8.31.2025

துளி. 410

நீங்கள் உங்களை

புத்திசாலியாக

திறமைசாலியாக

எப்படி வேண்டுமானாலும்

நினைத்துக்கொள்ளலாம்

தவறில்லை

ஆனால்

எதிரே இருப்பவனை

முட்டாளாக நினைப்பது

புத்திசாலித்தனமில்லை.

31.08.2025

துளி. 409

ஒருபோதும் யாசித்து

பெறக்கூடாத ஒன்று

அன்பு.

28.08.2025

பதிவு. 93

 வாழ்வை நிறுத்துதல் – அதிஷா

எனக்கு தியானம் கற்றுக்கொள்ள விருப்பம். அதனால் சென்னை விவேகானந்தர் இல்லத்தில் ஒரு நடைப்பெறும் தியான வகுப்பில் ஒருமுறை கலந்துக்கொண்டு இருக்கிறேன். பிறகு மனவளக்கலை மன்றத்தில் நடைபெறும் வகுப்புக்கு சிலமுறை சென்று இருக்கிறேன். ஒருமுறை நித்தியானந்தாவின் கிளை ஒன்றிலும் இரண்டு நாள் தியான வகுப்பில் கலந்து கொண்டு இருக்கிறேன். ஆனால் எதையும் முழுமையாக பின்பற்றி தியானம் மட்டும் செய்ததே இல்லை. ஆனாலும் தியானம் குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் புத்தகம் படிப்பதும் உரைகள் கேட்பதும் தொடந்துக்கொண்டேதான் இருக்கிறது.
சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு எழுத்தாளர் அதிஷா விபாசனா தியான முகாமுக்கு சென்று வந்த அனுபவத்தை முகனூலில் எழுத தொடங்கினார். அப்பொழுது சில பகுதிகள் படித்தேன். பிறகு தொடர முடியாமல் விட்டுவிட்டேன். சில மாதங்களுக்கு பிறகு அந்த பகுதிகளை படிக்க வேண்டும் என விரும்பினேன். எழுத்தாளர் அதிஷாவை முகனூல் தொடர்பு கொண்டு அந்த இணைப்புகள் கிடைக்குமா என கேட்டேன். அவரும் உடனே அனுப்பி வைத்தார். அதை கொஞ்சம் கொஞ்சமாக படித்து முடித்தேன்.
விபாசன தியானம் எப்போது யாரால் கண்டுபிடிக்க பிடிக்கப்பட்டது, அது எப்படியெல்லாம் உருமாறி வளர்ந்து வந்துள்ளது, இந்தியாவில் இந்த முகாம் எங்கெல்லாம் இருக்கிறது, தியான முகாமில் தியானம் எவ்வாறு சொல்லி தரப்படுகிறது, அதன் தினசரி நடவடிக்கைகள் என்ன என்ன, அதை பின்பற்றும்போது உடலிலும் மனதிலும் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன என்ன என்பதை மிகவும் சுவராசியாமாகவும் நகைச்சுவை உணர்வோடும் அதிஷா எழுதியுள்ளார்.
பதினெட்டு பகுதிகளாக எழுதப்பட்டு இருக்கும் இந்த தியான அனுபவ பதிவை படிப்பதே ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கிறது. இது புத்தகமாக வரும் நாளுக்காக காத்திருக்கிறேன்.
இந்த பதிவுகள் ஒருவகையில் நம் அனுபவங்களை எப்படி எழுத்தாக மாற்ற வேண்டும் என்பதற்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. அதிஷாவின் எழுத்தில் எளிமையும் நகைச்சுவையும் தத்துவார்த்த சிந்தனைகளும் மிளிர்ந்தபடியே இருக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும்.

18.08.2025

துளி. 408

அதிர்ஷ்டத்தையும்

அற்புதத்தையும்

நம்பாதவன் அவன்

ஆனால் அவனையும்

இதையெல்லாம் எதிர்பார்க்க

வைத்துவிட்டது காலம்.

