மூதாய் மரம் – வறீதையா கான்ஸ்தந்தின்
வறீதையா கான்ஸ்தந்தின் இந்த பெயரை காலச்சுவடு இதழ்களில் பார்த்திருக்கிறேன். கடல் சார்ந்து கட்டுரைகள் எழுதுவார் என்று தெரியும். சில கட்டுரைகளை படித்தும் இருக்கிறேன். இப்பொழுதுதான் முதல் முறையாக அவருடைய புத்தகத்தை முழுதாக படித்தேன்.
மூதாய் மரம் கட்டுரை தொகுப்பாகும். இதில் பெரும்பாலான கட்டுரைகள் நெய்தல் சார்ந்ததாகவே இருக்கிறது. வளர்ச்சியின் பெயரால் விளைநிலங்கள் தொழிற்சாலைகளாக மாறுவதை கண்ணால் கண்டு இருக்கிறேன். பூமிக்கு அடியில் இருக்கும் கனிம வளங்களுக்குகாக காடுகள் அழிவதைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் கடல் சார்ந்து அதிகம் தெரியாது. இலங்கை இராணுவத்தினால் மீனவர்கள் சுடப்படும்போதும், சுனாமியில் உயிர்கள் பலியான போதும், புயல் தாக்கும்போதும் மட்டுமே மீனவர்கள் பற்றிய செய்திகளை கேள்விப்படுவதுண்டு. மற்றபடி அவர்களின் வாழ்வு குறித்து அதிகம் தெரியாது. இந்த புத்தகம் அந்த அறியாமையின் மீது சிறிது வெளிசத்தை பாய்ச்சுகிறது.
காடுகள் அழிக்கப்படுவதினாலும், அணைகள் கட்டப்படுவதினாலும் மழைநீர் கடலுக்கு சென்று சேராததினால் கடலில் ஏற்படும் பாதிப்பு என்ன, நவீன படகுகளினால் கட்டுமர படகுகளுக்கு ஏற்படும் இழப்பு என்ன, நவீன படகுகளை குறிப்பிட்ட எல்லைக்கு மேல் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாட்டினால் யார் பயனடைகிறார்கள், நவீன வழிகாட்டி கருவிகளின் வருகையாலும் வளர்ச்சியின் பேரால் சுற்றுசூழல் சமநிலை பேணிபாதுகாக்க படாததினால் ஏற்படும் இழப்புகள் என்ன, நிலம் மற்றும் காடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் சட்டங்களை வளைப்பதுபோல் கடலில் எப்படி சட்ட மீறல் செய்கிறது, அதனால் இந்திய ஒன்றியத்திற்கு ஏற்படும் இழப்புகள் என்ன, கடலில் இருந்து கிடைக்கும் மீன்களினால் மக்களின் உணவு தேவை எந்த அளவுக்கு பூர்த்தியாகிறது, அந்த மீன்களை வாங்க விற்க என எத்தனை உதரி தொழிலாளர்கள் பயனடைகிறார்கள், வளர்ச்சியின் பெயரால் கடலில் கொட்டப்படும் கழிவுகளினால் மீன்வளம் பாதிக்கிறது, மீன்வளம் பாதித்தால் எத்தனை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என எண்ணிலடங்கா தகவல்கள் இந்த புத்தகத்தில் இருக்கிறது.
வறீதையா கான்ஸ்தந்தின் எழுத்துநடை மிக எளிமையானது, வாசகனை கவரக்கூடியதாக இருக்கிறது. இவர் நெய்தல் சார்ந்து மேலும் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். அதெல்லாம் படிக்கவேண்டிய புத்தகங்கள் பட்டியலில் சேர்த்துக்கொண்டேன்.
இந்த புத்தகத்தை தடாகம் வெளியீடு சிறப்பான முறையில் வெளியிட்டு இருக்கிறது. இதன் முதல் பதிப்பு 2017 ஆண்டு வெளி வந்துள்ளது. 28.02.2023.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக