2.29.2024

திரை. 22

 திரைப்பட விழா அனுபவம் – 1

சென்னை திரைப்பட விழாவில் படம் பார்ப்பது என்பது என்னளவில் அது ஓர் உலக சுற்றுப்பயணம். பல ஆண்டுகளாக தொடர்ந்து பார்த்து வருகிறேன். சில ஆண்டுகளில் கலந்து கொள்ள முடியாமலும் போயிருக்கிறது. இந்த ஆண்டு முழுவதும் பார்க்கும் சூழல் இருந்ததினால் டிசம்பர் மாதம் வேறு எந்த படங்களும் பார்க்க கூடாது என திட்டமிட்டேன், ஆனாலு இடையில் இரண்டு படங்கள் பார்த்தேன். அவை இரண்டும் தமிழ், மலையாளம் என்பது ஆறுதலாக இருந்தது.
திரைப்பட விழா தொடங்க இரண்டு நாட்கள் முன்பாக டிஸ்கவரி புக் பேலஸில் நடந்த தோழர் வசந்த சுசீலாவின் நினைவஞ்சலி கூட்டத்திற்கு சென்றேன். அவர் என் முகனூல் நண்பர் என்றாலும் அவரைப்பற்றி அதிகம் தெரியாது. அந்த நிகழ்வில் அவருடைய நண்பர்களின் பேச்சிலிருந்து அவரைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.
தோழர் சுசிலா சிறந்த மனிநேயம் கொண்டவர், வழக்கறிஞர், அரசியல் தெளிவுள்ள களப்போராளி என அவரின் பிம்பம் என்னுள் உயர்ந்து கொண்டே சென்றது. ஊருக்கெல்லாம் ஓடி ஓடி உதவிய ஒருவருக்கு சரியான நேரத்தில் உதவி கிடைக்காமல் உயிர் இழந்துள்ளார் என்பது பெரும்சோகமாக இருந்தது. அன்று இரவு என்னால் சரியாக உறங்கவே முடியவில்லை. அவருக்கு ஏன் அப்படி நடந்தது என்ற கேள்வி என்னுள் ஓடிக்கொண்டே இருந்தது. மறுநாள் பகலில் நண்பர்களை தேடிபோயி வேறு விசயங்களை பேசினாலும் உள்ளுக்குள் அந்த கேள்வியும் சோகமும் இருந்துகொண்டே இருந்தது. இரண்டாவது நாள் இரவும் தூக்கம் வர நெடுநேரமாகி போனது.
மறுநாள் காலை சென்னை திரைப்பட விழாவுக்கு செல்லும்போது உடலும் மனமும் சோர்ந்து காணப்பட்டது. அன்று பகலில் நான்கு படங்கள் பார்த்தேன். முதல் இரண்டு படங்களும் பிடித்து இருந்தது. ஆனாலு மனதுக்குள் தோழர் சுசிலாவுக்கு ஏன் அப்படி நிகழ்ந்தது, அவர் இருந்தால் இன்னும் எத்தனைபேர் பயன்பெறுவார்கள் என்றெல்லாம் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. மாலையில் இன்றும் சரியாக தூங்க முடியாமல் போய்விடுமோ என்ற பயமும் என்னுள் எழுந்தது. திரைப்படவிழாவின் தொடக்க விழா நடந்து கொண்டு இருக்கும்போது சத்தியம் தியேட்டர் வளாகத்துள்ளே நான் நடந்து கொண்டே இருந்தேன். விழா முடிந்தது என்பதை நண்பர் மூலம் தெரிந்துக்கொண்டுதான் திரையரங்கினுள் சென்றேன்.
திரைப்பட விழாவின் தொடக்க படமாக Perfect Days என்ற ஜப்பானிய திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த படத்தினை ஜெர்மன் இயக்குனர் Wim Wenders இயக்கியுள்ளார். இந்த படத்தின் நாயகன் அலாரம் அடித்து அதிகாலையில் எழுகிறான். படுக்கையை சுருட்டி வைத்தல், இரவு பாதியில் படித்த புத்தகத்தை எடுத்து வைத்தல், பல் துலக்குதல், முகசவரம் செய்தல், பால்கனியில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் தெளித்தல், குளித்தல், டோக்கியோ நகர கழிவறை சுத்தம் செய்யும் பணியாளருக்கான சீருடையை அணிதல், வேலைக்கான உபகரணம் மற்றும் கார் சாவியுடம் வீட்டை விட்டு வெளியே வருதல், வெளியே வந்ததும் உடனடியே அண்ணாந்து வானத்தை பார்த்து ரசித்தல், தானியங்கி இயந்திரத்தில் பணம் போட்டு குளிர்பானம் எடுத்தல், காரில் அமர்ந்து காரின் டேப்பில் கேசட்டை போட்டு இசையை ஒலிக்க விடுதல், குளிர் பானத்தை ஒரு மிடறு குடித்துவிட்டு காரை இயக்க தொடங்குகிறான். வசனமே இல்லாமல் காட்சி கோவையாக ஒரு மனிதரின் அன்றாம் தொடங்குவதை பார்க்க பார்க்க என்னை மறந்து படத்துக்குள் சென்று விட்டேன்.
ஜப்பான் என்றால் ஜென் தத்துவம் நினைவுக்கு வரும். எதை செய்கிறாயோ அதில் நீ முழுமையாக இரு என்பற்கு ஏற்ப இந்த திரைப்படத்தின் நாயகன் தினசரி செய்யும் வேலைகளை புதிதாக செய்வது போல் ஆவர்மாக செய்கிறான். இருப்பதை கொண்டு மகிழ்ச்சியாக வாழும் கலையை அறிந்தவனாக இருக்கிறான். நான் மேலே விவரித்தது அதிகாலை மட்டுமே, அவன் வேலைக்கு சென்று அங்கு கழிவறையை சுத்தம் செய்யும் காட்சிகளில் கூட அவன் முகத்தில் அசூசை ஏற்படுவதில்லை. நாம் வீட்டை சுத்தம் செய்வதுபோல் பொது கழிவறையை சுத்தம் செய்கிறான், வேலை முடிந்து பொது குளியலறைக்கு சென்று ஆற அமர குளிந்த்துவிட்டு வந்து, உணவகத்தில் உணவு அருந்துகிறான். மாலையில் மதுக்கடைக்கு சென்று மதுக்குடிக்கிறான். இரவு தூங்க செல்லும் புத்தகம் படிக்கிறான்.
இப்படி குழப்பம் இல்லாமல் செல்லும் வாழ்வில் ஏதோ குழப்பம் ஏற்பட போகிறது என எதிர்பார்த்து காத்திருந்தால் அப்படி அல்லாமல் வேறு வேறு உணர்வுபூர்வமான தருணங்கள் கவித்துவ காட்சிகளாக படத்தில் பல இருக்கின்றன. கழிவறை சுத்தம் செய்யும் தொழிலாளியாக இருந்தாலும் அவனுக்கு இயற்கையை ரசிக்க தெரிகிறது, அந்த அபூர்வ கணங்களை படம் பிடிக்க தெரிகிறது, அந்த படங்களை வரிசைப்படுத்தி பாதுகாக்க தெரிகிறது. இசை தெரிகிறது, இலக்கியம் தெரிகிறது, இதையெல்லாம் விட அவனால் சக மனிதனை நேசிக்கவும் முடிகிறது. இதனால் இந்த நாயகனையும் இந்த படத்தையும் எனக்கு மிகவும் பிடித்து போகிறது.
Perfect Days படத்தை பார்த்துவிட்டு வந்த இரவு நன்றாக தூங்கினேன். கனவில்கூட மென்மையான உணர்வுகளே கனவுகளாக வந்தது. இந்த திரைப்படத்தினால் உடனடியாக என் மனம் சாந்த நிலைக்கு சென்றதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன். இதன் பிறகு தோழர் சுசிலாவின் வாழ்வு பற்றி நினைக்கையில் அவர் சிந்தனைகளை பின்பற்றி, அவரைப்போல சகமனிதர்களில் உதவி தேவைப்படுவோருக்கு உதவுவதே நான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது.
சென்னை உலக திரைப்பட விழாவின் தொடக்க விழா படத்தை பார்த்ததுமே இந்த ஒரு படம் போதும் இந்த விழாவில் கலந்து கொண்டதுக்கு என எனக்குள் தோன்றியது. - 26.12.2023.


பதிவு. 77

புத்தரின் தம்மபதம் அறவழி

பாலி மூலத்திலிருந்து தமிழ் செய்தவர் – நடவாலியூர் சோ.நடராஜன்.
வெளியீட்டாளர் – போதி.பெ.தாட்ஸ்மேன்.
சார்பதிவாளர் அலுவலக விசயமாக நண்பருக்கு தெரிந்த ஒரு எழுத்தரின் அலுவலகத்திற்கு சென்றேன். எங்களுக்கு தேவையான தகவல்களை பொறுமையாக விளக்கி சொன்னார். விடைபெறும்போது அவரது முகவரி அட்டையையும் கொடுத்தார், அதில் அவர் பெயர் தாட்ஸ்மேன் என்று இருந்தது அது எதோ தொழில் சார்ந்த பெயர் என நினைத்துக் கொண்டேன்.
இரண்டு மாத இடைவெளியில் மறுபடியும் அவரை சந்திக்க சென்றோம். இப்பொழுதும் முன்புபோலவே எங்கள் சந்தேகங்களுக்கு பொறுமையாக பதில் சொன்னார். அப்பொழுதுதான் அவர் அலுவலக சுவற்றில் புத்தர் மற்றும் வள்ளலார் படங்கள் இருப்பதை கவனித்தேன். இது எனக்கு சற்று வித்தியாசமாக பட்டது.
தேநீர் அருந்த சென்றபோது அவரிடம் புத்தர் மற்றும் வள்ளலார் படங்கள் குறித்து கேட்டேன். அவர் மிகவும் ஆர்வமாகி பேசதொடங்கினார். புத்தரின் போதனைகள் குறித்தும் அவருக்கும் புத்த போதனைகள் மேல் ஏற்பட்ட ஈர்ப்பு குறித்தும், புத்தருக்கும் வள்ளுவருக்கும் உள்ள ஒற்றுமைகள் குறித்தும், வள்ளலாரின் மேன்மைகள் குறித்தும் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொன்னார். எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. இப்படி ஒரு மனிதரை இந்த இடத்தில் நான் எதிர்பார்க்கவே இல்லை.
தாட்ஸ்மேன் ஒருமுறை மலேசியா என்றபோது அங்கு விமான நிலையத்தில் “புத்தரின் தம்மபதன் அறவழி” என்ற சிறுநூலை பார்த்து வியந்து வாங்கி வந்துள்ளார். அந்த புத்தகத்தின் கருத்துகள் மக்களுக்கு சென்று சேரவேண்டும் என்ற நோக்கில் சுமார் ஆறாயிரம் பிரதிகள் பதிப்பித்து விலை இல்லாமல் மக்களுக்கு கொடுத்துள்ளார். எனது நண்பருக்கு ஏற்கனவே அந்த புத்தகத்தை கொடுத்துள்ளார் என்ற செய்தியை அப்பொழுது அறிந்தேன். அவரை விட்டு விலகி வந்த உடனே நண்பர் சொன்னார் தாட்ஸ்மேன்–னு சரியாதான் பேரு வச்சிருக்காருன்னு, Thoughts Man-ஐதான் தமிழில் தாட்ஸ்மேன் என வைத்துள்ளார் என்பது எனக்கு அப்பொழுதுதான் புரிந்தது.
புத்தரின் தம்மபதம் அறவழி புத்தகத்தை படிக்க தொடங்கியதுமே எனக்குள் தோன்றியது திருக்குறளுக்கு இந்த கருத்துகளுக்கு இருக்கும் ஒற்றுமைதான். திருக்குறளை சமணம் துறவி எழுதினார் என ஒரு கருத்து உண்டு என்பது தெரியும். ஆனால் இது புத்தரின் கோட்பாட்டோடு ஒத்து போகிறதே என வியந்தபடியே படித்து முடித்தேன். ஆதி கருத்து யாருடையதாக இருக்கும் என்பதை அறியும் ஆவல் எனக்குள் தோன்றியது. யார் காலத்தால் முந்தையவர்கள் என பார்க்க கூகுள் செய்து பார்த்தேன். அதன்படி,
மகாவீரர் – பொ.ஊ.மு. 599 – 527.
புத்தர் – பொ.ஊ.மு. 563 – 483.
வள்ளுவர் – பொ.ஊ.மு. 31 அல்லது ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன். சரியான ஆண்டு தெரியவில்லை.
மகாவீரர் சமணமத்தில் 24-வது அருகன். ஏற்கனவே 23 மூன்று பேர் பின்பற்றி வந்த கருத்துக்களை வளப்படுத்துகிறார். அவருக்கு பின் வந்த புத்தர் மகாவீரின் கருத்துக்களை வளப்படுத்தி வேறு ஒரு மார்க்கமாக பிரிகிறார். புத்தர் சொன்ன அறவழி கருத்துக்களை செம்மை படுத்தி வள்ளுவர் ஒரு அறநூலாக திருக்குறளை இயற்றியுள்ளார் என்ற முடிவுக்கு வந்து சேர்ந்தேன்.
குறிப்பாக மூவரும் சொல்வது: புறதோற்றத்தை விட அகம் முதன்மையானது, கள்ளுண்ணாமை, புலால் மறுத்தல், சத்தியம் பேசுதல் என எல்லாமே ஒத்து போகிறது.
அந்தணன் என்போன் அறவோன் – வள்ளுவர்.
பிராமணத் தாய் வயிற்றில் உதித்தவன் என்பதனால் மாத்திரம் ஒருவனை நான் அந்தணன் என்று கூறுவதில்லை. எல்லாப் பிராணிகளுடைய தோற்றமும் முடிவும் தெரிந்தவன், பற்றற்றவன், நன்னெறி படர்வோன், அறிவொளி பெற்றவன், அவனே அந்தணன் என்று கூறுவேன். – புத்தர்.
தம்மபதம் இயல் இயலாக எழுதப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு இயலும் சொல்லும் கருத்துக்கள் பல அதிகாரங்களில் சொல்லப்பட்டு தெளிவாக வரிசைப் படுத்தப்பட்டு இருக்கிறது. இது பக்கத்தால் சிறு புத்தகம் ஆனால் பெரும் அறிவுச்செல்வம். அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
தாட்ஸ்மேன் தம்மபதம் படிக்கும்போது திருக்குறளையும் பக்கத்திலேயே வைத்து படிக்க வேண்டும் என்று சொன்னதின் அர்த்தமும் புரிந்தது.
நவாலியூர் சோ.நடராஜன் மிகவும் சிறப்பாக மொழிப்பெயர்ப்பு செய்துள்ளார். நேரடியாக தமிழில் எழுத்தப்பட்டது போலவே இருக்கிறது.


- 25.12.2023.

11.19.2023

பதிவு. 76

 




பிழைத்தல் அல்ல வாழ்தல் – ம.ஜியோடாமின்.

 

 

புத்தகம் - 01

உயிர்வலை

 

சில புத்தகங்களின் பெயரை கேட்டதுமே அந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆசை தோன்றிவிடும். அண்மையில் அப்படி மனதை கவந்த புத்தகம் ம.ஜியோடாமின் எழுதிய “பிழைத்தல் அல்ல வாழ்தல்” என்ற புத்தகம். இது பத்து புத்தகங்கள் அடங்கிய தொகுப்பு நூலாகும்.

 

முதல் புத்தகத்தின் பெயர் “உயிர்வலை” என்பதாகும். சுமார் 75 பக்கங்களில் இவ்வளவு சிந்தனைகளா என வியக்க வைக்கும் புத்தகம் இது. உணவு சங்கிலி என்று ஏற்கனவே நாம் கேள்விப்பட்ட செய்தியைதான் இது சொல்கிறது. ஆனால் சொல்முறையில் நம்மை வியக்க வைக்கிறது.

 

கடலில் வாழும் சாலமன் மீன்கள் தன் சந்ததியை பெருக்க பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் கடந்து ஆற்றின் வழியே மலைக்கு வருகிறது. உப்பு நிறைந்த கடலில் வாழ்ந்த சாலமன் மீன் எப்படி நன்னீருக்குள் வந்து தன் சந்ததியை உருவாக்குகிறது, எப்படி தன் ஆதி பிறப்பிடத்தை கண்டு பிடிக்கிறது, பெரும் கூட்டமாய் வரும் மீன்கள் வழியில் எந்த எந்த உயிரினங்களுக்கு உணவாகிறது, மீன்கள் வருவதை அந்த உயிரினங்கள் எப்படி அடையாளம் காண்கிறது. இயற்கை எப்படி உயிரினங்கள் ஒன்றோடு ஒன்று இணக்கமாக வாழுமாறு படைத்திருக்கிறது என்பதை அற்புதமாக விளக்கி செல்கிறார்.

 

ஆப்ரிக்காவில் இருக்கும் ஒரு பெரும் மேச்சல் நிலம் எப்படி பல்லாயிரம் உயினங்களுக்கு பெரும் உணவு மேசையாக இருக்கிறது என்பதையும், ஒரே தாவரம் எப்படி பலவிதமான உயிரினங்களின் உணவாக இருக்கிறது என்பதையும் எளிமையாகவும் சுவாரசியமாகவும் சொல்லி செல்கிறார்.

 

இந்த புத்தகத்தில் நான்கு கட்டுரைகள் இருக்கிறது. இந்த புத்தகத்தின் ஆசிரியர் ம.ஜியோடாமின். இவர் பெயரே இப்போதுதான் அறிமுகம். ஆனால் அவரின் எழுத்துநடை மிகவும் எளிமையாக இருக்கிறது. அவர் சொல்லும் தகவல்களோ மிகவும் பிரமிப்பு தரக்கூடியதாக இருக்கிறது. சுற்றுசூழல் சார்ந்து எழுத்தில் நிறைய தகவல்கள் வருவதால் அதை படிப்பவன் மனதில் எளிதாக கடத்தும் கலை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அதை இவர் மிகவும் லாவகமாக செய்துள்ளார்.

 

 

புத்தகம் – 02

நாமும் நம் உறவினர்களும்

 

சுற்றுச்சூழல் சார்ந்த புத்தகத்தினை படிக்க தொடங்கினோம், அதனால் இந்த புத்தகத்தின் தலைப்பின்படி இந்த பூவுலகிம் வாழும் உயிர்களை நேசிக்க வேண்டும் என்ற சொல்ல வருகிற புத்தகமாக இது இருக்கும் என்று நினைத்தபடி படிக்க தொடங்கினேன். புத்தகத்தினை முழுதாக படித்து முடித்ததும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

 

இந்த பூமி எப்படி தோன்றியது. அது உள்ளும் புறமும் காலவெள்ளத்தில் எப்படியெல்லாம் மாறி வந்திருக்கிறது. அதில் எத்தனை வகையான உயிரனங்கள் வாழ்ந்து மறைந்தன.

 

சுமார் 460 கோடி ஆண்டுகள் வயதுள்ள பூமியில் மனிதனின் வயது சில லட்சம் வருடங்களுக்கு முன்பு தொடங்கினாலும் சுமார் பன்னிரெண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் இப்போது இருக்கும் மனித இனத்தின் முன்னோர்களின் வரலாறு தொடங்குகிறது.

 

இந்த பூமியில் வாழும் எல்லா உயிர்களும் ஒரே உயிரில் இருந்து உருவான வரலாற்றை எளிமையாக எலோருக்கும் புரியும் வண்ணம் விளக்கியுள்ளார்.

 

குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்றால் இன்னும் குரங்கு இருக்கிறதே, அது எப்படி என வினவும் நண்பர்களை சந்தித்து இருக்கிறேன். அவர்கள் அனைவரும் இந்த புத்தகத்தினை படிக்கமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களின் கேள்விகளுக்கான பதில் இதில் இருக்கிறது.

 

பூமி தோன்றி இதுவரை 12 மணிநேரம்தான் ஆகிறது என கணக்கிட்டால், இதில் மனிதனின் தோற்றம் என்பது கடைசி 38 விநாடிகள் மட்டுமே என்ற வரையறையை படிக்கும்போது பூமியில் மனித இனத்தின் தோற்றம் என்பது எவ்வளவு சிறியது. ஆனால் இன்று இந்த பூமியை சிதைத்துக்கொண்டு இருப்பவர்களும் இந்த மனிதர்கள்தான்.

 

பூமியின் தோற்றம், பூமியில் உயிர்களின் தோற்றம் மற்றும் மனிதர்களின் தோற்றம் குறித்து எளிமையாகவும் சுவையாகவும் எழுதியுள்ளார். இது பள்ளியில் பாடமாக வைக்க தகுந்த புத்தகம் என்றால் அது மிகையாகாது.

 

 

புத்தகம் - 03

ஏற்றத் தாழ்வுகளின் கதை.

 

பூமியில் மனிதர்கள் தோன்றிய போது இந்த பூமி அனைத்து உயிர்களுக்கும் பொதுவானதாக இருந்தது. மனிதன் எப்போது விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை கண்டுபிடித்தானோ அப்போதிலிருந்து ஏற்ற தாழ்வும் உருவாக தொடங்கியது. சுற்றுசூழல் பற்றி பேச ஆரம்பித்தால் ஏற்றதாழ்வை பேசாமல் இருக்க முடியாது.