10.08.2025

7.31.2025

திரை.24 / Santosh



 

Santosh / Sandhya Suri / 2024 / Hindi
இந்திய ஒன்றிய அரசால் தடைசெய்யப்பட்டுள்ள இந்தி மொழி திரைப்படம் சந்தோஷ். இதனை இயக்கியவர் சந்தியா சுரி. இவர் இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் இதற்கு முன்பு ஒரு குறும்படமும் இரண்டு ஆவணப்படமும் எடுத்து இருக்கிறார். இந்த திரைப்படம் அவரின் முதல் முழுநீள திரைப்படமாகும். உலக அளவில் பல விருதுகளை பெற்றுள்ள திரைப்படத்தை இந்த அரசு தடை செய்துள்ளது. ஏன் தடை அதற்கான காரணம் என்ன..?
“சந்தோஷ்” திரைப்படத்தின் கதை சமகாலத்தில் நடக்கிறது. கதை நிகழும் களம் இந்திய ஒன்றியத்தியின் வடபகுதி. முஸ்லீம் மக்கள் வாழும் பகுதியில் நடந்த கலவரத்தில் ஒரு காவலர் கல்லடிபட்டு இறந்து போகிறார். அந்த காவலர் இந்து மதத்தை சார்ந்தவர். அவரின் மனைவி சைனி சந்தோஷ் கருணை அடிப்படையில் காவலராக பணியில் சேருகிறார்.
காவலர் சைனிக்கு காவல்துறையின் கோர முகம் கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகமாகிறது. காவலர் லஞ்சம் வாங்கிக்கொண்டு ஒருபக்க சார்பாக நடந்து கொள்வது, உயர் அதிகாரி காவலர்களை சொந்து வேலைகளுக்கு பயன்படுத்திக்கொள்வது, தலித் மக்கள் புகார் கொடுக்க வந்தால் அவர்களை ஏலனமாக நடத்துவது, ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக செயல்படுவது என அவர் பார்க்கும் காட்சிகள் அவரை நிலையகுலைய வைக்கிறது. அதிலிருந்து அவர் எப்படி வெளிவருகிறார்..? அல்லது அதை அவர் எப்படி உள்வாங்கி கொள்கிறார் என்பதே இப்படத்தின் முடிவாகும்.
இந்திய ஒன்றியத்தின் காவல்துறையின் செயல்பாடு எப்படி இருக்கிறது. அது தலித்துகளையும் முஸ்லீம்களையும் எப்படி நடத்துகிறது என்பதை உண்மைக்கு மிகவும் நெருக்கமாக சொல்லியிருக்கிறது இத்திரைப்படம்.
இந்திய ஒன்றியத்தில் சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் அதிகாரத்தின் பெயராலும் நிகழ்த்தப்படும் கொடுமைகளின் ஒரு துளியையே இப்படம் காட்சிப்படுத்தி இருக்கிறது.
பலவகையான பிம்பங்களால் கட்டமைக்கப்பட்ட இந்த அரசுக்கு உண்மையை எதிர்கொள்வது சாத்தியமில்லைதான். அதனால்தான் இப்படத்துக்கு தடை விதிக்கிறது.

29.07.2025


7.26.2025

பதிவு.92



இரண்டு நாவல்கள்

சில படைப்பாளிகளின் பெயரை கேள்விபட்ட உடனே அவர்களுடைய படைப்பை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும் சிலநேரங்களில் அப்படி நடக்காது. மலையாள எழுத்தாளர் கே.ஆர்.மீராவின் படைப்புகள் குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பே கேள்வி பட்டிருந்தாலும் அவருடைய எந்த படைப்பையும் சென்ற வாரம் வரை படித்ததில்லை.
அண்மையில் இயக்குனர் ராம் “பரந்து போ” பட சம்மந்தமாக திரை விமர்சகர் பரத்வாஜ் ரங்கனுக்கு கொடுத்த நேர்காணலில் கே.ஆர்.மீராவின் படைப்புகள் குறித்தும், குறிப்பாக யூதாஸின் நற்செய்தி நாவல் குறித்தும் பேசியிருந்தார். அந்த உரையை கேட்டபின் மீராவின் படைப்புகளை உடனே படிக்க வேண்டும் என்ற ஆர்வம் பெருகியது.
நண்பர் பால்ராஜிடம் கே.ஆர்.மீராவின் ‘’அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்’’ என்ற நாவல் இருந்தது. அதை வாங்கி உடனே படிக்க ஆரம்பித்தேன்.
திருமணமாகி குழந்தை இல்லாமல் வாழும் பெண்ணை தேடி அவளது முன்னால் காதலன் வருகிறான். இப்படி ஆரம்பித்த கதை அந்த பெண் யார், அவளுக்கு சிறுவயதில் நடந்த துர் சம்பவம் அதனால் அவள் உடலும் மனமும் படும் இன்னல்கள், அவள் காதல் வயப்பட்ட தருணம், அந்த காதலில் இருந்து விலகி வந்த தருணம், இன்று அவளை தேடி வந்திருக்கும் முன்னால் காதலனின் வாழ்க்கை முறை, அவனது குடும்பமும் சமூகமும் அவனை பார்க்கும் விதம் என விளக்கியபடியே செல்கிறது. முடிவில் அந்த முன்னால் காதலர்களின் வாழ்வு என்னவானது என்பதே கதையின் முடிவாகும்.
எளிய மனிதர்களின் காதல் கதையாக இருக்கும் நாவலில் குடும்ப அமைப்புக்குள் இருக்கும் வன்முறையை துல்லியமாக படம் பிடித்து காட்டுகிறார். இதுவரையிலான கதை சரடு எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. அடுத்து காதலர்களின் முடிவு என்ன என்பதில் எனக்கு குழப்பம் இருக்கிறது. அதற்காகவே அந்த நாவலை மறுபடியும் ஒருமுறை படிக்க வேண்டும் என தீர்மானித்துள்ளேன்.
இந்த நாவலை சிற்பி பாலசுப்ரமணியம் சிறப்பாக மொழிப்பெயர்த்துள்ளார்.
அடுத்ததாக யூதாஸின் நற்செய்தி நாவலை படிக்க தொடங்கினேன். அந்த நாவல் என்னை பெரிதும் கவர்ந்துள்ளது. இயக்குனர் ராம் இந்த நாவலை தனக்கு பிடித்த நாவல் என்று சொன்னதன் காரணமும் புரிகிறது. இந்த நாவலும் ஒரு காதல் கதையாக இருக்கிறது. ஆனால் அதே சமயம் தீவிரமான அரசியல் கதையாகவும் இருக்கிறது.
இந்திய ஒன்றியத்தில் 1975 ஆண்டு கொண்டு வரப்பட்ட அவசரநிலை காலத்தில் அரசியல் போராளிகளை காவல்துறை எப்படி வேட்டையாடி கொன்று குவித்தது என்பதற்கு ஆதாரமாக காவல்துறையின் சித்தரவதை முகாம் ஒன்றை மையமாக கொண்டு இக்கதையின் நாயகனும் நாயகியும் உருவாக்கப்படுள்ளார்கள்.
நாயகியின் அப்பா காவல்துறை அதிகாரி, நாயகியின் காதலன் அந்த சித்தரவதை முகாமில் வதைப்பட்டவன் இவர்கள் இருவருக்கும் எப்படி காதல் உருவாகியது. அவர்கள் காதல் சேர்ந்ததா இல்லையா என்பது கதையின் முடிவாகும்.
இந்த நாவலில் பிரேமா என்ற பெண்ணின் காதல் கதை அவளுடைய பதினைந்தாவது வயதில் தொடங்கி முப்பதந்தாவது வயதுவரை சொல்லப்படுகிறது. இதில் முன்னும் பின்னுமாக அவசரநிலை காலத்தில் காவல்துறையினர் அரசியல் போராளிகள் மீது நிகழ்த்திய வன்கொடுமைகள், அந்த கொடுமைய நிகழ்த்திய காவலர்கள் அதற்கு சொன்ன காரணங்கள், அரசியல் போராளிகளின் குடும்ப துயரங்கள் என அனைத்தையும் சுமார் 112 பக்கங்களில் ஆசிரியர் சிறப்பாக சொல்லிவிடுகிறார்.

பிரேமாவின் காதல் கதையை சொல்லும் அதே வேளையில் முன்னும் பின்னுமாக சென்று யூதாஸின் அரசியல் கதையையும் அதனால் அவன் அனுபவித்த வன்கொடுமைகளையும் சொல்கிறார். வன்கொடுமை நிகழ்த்திய காவலர்களின் வாழ்க்கை கதையும், அவர்கள் பக்க ஞாயமும் சொல்லப்படுகிறது. ஒருவகையில் உணர்வுபூர்வமான காதல் கதையாகவும் மற்றொருவகையில் வலிமிகுந்த அரசியல் போராளியின் கதையாகவும் இன்னொருவகையில் குடும்ப அமைப்பின் வன்முறையை சொல்லும் கதையாகவும் இந்தநாவல் விரிகிறது.
ஒடுக்குமுறை இருக்கும்வரை போராட்டமும் போராட்டம் இருக்கும்வரை போராளியும் இருப்பான் என்பதை சொல்லும் இதே நாவல் தப்பு செய்தவன் தண்டணை பெறுவான் என்ற விதிவாதத்தையும் வலியுறுத்துகிறது. வாழ்க்கை என்பது அப்படி இருப்பது இல்லை. விதிவிலக்குகள் உண்டு.
போராட்டம் இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளும் என்னால் தண்டனை கிடைக்கும் என்பதை ஏற்க முடியவில்லை. எனினும் எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதையை எடுத்துக்கொண்டு பல்வேறு பார்வை கோணத்தில் இந்த கதையை சொல்லியுள்ள விதம் எனக்கு பிடித்திருக்கிறது.
இந்த நாவலை மோ.செந்தில்குமார் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்.
இந்த இரண்டு நாவல்களையும் எதிர் வெளியீடு பதிப்பகம் சிறப்பான முறையில் வெளியிட்டுள்ளது.

21.07.2025.




துளி.407

எல்லாம் தெரியும்

என்ற புள்ளியில்தான்

ஆரம்பிக்கிறது

அறியாமை.

20.07.2025.

துளி.406

 நீ குற்றவாளி

என தீர்ப்பு எழுதிவிட்டு

எல்லா புலன்களையும் மூடிக்கொண்டவனுக்கு

எப்படி புரியவைப்பேன்.

16.07.2025.

பதிவு.91

 பி.எஸ்.விநோத்ராஜின் கூழாங்கல் திரைப்பட அனுபவங்கள் – அரவிந்த் சிவா.

தமிழ் இலக்கியத்தில் தன் வரலாறுகள் நிறைய இருக்கிறது. துறை சார்ந்த அனுப பதிவுகளும் நிறைய இருக்கிறது. ஆனாலும் இன்னும் எழுதாத அனுபவங்கள் அதைவிட அதிகமாக இருக்கிறது. ஒருமுறை நண்பர் சிவா அடுக்குமாடி குடியிருப்பு வாழ்வு சார்ந்து எதாவது நாவல் இருக்கிறதா என கேட்டார். அடுக்குமாடி குடியிருப்பை மையபடுத்திய படைப்பு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஒருவேளை இருந்தாலும் அது பெரும் கவனத்தை பெறவில்லை.
கேரளாவில் இருந்து காவலர், பாலியல் தொழிலாளி, திருடன், கன்னியாஸ்திரி, பழங்குடி பெண் என பலரின் வாழ்க்கை அனுபவங்கள் புத்தகங்களாக வந்துள்ளது. அதோடு ஒப்பிட நம்மிடம் குறைவாகவே இருக்கிறது.
தமிழ்திரைத்துறை சார்ந்து நிறைய பேர் தங்கள் வாழ்க்கை அனுபவத்தை எழுதியுள்ளார்கள். குறிப்பாக உதவி இயக்குனர் வாழ்வு சார்ந்து நவீன், திருவாரூர் பாபு ஆகியோர் எழுதியுள்ளனர். அந்த வரிசையில் பி.எஸ்.விநோத்ராஜின் கூழாங்கல் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த அரவிந்த் சிவா தன் அனுபவங்களை இந்த புத்தகத்தில் சிறப்பாக பதிவு செய்துள்ளார்.
உதவி இயக்குனருக்கும் இயக்குனருக்குமான உறவு, படபிடிப்பு தளத்தில் ஏற்படும் உடல் மற்றும் மன நெருக்கடிகள், மகிழ்ச்சிகள், வாழ்க்கை பாடங்கள், எதிர்காலத்தில் இயக்க போகும் படத்துக்கு தேவையான திரைப்பாடங்கள், மனிதர்களில் இத்தனை விதங்களா என வியக்க வைக்கும் சம்பவங்கள், பகுத்தறிவு கொண்டு உடனே விளங்கி கொள்ளமுடியாத ஆச்சரியங்கள், நாம் உண்மையாக உழைக்கும்போது அதற்கு உதவ வரும் மனிதர்கள், உழைப்பிற்கு கிடைத்த பாராட்டுகள் என அனைத்தையும் மிகவும் சுவராசியமாக எழுதியுள்ளார் அரவிந்த் சிவா. அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
அரவிந்த் சிவா தன்னைப்பற்றியும், இயக்குனர் விநோத்ராஜுக்கும் அவருக்குமான உறவு குறித்தும், திரைப்பட ஆர்வம் ஏற்பட்ட தொடக்கபுள்ளி, அதை அவர் வளர்த்து எடுத்த விதம் இவைகுறித்தும் இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதியிருக்கலாம்.
இந்த புத்தகத்தினை நாடட்றோர் பதிப்பகம் (முதல் பதிப்பு - டிசம்பர் 2023) சிறப்பான முறையில் வெளியிட்டுள்ளது.

