காரைக்காலம்மையார் பாடல்கள்
12.31.2022
பதிவு.65
மனிதந்தான் கடவுளைப் படைத்தான் என்று முழுமையாக நம்புகிறேன். அதேவேளையில் கவிதை மற்றும் கதைச் சுவைக்காக உலகையே ஆண்டவந்தான் படைத்தான் என கூறும் பக்தி இலக்கியங்களையும் படிக்க விரும்புகிறேன். இதே காரணத்திற்காக சில தேர்ந்த சமய சொற்பொழிவாளர்களின் சொற்பொழிவுகளையும் ஆர்வமுடன் கேட்கிறேன்.
காரைக்காலம்மையார் பாடல்கள் என்ற இந்த புத்தகத்தில் மூத்த திருப்பதிகம் 1&2, திரு இரட்டை மணிமாலை மற்றும் அற்புதத் திருவந்தாதி என்ற நான்கு சிறுநூல்கள் அடங்கி இருக்கிறது.
மூத்த திருப்பதிகம் 1&2 இரண்டிலும் தலா பதினொரு பாடல்கள் இருக்கின்றன. இந்த பாடல்களில் எல்லாம் சிவன் நடனமாடும் இடம் என சொல்லப்படும் சுடுகாடும், சுடுகாட்டில் வாழும் பேய்களும், அவற்றின் விளையாட்டுகளும், பிணம் எரியும் நெருப்பு மற்றும் புகை இவற்றை பிண்ணனியாக வைத்து, சிவன் நடனமாடும் விதத்தையும், அவன் நடனம் ஆடும்போது அவன் உடுப்புகளும், ஆபரணங்களும் என்ன என்ன தோற்றம் தருகின்றன என்ற வர்ணனைகளும் இடம்பெறுகிறது.
பாடல்கள் முழுமையாக புரியாவிட்டாலும் உரையின் மூலம் பாடல்களின் கற்பனை புரியும்போது பிரமிப்பாக இருக்கிறது.
வெண்மதிக்கு பயந்த இருள் எல்லாம் ஒன்றாக கூடி சிவனின் கழுத்தில் மருவாக இருக்கிறதாம், சுடுகாட்டில் எரியும் நெருப்பின் பிண்ணனில் சிவன் நடனமாடுவதால் அவன் சிவப்பாக தெரிகிறானா அல்லது சிவனின் சிவந்த உடலின் செம்மைதான் தீச்சுடரின் சிவப்பாக ஒளிகிறதா என்றும், உடலின் பாதியாக இருக்கும் நிலமகள் பார்வதி, தலையில் இருக்கும் சலமகளான கங்கை இருவரில் உனக்கு யாரை பிடிக்கும் சிவனே என கேட்கிறார். இப்படியாக வியந்தும் நயந்தும் எள்ளலோடும் சிவனைப் பார்த்து கேள்விகளை எழுப்புகிறார் காரைக்காலம்மையார்.
இந்த பாடல்களுக்கு இன்னும் கொஞ்சம் விரிவான உரையும், உரைவிளக்கமும் எழுதலாம் என்றே தோன்றுகிறது. நிறைய கிளைக்கதைகள் வெறும் குறிப்புகளாகவே இருக்கிறது.
இந்த பாடல்கள் குறித்தும் புனிதவதி என்ற காரைக்காலம்மையார் குறித்தும், ஆன்மீக உலகில் பெண்களின் நிலை என்னவாக இருந்தது, அதை புனிதவதி எப்படி கடந்தார், கவிதையில் அவருடைய இடம் என்ன என்று விளக்கி ந.முருகேசபாண்டியன் ஆழமான தொகுப்புரை ஒன்றும் எழுதியுள்ளார். அவருக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.
இந்த புத்தகத்தை டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் சிறப்பாக வெளியிட்டுள்ளது. இதன் முதல் பதிப்பு ஆகஸ்ட் 2019-ல் வெளியாகியுள்ளது. 29.12.2022.
பதிவு. 64
சிப்பியின் வயிற்றில் முத்து – போதிசத்வ மைத்ரேய.
சுமார் 42 ஆண்டுகளுக்கு முன்னால் வங்கமொழியில் எழுத்தப்பட்ட நாவல் “சிப்பியின் வயிற்றில் முத்து”. இதன் ஆசிரியர் போதிசத்வ மைத்ரேய. இதை வங்கமொழியிலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்த்தவர் சு. கிருஷ்ணமூர்த்தி. நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம் மூலம் இந்நாவலின் முதல் பதிப்பு 1994 ஆண்டில் வெளியாகியுள்ளது.
ஒன்று தூத்துக்குடி மீனவர்களின் வாழ்வு அவர்களின் பிரதிநிதியாக பீட்டர். இரண்டாவதாக கர்நாடக இசை மற்றும் நாட்டியம் சார்ந்த வாழ்க்கை முறை அவர்களின் பிரதிநிதியாக ராமன், மரகதம். மூன்றாவதாக நவ நாகரிகத்தின் அடையாளமாக அந்தோனி. இவன் லண்டனில் இருந்து தன் அப்பாவின் மரணத்தை ஒட்டி சொந்த ஊர் திரும்பி இருக்கிறான். அந்தோனியும் பீட்டரும் நண்பர்கள். பீட்டருக்கு கர்நாடக இசை மற்றும் நாட்டியத்தில் ஈடுபாடு இருக்கிறது. இக்கதை மாந்தர்கள் எல்லாரும் ஒன்றோடு ஒன்றாக பிணைக்கப் பட்டுள்ளார்கள்.
இந்தியா சுந்திரம் பெற்றால் எல்லாருக்கும் சுகம் வந்துவிடும் என்று நம்பியவர்களின் பிரதிநிதியாக பெரியவர் வெங்கி கதாபாத்திரம். அன்றைய கள்ள சந்தை, சுயநலத்துக்காக அரசியலை பயன்படுத்திக் கொண்டவர்கள் என எல்லோரையும் இந்நாவல் கவனப்படுத்துகிறது. பீட்டருக்கு இந்த சமூகத்தை மாற்ற வேண்டும் என்ற அவ இருக்கிறது. அந்தோணி அதற்காக இங்கையே இருக்க வேண்டுமென விரும்புகிறான். அந்தோணிக்கு பாவப்பட்ட மக்களின் வாழ்க்கையை நெருக்கமாக பார்த்தப்பின் அவர்கள்மீது பரிவு ஏற்படுவதற்கு பதிலாக ஒவ்வாமையே ஏற்படுகிறது. பீட்டரின் ஆசை நிறைவேறியதா இல்லையா என்பது நீண்ட கதையாக இருக்கிறது.
நாவலாசிரியர் வங்காளியாக இருந்த போதிலும் தமிழர்களின் வாழ்வை மிக நுட்பமாக கவனித்து எழுதியுள்ளார். ஆண்டாளின் பாசுரம், திருஞ்சான சம்பந்தரின் பாடல்கள், பாரதியின் கவிதைகள், திருநெல்வேலி, சிதம்பரம், தூத்துக்குடி, சென்னை ஆகிய நகரங்களின் ஆன்மீக மற்றும் அரசியல் சிறப்புகள் என அனைத்தையும் பதிவு செய்துள்ளார். பரதவர் என்ற சொல்லின் மூலம் எது என்றெல்லாம் கூட ஆராய்ந்துள்ளார்.
மீன்பிடிக்க கடலுக்குள் செல்லும் மீனவர்களின் பழக்க வழக்கங்களையும் கர்னாடக இசை மற்றும் பரத நாட்டியம் சார்ந்த நுட்பங்களையும் மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளார். மீன் பிடிப்பதையும் சங்கு எடுப்பதையும் இசைப்பதையும் நாட்டியம் ஆடுவதையும் நேர்த்தியான சொற்களால் சிறைப்பிடித்துள்ளார்.
நேரடியாக தமிழில் எழுதப்பட்டது போலவே சு.கிருஷ்ணமூர்த்தி சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் உரையை கேட்டப்போது இந்த நாவல் பற்றி தெரிந்துக்கொண்டேன். இந்த நாவல் குறித்து அவர் பேசியதிலிருந்து இந்த நாவலை படிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. அவருக்கு என் பாராட்டுகளும் நன்றிகளும்.
இந்த நாவல் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த நண்பர் குமாருக்கு என் மனமார்ந்த நன்றிகள். 11.12.2022.
திரை. 13
Fall
இரண்டு ஆயிரம் அடி உயரமுள்ள ரேடியோ டவரில் இரண்டு இளம் பெண்கள் ஏறி அதன் உச்சிக்கு செல்கிறார்கள். அங்கிருந்து இறந்துபோன ஒருவனின் சாம்பலை காற்றிலு தூவுகிறார்கள். உச்சியிலிருந்து கீழே இறங்க முயலும்போது ஏறி சென்ற ஏணிகள் கழன்று கீழே விழுகிறது. அந்த பெண்கள் தரையிரங்கி வந்தார்களா இல்லையா என்பதுதான் இப்படத்தின் மீதி கதையாகும்.
இரண்டாயிரம் அடி உயரத்தில் இரண்டு பெண்களின் உணர்வு போராட்டத்தையும், உயிர் வாழ்தலில் விருப்பத்தையும், உயிரை குடிக்க சுற்றி வரும் கழுகையும், மிக சிறப்பாக காட்சிப் படுத்தியுள்ளார்கள். தகுதி உள்ளேதே தப்பிப்பிழைக்கும் என்ற டார்வினிய கோட்பாடு இங்கும் செயல்படுகிறது. அவர்கள் தப்பிப் பிழைத்தார்களா இல்லையா என்பதை படம் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள். 27.11.2022.
துளி. 354
எத்தனை எத்தனை இடர் வந்தபோதிலும் இலக்கை அடையாமல் ஓயமாட்டார்கள் இலக்கில் உறுதியாக இருப்பவர்கள். 26.12.2022.
துளி. 353
ஒடுக்கு முறை இருக்கும் வரை போராட்டம் இருக்கும்,
போராட்டம் இருக்கும் வரை
போராளிகள் இருப்பார்கள்,
துளி. 351
போலிகள்.
நேசிப்பதைக் காட்டிலும்
நேசிப்பதாக காட்டிக்கொள்ள பிடிக்கிறது பலருக்கு... 14.12.2022.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பதிவு. 97 - புதுப்புனல்.
புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...
-
படத்தொகுப்பு: கலையும் அழகியலும் – ஜீவா பொன்னுசாமி திரைப்படம் எவ்வாறு உருவாகிறது அல்லது ஒரு திரைப்படத்தை உருவாக்க என்னவெல்லாம் தெரிந்து இரு...
-
நீங்கள் உங்களை புத்திசாலியாக திறமைசாலியாக எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளலாம் தவறில்லை ஆனால் எதிரே இருப்பவனை முட்டாளாக நினைப்பது புத்த...
-
நடிகையின் பெயரை வைத்துள்ள பெண்கள் எல்லோரும் அந்த நடிகையின் சாயலை ஒத்திருப்பதில்லை. ஆனால் வெகுசில பெண்கள் மட்டும் அந்த நடிகையின் சாயலோடு இர...