 

இந்த மாற்றங்களை மனித இனத்தின் வளர்ச்சிப்போக்கில் எல்லாரும் வேட்டியாடி சமமாக பகிர்ந்துக்கொண்ட காலம்போய், சிலர் உழைக்கவும் சிலர் உழைக்காமல் பிறரின் உழைப்பு உறிஞ்சி வாழும் நிலை எப்படி வந்தது என்பது வரை மிக அழகாக சொல்லியுள்ளார்.

 

மனித இனம் முழுமைக்கும் பொதுவாக இருந்த நிலம் எப்படியெல்லாம் தனி மனிதர்களின் சொத்தாக மாறியது என்பதையும் தெளிவாக விளக்கியுள்ளார். ஏற்ற தாழ்வை சமமாக்குவதன் மூலமே சுற்றுச்சூழலையும் சரி செய்யமுடியும் என்பதை எல்லோரும் உணரும் வண்ணம் கூறியுள்ளார்.

 

 

புத்தகம் - 04

பற்றி எரியும் பூமி.

 

இந்த தொகுப்பின் நான்காவது புத்தகம் பற்றி எரியும் பூமி. சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஒரே நிலையில் இருந்த பூமியின் வெப்பநிலையை கடந்த இருநூறு ஆண்டுகளில் மாற்றியிருக்கிறது மனிதனின் நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள். புவி வெப்பமடைவதினால் ஏற்படும் பின்விளைவுகள் எவ்வாறு இருக்கும், என்ன என்ன அழிவுகளை ஏற்படுத்தும், அதனால் யாரெல்லாம் அதிகம் பாதிக்கப் படுவார்கள் என்று விளக்குகிறது இந்த புத்தகம்.

 

அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சில தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் செய்யும் காரியங்கள் எப்படி எளிய மனிதர்களையும் பிற உயிரினங்களையும் தாவங்களையும் பாதிக்கிறது என்பதை இந்நூலாசிரியர் எளிமையான உதாரணங்கள் மூலம் நமக்கு உணர்த்தி விடுகிறார்.

 

 

புத்தகம் - 05

பூமிக்கு நெருப்பு வைத்தவர்கள்.

 

இந்த தொகுப்பின் ஐந்தாவது புத்தகத்தின் பெயர் “பூமிக்கு நெருப்பு வைத்தவர்கள்”. உண்மையான சுற்றுசூழல் பிரச்சனையை தொடங்கிய இடம் 1712 ஆண்டு நீராவி எஞ்சின் கண்டுபிடிக்கப்பட்ட நாளில் தொடங்குகிறது என்றும், அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனுக்கு உதவியாக இருந்த நிலையில் இருந்து மனிதனை சுரண்டும் இடத்திற்கு அல்லது ஒரு சிலர் பெரும் லாபம் அடைய  வேண்டும் என்ற எண்ணத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகளை சுயநலமாக பயன்படுத்தும் நிலைக்கு செல்லும்போது சுற்றுசூழல் மாசுப்படுகிறது என்பதை நமக்கு எளிமையாக உணர்த்துகிறது இந்த புத்தகம்.

 

நீண்ட ஆண்டுகள் உழைக்க கூடிய பொருட்களை கண்டுபிடித்தாலும், தங்களின் லாபத்திற்காக சில ஆண்டுகளே பயன்படுத்தும் அளவுக்கு திறன் குறைந்த பொருட்களை கண்டுபிடித்து, தயாரித்து சுற்றுசூழலை எப்படியெல்லாம் பெரும்முதலாளிகள் பாழ் ஆக்குகிறார்கள் என்பதையும், இந்த பூமிக்கு எருப்பு வைத்தவர்கள் அந்த பெரும் முதலாளிகள் என்றும் விளக்காமாக கூறுகிறது இந்த புத்தகம்.

 

தங்களை வல்லரசு நாடுகள் என கூறிக்கொள்ளும் நாடுகள்தான் இந்த பூமிக்கு பெரும் கேட்டை விளைவிக்கிறார்கள். தங்களின் சொகுசு வாழ்வுக்காக பிற நாடுகளை குப்பை தொட்டியாக மற்றும் அவர்கள் தங்களை நாகரிகமானவர்கள் என கூறிக்கொள்வது எவ்வளவு முரணானது.

 

 

புத்தகம் - 06

பச்சை வியாபாரம்.

 

சில புத்தகங்களின் பெயரை கேட்டதுமே அந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆசை தோன்றிவிடும். அண்மையில் அப்படி மனதை கவந்த புத்தகம் ம.ஜியோடாமின் எழுதிய “பிழைத்தல் அல்ல வாழ்தல்” என்ற புத்தகம். இது பத்து புத்தகங்கள் அடங்கிய தொகுப்பு நூலாகும்.

 

இந்த தொகுப்பின் ஆறாவது புத்தகம் “பச்சை வியாபாரம்” என்பதாகும். பற்றி எரிந்து கொண்டிருக்கும் பூமியை காப்பாற்ற பெருநிறுவனங்கள் முயற்சி செய்வதாக சொல்லிக்கொண்டு செய்யும் வியாபாரமே பச்சை வியாபாரம். பூவுலகை நாசம் செய்துக்கொண்டு இருப்பர்களே பூவுலகை காக்க போராடுவதாக மக்களை நம்ப வைத்து எப்படி எல்லாம் அதை வியபாரமாக மாற்றுகிறார்கள் என்பதை இந்த புத்தகத்தில் சிறப்பாக விளக்கியுள்ளார்.