16.07.2025.

துளி.405

எத்தனமுறை ஏமாந்தாலும்

மறுபடியும் மறுபடியும்

நம்பத்தான் வேண்டியிருக்கிறது

இந்த மனிதர்களை.

05.07.2025.

6.30.2025

பதிவு - 90

நெட்டுயிர்ப்பு - ஹேமி கிருஷ்.
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு காலச்சுவடு இதழில் ஹேமி கிருஷின் “கை” சிறுகதையை படித்தேன். கதை எனக்கு மிகவும் பிடித்துபோனது. அந்த சிறுகதையை சில நண்பர்களுக்கு கூட பரிந்துரை செய்தேன். அவர்களுக்கும் அந்த கதையை படித்துவிட்டு பிடித்து இருக்கிறது என்றார்கள்.
அதன்பின் அந்த ஆசிரியரின் மற்ற கதைகளை படிக்க வேண்டும் என்ற ஆவலில் இணையத்தில் தேடும்போது “நெட்டுயிர்ப்பு” என்ற சிறுகதை தொகுப்பை கனலி பதிப்பகம் வெளியிட்டுள்ளது தெரியவந்தது. அந்த புத்தகத்தை தேடிப்போனால் அது விற்பனையில் இல்லை. சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கலாம் என தேடிப்பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை.
எதிர்பாராத விதமாக கலப்பை பதிப்பகத்திற்கு ஒரு புத்தகம் வாங்க சென்றபோது இந்த புத்தகம் பற்றி விசாரித்தேன். உடனே தோழர் ராமசாமி தேடிக்கண்டு பிடித்து கொடுத்தார். நீண்ட நாட்களாக தேடிய புத்தகம் கிடைத்த மகிழ்ச்சியில் உடனே படிக்க தொடங்கினேன். ஆனால் உடனே படித்து முடிக்காமல் ஒவ்வொரு கதை படித்தபின்புமும் அது பற்றி மனதில் மறுபடியும் ஓட்டிப் பார்த்து, பார்த்து பத்து கதைகளையும் சுமார் இருபது நாட்களில் படித்து முடித்தேன்.
அம்ருதா பதிப்பகம் பிரபலமான சிறுகதை ஆசிரியர்களின் பத்து சிறுகதைகளை தேர்ந்தெடுத்து “முத்துக்கள் பத்து” என்ற வரிசையில் பல புத்தகங்கள் கொண்டுவந்துள்ளார்கள். அதுப்போல் ஹேமி கிருஷின் “நெட்டுயிர்ப்பு” சிறுகதை தொகுப்பை முத்துக்கள் பத்து என்றே அழைக்கலாம். இதிலுள்ள பத்து சிறுகதைகளும் சிறப்பாக உள்ளது. தமிழின் முக்கியமான சிறுகதை தொகுப்புகளில் இதுவும் என்று துணிந்து சொல்லலாம்.
நாடகம், சினிமா என அலைந்து வாழ்வை தொலைத்தவன், ஒரு மளிகை கடைக்காரனால் பலாத்காரம் செய்யப்பட்ட தெருவோர நாடோடி பெண், கடவுள் நம்பிக்கை இல்லாதுபோனதால் திருமண வாழ்வை இழந்த பெண், அக்காவின் திருமண வாழ்க்கைக்காக தன் வாழ்வை தொலைத்த பெண், சிறுவயதில் தாயை இழந்து தந்தையின் கொடுமையால் வாழ்வை தொலைத்த மகன் என இப்படியான சில மனிதர்களின் வாழ்வு சொல்லப்படுகிறது.
மேலும், தவறான நபரை காதலித்ததால் வாழ்வை தொலைத்த பெண், தன் வாழ்வு போல் மகளின் வாழ்வு இருந்துவிட கூடாது என்பதற்காக கணவனை விட்டு விலகும் தாய், தன் குடும்பத்தின் நலனுக்காக இரவு பகல் பாராது அலைந்து பணம் தேடும் குடும்ப தலைவன், குழைந்தைகளோடு குழந்தையாய் வளந்த சிறு பூனையின் வாழ்வு, நேர்த்தி கடனை அடைக்க அல்லல்படும் ஒரு அபலை பெண்ணின் வாழ்வு என பலவிதமான மனித உணர்வுகளை ஹேமி கிருஷ் மிக அருமையாக பதிவு செய்துள்ளார்.
நம்பிக்கையும் அவநம்பிக்கையும் மாறி மாறி மனிதனை இயக்குகிறது. அதைப்போலவே இந்த கதைகளில் சிலரின் தோல்வியையும் சிலரின் வெற்றியையும் நாம் காண முடிகிறது. ஆசிரியர் எந்த உணர்வை எழுதினாலும் மிக சுருக்கமாகவும் அதேசமயம் சொல்ல வந்ததை மிக தெளிவாகவும் சொல்லிவிடுகிறார். ஹேமி கிருஷின் எழுத்து மிகவும் சுவராசியமாக இருக்கிறது.

