக அண்ணனின் பிள்ளையை தானமாக கேட்கும் தங்கை, இசையை ரசிக்கும் மளிகைக்கடகாரர், நாய்மீது ப்ரியமாக இருக்கும் கர்ப்பிணி பெண், நாற்பது வயதை நெருங்கிய பின்னும் ஒரு முத்தத்திற்காக அள்ளாடும் ஆண், தன் தொழிலை முன்வைத்து வேண்டாமென விலகி சென்ற முன்னால் காதலியை அதே தொழில் நிமித்தமாக சந்தித்து சங்கடப்படும் சினிமா உதவி இயக்குனர் என பலவிதமான மனிதர்கள் ரத்தமும் சதையுமாக இந்த கதைகளில் உலவுகிறார்கள்.
இந்த ஒன்பது கதைகளில் எனக்கு காகளம் சிறுகதை ரொம்பவும் பிடித்திருக்கிறது. மளிகை கடை நடத்தினாலும் இசையை ரசிக்கும் நபரை(முதலாளி ராமஜெயம்) நான் இங்குதான் கேள்வி படுகிறேன். அத்துடன் அக்கதையின் மையம் ஒரு மனிதனின் குற்றவுணர்ச்சியை பேசுகிறது. முதலாளியின் சாவுக்கு செல்லும் முன்னாள் தொழிலாளியும் இன்றைய முதலாளியுமான செல்வத்தின் மனவோட்டம்தான் இக்கதை. ஒரு மனிதனிடம் குற்றவுணர்ச்சி இருக்கும் வரை அவன் பெரும் தவறுகளை செய்யமாட்டான் என நம்புகிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை. இவ்வாறாக பலவித சிந்தனையை தூண்டுவதாக இக்கதை இருக்கிறது.
காகளம் என்றால் எக்காளம், எக்காளம் என்றால் ஓர் ஊது சின்னம் என்று ந.சி.கந்தையாவின் செந்தமிழ் அகராதி சொல்கிறது. காகளம் என்பது கிளாரினெட்-க்கான தமிழாக்கம் என நண்பர் செந்தில் சொல்கிறார். இந்த கதையில் முதலாளியின் சாவு வீட்டில் இசைக்கப்படும் கிளாரினெட்டின் இசை செல்வத்தை நிலைகுலைய செய்கிறது. அது அவனுள் என்னன்னவோ செய்கிறது. முதலாளியின் மரண செய்தியை கேட்டது முதல் அவன் மனம் சமநிலை குலைந்து எக்காளமிட்டுக்கொண்டே இருக்கிறது. கதையின் மைய சரடும் தலைப்பும் ஒன்றோடு ஒன்று பிண்ணி பிணைந்துள்ளது.
சில கதைகளின் முடிவு வேறு மாதிரி இருந்து இருக்கலாம் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. கதைகள் வெளிவந்த காலம், அது வெளிவந்த இதழ்களின் குறிப்புகளை கதையின் கீழே அடிக்குறிப்பாக இருந்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது.
செந்தில் ஜெகன்நாதனின் மொழிநடை மிக இயல்பாக இருக்கிறது. இந்த ஒன்பது கதைகளின் மூலம் தன் எழுத்து வாழ்க்கையை சிறப்பாக தொடங்கி இருக்கிறார். அவர் மேலும் மேலும் உயரங்களை தொட வாழ்த்துக்களும் பாரட்டுகளும்.
இந்த புத்தகத்தின் அட்டைப்படத்தை இரா.தியாகராஜன் நன்றாக வடிவமைத்துள்ளார். வம்சி புக்ஸ் இந்த புத்தகத்தை சிறப்பான முறையில் வெளியிட்டுள்ளது. இதன் முதல் பதிப்பு டிசம்பர் 2021-ல் வெளியாகியுள்ளது.
13.02.2023.

All reaction

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு . 85 ( இனி நான் உறங்கட்டும் )

  இனி நான் உறங்கட்டும் – பி.கே.பாலகிருஷ்ணன் / ஆ.மாதவன்.   ஒன்றினை அழித்து பிறிதொன்றினை உருவாக்குவதே மானிட வளர்ச்சி அல்லது நாகரிகம். எதனை...