 

முதலாளித்துவம் தன் உற்பத்தியை பெருக்கிக்கொண்டே செல்ல செல்ல அதற்கு லாபம் மிகும். ஆனால் பூமியில் நச்சு பெருகும். நச்சை உருவாக்குபவர்களே நச்சை இல்லாமல் ஆக்கிவிடுவார்கள் என்பது முரண்தான். ஆனால் நடமுறையில் அதுதான் தொடர்ந்து நடந்துக்கொண்டு இருக்கிறது. பூமியை காக்க சரியான நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசுதான். ஆனால் அந்த அரசை இயக்குவது முதலாளித்துவம்தான் என்பதை பல்வேறு உதாரணங்கள் மூலம் எளிமையாக விளக்கி இருக்கிறார்.

 

 

புத்தகம் - 07

எந்திரன் – வேலையில் கரையும் வாழ்வு.

 

இந்த தொகுப்பின் ஏழாவது புத்தகம் எந்திரன். உபதலைப்பு வேலையில் கரையும் வாழ்வு. விரிவு அடைந்துக்கொண்டே இருக்கும் முதலாளித்துவ உற்பத்தி முறையில் மனிதன் எப்படி எந்திரனாக மாற்றப்படுகிறான் என்பதை இந்த புத்தகம் விளக்குகிறது.

 

அவன் கைய வைத்தே அவன் கண்ணை குத்துவதுபோல் வளர்ச்சியின் பெயரால் முதலாளித்துவ உற்பத்தி எப்படி எல்லாம் மனிதனை மானிட நிலையிலிருந்து எந்திரன் நிலைக்கு தள்ளி அவன் வாழும் சூழலை கெடுக்கிறது என்பதையும் அதற்கு எப்படி எல்லாம் சமாதானம் சொல்லி அவனை பணிய வைக்கிறது என்பதையும் நூலாசிரியர் தெளிவாக கூறுகிறார். 

 

இயற்கையோடு வாழ்ந்த மனிதன் எப்படி இயற்கையை விட்டு விலகி சென்றான். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ வேலைக்கு செல்வதாக கூறும் மனிதன் முடிவில் வேலைப்பளு காரணமாக குடும்பத்துடன் ஒன்றாக இருக்க முடியாத சூழலுக்கு தள்ளப்படுகிறான். இப்படியான நிலமைக்கு யார் அல்லது எது காரணம் இதற்கு மாற்று என்ன அதை எப்படி நடைமுறைப் படுத்துவது என பலவாறு சிந்திக்க தூண்டுகிறது இந்த புத்தகம்.

 

 

புத்தகம் - 08

விளக்கைச் சுற்றும் விட்டில் பூச்சிகள்.

 

இந்த தொகுப்பின் எட்டாவது புத்தகத்தின் தலைப்பு விளக்கைச் சுற்றும் விட்டில் பூச்சிகள். சந்தை பொருளாதாரம் மனிதர்களை எப்படி வெறும் நுகர்வோர்களாக மாற்றி வைத்திருக்கிறது இல்லை மாற்றிக்கொண்டே இருக்கிறது என்பதை இந்த புத்தகத்தில் விளக்கமாக கூறியிருக்கிறார்.

 

சனநாயகம், சுந்தந்திரம், தனிமனித உரிமை என்றெல்லாம் பேசினாலும் நாமெல்லாம் சந்தை பொருளாதரத்தில் வெறும் நுகர்வோர் மட்டுமே. சந்தை பொருளாதாரம் மனிதனை நுகர்வோனாக மாற்ற, நுகர்வோன் அவனுக்கு தேவைக்கு அதிகமான நிறைய பொருட்களை வாங்குகிறான், நிறைய பொருட்கள் விற்பனையாக சந்தை பொருளாதாரத்தில் பெரும் முதலாளிகள் பெரும் லாபம் பார்க்கிறார்கள். ஆனால் தேவைக்கு அதிகமான பொருள் உற்பத்தியினால் சுற்றுசூழல் சீர்கெடுகிறது. நுகர்வோனாக மாறும் மனிதன் மானுட கரிசனங்களை இழக்கிறான். மனிதனின் அகமும் சூழலும் கெட காரணமாக இருக்கும் சந்தைப் பொருளாதரத்தை வீழ்த்தாத வரை மனிதனும் பூமிக்கும் மீட்சி கிடையாது. அதை எப்படி, எதனால்.. உடனடியாக விடைக்காணப்பட வேண்டிய கேள்விகள்.

 

 

புத்தகம் - 09

குறைவே நிறைவு.

 

இந்த தொகுப்பின் ஒன்பதாவது புத்தகத்தின் தலைப்பு குறைவே நிறைவு. இதுவரையிலான புத்தகங்கள் சுற்றுசூழல் எப்படியெல்லாம் மாசுபடுகிறது, அதற்கான அடிப்படை காரணிகள் என்ன என்ன என்பதை நமக்கு சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறியது. இந்த புத்தகம் ஒவ்வொரு தனிமனிதனும் சுற்றுசூழல் மாசுமாட்டை குறைக்க என்ன என்ன செய்யமுடியும் என்பதை சுருக்கமாக சொல்கிறது.