இந்த புத்தகத்தை கனலி பதிப்பகம் (முதல் பதிப்பு 2022) சிறப்பான அட்டை படத்துடன் வெளியிட்டுள்ளது.

- 24.06.2025.



 

5.31.2025

பதிவு - 89

 படத்தொகுப்பு: கலையும் அழகியலும் – ஜீவா பொன்னுசாமி

திரைப்படம் எவ்வாறு உருவாகிறது அல்லது ஒரு திரைப்படத்தை உருவாக்க என்னவெல்லாம் தெரிந்து இருக்க வேண்டும் என்று கேள்வியை எழுப்பினால் பலவகையான பதில்கள் கிடைக்கும். முறையாக திரைப்பட பள்ளியில் படிப்பது, திரைப்படங்களை பாடமாக பார்ப்பது, திரை ஆளுமைகளின் அனுபவங்களை கேட்பது அல்லது படிப்பது அல்லது அவர்களின் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்வது என சொல்லிக்கொண்டே போகலாம்.
திரைப்பட உருவாக்கம் சார்ந்த புத்தகங்களை படிப்பதன் வாயிலாகவும் கற்றுக்கொள்ளலாம். அதற்கு ஆங்கிலத்தில் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றில் சில முக்கியமான புத்தகங்கள் தமிழில் நேரடியாகவும் மறைமுகமாக மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்து இருக்கிறது. குறிப்பாக துறை சார்ந்து திரைக்கதை. இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என வகைமைகளில் புத்தகங்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில் படத்தொகுப்பு குறித்து வெளியாகியுள்ள ஜீவா பொன்னுசாமியின் “படத்தொகுப்பு: கலையும் அழகியலும்” என்ற இந்த புத்தகம் மிகவும் முக்கியமானதாகும்.
ஜீவா பொன்னுசாமி இந்த புத்தகத்தில் படத்தொகுப்பின் வரலாற்றில் ஆரம்பித்து படத்தொகுப்புன் நவீன உத்திகள் வரையிலும் பயணிக்கிறார். அதேசமயம் திரைத்துறையின் அடைப்படைகளை மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கி எழுதியுள்ளார்.
இந்த புத்தகம் இருபது பகுதிகளாக பிரிக்கப்பட்டு, அதன் உள்ளே இன்னும் சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, மிகவும் சுவராசியாமான ஒரு கதைச்சொல்லிபோல் படத்தொகுப்பை அறிமுகம் செய்து, அதன் தொழிற்நுட்ப அம்சங்களை விளக்கி, படத்தொகுப்பின் விதிகள், காட்சிகளின் படத்தொகுப்பு, காட்சி கோர்வைகளின் படத்தொகுப்பு, அதன் ஐந்து கூறுகள், காட்சி துணுக்குகளின் தொடர்ச்சி என மிக லாவகமாக விளக்கி சொல்லிக்கொண்டு செல்கிறார்.
அத்துடன் பாடல் காட்சிகளில் சண்டை காட்சிகளில் படத்தொகுப்பு எப்படி செய்ய வேண்டும், காட்சியை படத்தொகுப்பு ஒலியை எப்படி ஒலிப்படத்தொகுப்பு செய்ய வேண்டும், எந்த வகையான படத்துக்கு என்ன வகையான காட்சி துணுக்குகளை தேர்வு செய்ய வேண்டும் எனவும் விளக்குகிறார்.
இந்த புத்தகத்தில் மூன்று படங்களின் முதல் ஐந்து நிமிடங்களின் காட்சிகள் எப்படி படத்தொகுப்பு செய்யப்பட்டு இருக்கிறது, அது ஏன் அப்படி செய்யப்பட்டு இருக்கிறது என்பதை விளக்கியுள்ள விதம் அருமையாக இருக்கிறது.
திரைப்பட கல்வி கற்கும் மாணவர்களுக்கு இது பாடப்புத்தகமாக வைக்கதகுந்த புத்தகமாகும்.
இந்த புத்தகத்தினை நிழல் பதிப்பகம் சிறப்பாக வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 2018-ல் வெளியாகியுள்ளது.
இந்த புத்தகத்தை எழுதியவருக்கும் வெளியிட்டவருக்கும் என் மனமர்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும்…