 

இயற்கை வளங்களை பயன்படுத்தி உருவாக்கப்படும் எந்த பொருளும் அதனளவில் சுற்றுசூழலை பாதிக்கவே செய்யும்.  நாம்(தனிமனிதர்கள்) எவ்வளவு குறைவான பொருட்களை பயன்படுத்தி வாழ்ந்தாலே நாம் சுற்றுசுழல் மாசுபாடுகளை குறைக்க முயல்கிறோம் என்பதை பலவிதமான பொருட்களை முன்வைத்து சிறப்பாக விளக்கி கூறியுள்ளார். ரத்தின சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் மினிமலிசத்திற்கு மாறுவது அல்லது அப்படி வாழ முயற்சி செய்யவேண்டும் என்பதேயாகும். இதனால் நமக்கு உடனடியான பொருளாதார லாபமும் நீண்ட நோக்கில் புவிக்கு நல்ல சுற்றுசூழலும் அமையும் என்பது இதன் சிறப்பாகும்.

 

 

புத்தகம் - 10

வளங்குன்றா வளர்ச்சி அல்ல: தேவை, மட்டுறு வளர்ச்சி.

 

இந்த தொகுப்பின் பத்தாவது புத்தகத்தின் தலைப்பு வளங்குன்றா வளர்ச்சி அல்ல: தேவை, மட்டுறு வளர்ச்சி. சுற்றுசூழலை சரிசெய்ய அல்லது சுற்றுசூழல் சீரழிவை கட்டுக்குள் கொண்டுவர தேவையான கருத்துக்களை கொண்ட கையேடு இது என்றால் அது மிகையாகாது.

 

சந்தைப் பொருளாதாரத்திற்கான மாற்று என்ன, அதை சரிசெய்ய தேவையான அமைப்புகள் எப்படி இயங்க வேண்டும், ஒவ்வொரு நாட்டின் அரசுகளின் மற்றும் ஐ.நாவின் செயல்திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும், எது அத்தியாவசியம், எது உடனடியாக செய்படுத்த வேண்டியது, ஒவ்வொரு பொருள் உற்பத்திலும் எதற்கு முன்னுரிமை கொடுத்து பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என எல்லாமும் இந்த சிறு புத்தகத்தில் விளக்கமாக கூறப்பட்டு இருக்கிறது,

 

சுயமுன்னேற்ற புத்தகங்களில் உங்கள் குறிக்கோள்களையும் அதை அடைவதற்கான வழிமுறைகளையும் கால அளவையும் ஒரு நோட்டில் எழுதி ஒரு கனவு புத்தகத்தை உருவாக்க சொல்வார்கள். அதேபோல் இந்த புத்தகத்தை சுற்றுசூழல் சார்ந்த ஒரு கனவு புத்தகம் என்றும் கூறலாம். அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது.

 

இந்த புத்தகத்தினை பூவுலகின் நண்பர்கள் சிறப்பான முறையில் தயாரித்து வெளியிட்டுள்ளார்கள்.

 

19.11.2023.

திரை. 21

 Farha – Darin J. Sallam.

இரண்டாம் உலகபோரில் இனத்தின் பெயரால் ஹிட்லரின் நாசி படைகளால் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அது சார்ந்து இதுவரை நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் வெளி வந்துள்ளன. புதிது புதிதாக இன்னும் வந்துக்கொண்டும் இருக்கிறது. உலக மக்கள் அனைவரிடமும் யூதர்களுக்கு அனுதாபமும் இருக்கிறது. அந்த அனுதாபத்தினாலும் சில நாடுகளின் நலனுக்காகவும் யூதர்களுக்கென தனிநாடு(இஸ்ரேல்) ஒன்று பாலஸ்தீனர்களின் நிலத்தில் உருவாக்கப்பட்டது. அன்று முதல் பாலஸ்தீனர்கள் பெரும் துயரத்தை சந்தித்து வருகிறார்கள்.
பாலஸ்தீன மக்களின் துயரத்தின் ஒரு துளிதான் Farha திரைப்படமாகும். குவைத்தில் வாழும் ஜோர்டன் நாட்டவரான இயக்குனர் Darin J. Sallam, ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படத்தினை இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தின் கதை பாலஸ்தீன நிலத்தில் இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்ட 1948 ஆண்டில் நடக்கிறது. சொந்த நிலத்திலிருந்து பாலஸ்தீனர்கள் விரட்டப்படும் சூழலில் நகரத்து போய் படிக்க வேண்டும் என கனவு காணும் ஒரு கிராமத்து பதின்ம வயது பெண்ணின் வாழ்க்கையை சொல்வதினூடாக பாலஸ்தீனர்களின் வாழ்வு சொல்லப்படுகிறது.
நாசிகளால் குரூரமாக சொல்லப்பட்ட இனமான யூதர்கள், இப்போது பாலஸ்தீனர்களை நிலத்துக்காக மிகவும் குரூரமாக கொன்றுகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் இதை தொடர்ந்து 75 ஆண்டுகளாக செய்துக்கொண்டு இருக்கிறார்கள். அந்த தொடக்கத்தின் சிறு புள்ளியை இப்படம் நம் கண்முன் காட்சியாக கொண்டு வருகிறது.
இப்படத்தின் கதை, திரைக்கதை, அது பேசும் அரசியல், படம் உருவாக்கப்பட்டுள்ள விதம் என அனைத்தும் நேர்த்தியாக இருக்கிறது.
இந்த படத்தினை இஸ்ரேல் அரசு தடை செய்து இருக்கிறது. இதிலிருந்தே இந்த படம் பேசும் அரசியல் எவ்வளவு உண்மையாகவும் தீவிரமாகவும் இருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ளலாம். 07.11.2023.

திரை. 20

 ஈரான் படங்களை பார்க்கும்போது, ஒரு சிறிய கதையை வைத்துக்கொண்டு எப்படி இவ்வளவு சிறப்பான படங்களை எடுக்கிறார்கள் என வியப்பாக இருக்கும். சில மலையாள, மாராத்தி படங்களை பார்க்கும்போது இதே மனநிலை தோன்றும்.

தமிழில் அப்படி ஒரு சிறிய கதையை எடுத்துக்கொண்டு சிறப்பான படமாக ''கூழாங்கல்'' வெளிவந்து இருக்கிறது. தமிழ்நாட்டின் ஒரு வரண்ட கிராமத்தையும் அதில் வாழும் சில மனிதர்களையும் உண்மைக்கு மிக நெருக்கமாக திரையில் கொண்டு வந்து இருக்கிறார்கள்.
படத்தில் பாடல்கள் இல்லை, மயிர்கூச்செரியும் சண்டை காட்சிகள் இல்லை. ஆனால் உண்மையான மானுட வாழ்க்கை இருக்கிறது.
தமிழில் ஓர் உலக சினிமா என சிலப்படங்களுக்கு விளம்பரம் மட்டும் செய்வார்கள். கூழாங்கல் உண்மையான வாழ்வை சொல்லும் தமிழ் திரைப்படம். அதனாலேயே அது உலக திரைப்படமாகவும் மிளிர்கிறது. 05.11.2023.

திரை. 19

 Killers of the Flower Moon – Martin Scorsese

அமெரிக்க திரைப்பட இயக்குனர்களில் பலர் 70+ மற்றும் 80+ வயதுகளிலும் தொடந்து திரைப்படம் இயக்கிகொண்டு இருப்பதை பல ஆண்டுகளாக வியந்து பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அப்படி சினிமா சார்ந்து இயங்கவும் விருப்பம் கொள்கிறேன்.
இந்தியாவில் கடந்த வாரம் வெளியான அமெரிக்க திரைப்படம் Killers of the Flower Moon. இந்த படத்தின் இயக்குனர் (Martin Scorsese, Age-80). அத்துடன் நடிகர்(Robert De Niro, Age-80), படத்தொகுப்பாளர் (Thelma Schoonmaker, Age-83) மற்றும் இசையமைப்பாளர் (Robbie Robertson, Age-80) இவர்களைப் பார்த்து வியப்பு இன்னும் கூடுகிறது.
மார்ட்டின் ஒரு இயக்குனராக தனக்கு பிடித்த கதையை தனக்கு பிடித்த விதத்தில் சிறப்பாக இந்த படத்தை எடுத்து இருக்கிறார். இந்த கதை ஒரு துப்பறியும் கதையாக மாற வாய்ப்பு இருந்தும் அதை தெளிவாக தவிர்த்து இருக்கிறார்.
குறிப்பிட்ட திரைப்பட வகைமைக்கு நியாமாக இருக்க வேண்டும் என்றோ, திரைக்கதை தியரிகளுக்கு உட்பட வேண்டும் என்றோ, பார்வையாளர்களை மகிழ்விக்க வேண்டும் என்றோ, பார்வையாளன் சோர்வடையாமல் இருக்க படத்தின் நீளம் குறைவாக இருக்க வேண்டும் என்பதையோ கருத்தில் கொள்ளாமல் படத்தை எடுத்து பார்வையாளனை பல விதங்களிலும் சிந்திக்க தூண்டி இருக்கிறார்.
1920-பதுகளில் நடந்த தொடர் கொலைகள் குறித்து எழுதப்பட்ட இதே பெயரிலான புத்தகத்தை ஆதாரமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அமெரிக்க பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை அமெரிக்க வெள்ளையர்கள் எப்படியெல்லாம் கொலை செய்தார்கள் என்பதை ஒரு செவ்விந்திய குடும்பத்தை முன்வைத்து அன்றைய அரசியலை தெளிவாக பேசுகிறது இந்த திரைப்படம்.
செவ்விந்தியர்கள் மற்றும் வெள்ளையின மக்களின் வாழ்க்கையை ரத்துமும் சதையுமாக இப்படம் நம்முன் காட்சியாக கொண்டுவருகிறது. தோழமையும் துரோகமும் காலந்தோறும் மானிட வாழ்வை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. எனக்கு இந்த படம் மிகவும் பிடித்திருக்கிறது. வாய்ப்பு உள்ளவர்கள் திரையில் பாருங்கள் நல்ல அனுபவமாக இருக்கும். 04.11.2023.

துளி. 388

தூக்கமில்லா இரவு ஒன்றில் உன் நினைவுகளின் துணையோடு தூரத்தில் தனித்து அலையும் நிலவை வேடிக்கை பார்க்கிறேன்.

30.09.2023.

துளி. 410

நீங்கள் உங்களை புத்திசாலியாக திறமைசாலியாக எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளலாம் தவறில்லை ஆனால் எதிரே இருப்பவனை முட்டாளாக நினைப்பது புத்த...