31.05.2025






பதிவு - 88

 இந்திய சினிமா சில தரிசனங்கள் – செந்தூரம் ஜெகதீஷ்.

இந்த புத்தகத்திற்கு இந்திய சினிமா என்று பெயர் இருந்தாலும் இதில் பழைய இந்தி சினிமாக்கள் குறித்தே அதிகம் எழுதுப்பட்டுள்ளது.
பழம்பெரும் இந்தி இயக்குனர்கள் & நடிகர்கள்- ராஜ்கபூர், தேவ் ஆனந்த், குருதத், மனோஜ் குமார், சசி கபூர்… மேலும்
நடிகைகள் - வகிதா ரஹ்மான், நர்கீஸ், டிம்பிள் கபாடியா… மேலும்
இசையமைப்பாளர்கள் - எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன், சலீல் செளத்ரி, ராம் லட்சுமண்.. மேலும்
பாடலாசிரியர்கள் - குல்சார், ஜாவேட் அக்தர், கைஃபி ஆஸ்மி.. மேலும்
பாடகர்கள் - முகமது ரஃபி, முகேஷ், கிஷோர் குமார், லதா மங்கேஷ்கர்.. மேலும்
மேற்கண்ட பட்டியலில் இருப்போரும் அவர்களது சமகாலத்தவர்கள் குறித்தும் மிகவும் சுவராசியமாக எழுதியுள்ளார். ஒவ்வொரு ஆளுமைகளின் சினிமா வாழ்க்கை மட்டும் இல்லாமல் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறிப்புகளும் இதில் அடங்கியுள்ளது.
இந்தி பாடல்கள் குறித்தும் ஒரு பகுதி எழுதியுள்ளார். பாடல் வரிகளில் மிளிரும் கருத்துகள் குறித்து மிகவும் சிறப்பாக பதிவு செய்துள்ளார். பாடகர்களின் குரல் நயம் குறித்தும் விதந்து எழுதியுள்ளார்.
அண்மைகால இந்தி படங்களான பத்லாபூர், உட்தா பஞ்சாப் குறித்தும் தன் கருத்துகளை பதிவு செய்துள்ளார்.
செந்தூரம் ஜெகதீஷ் தன் இளமை காலம் தொட்டே இந்தி சினிமா பார்ப்பதும், இந்தி பாடல்களை கேக்கவும் செய்திருப்பதினால் இந்தி சினிமா உலகம் குறித்த நிறைய தகவல்களை இந்த புத்தகத்தில் தூவி இருக்கிறார் என்றால் அது மிகையாகது.
இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள சில பாடல்களை கேட்டேன். புது அனுபவமாக இருந்தது. இதில் குறிப்பிட்டுள்ள இந்தி படங்களையும் பார்க்க திட்டமிட்டுள்ளேன். பழைய இந்தி சினிமாவை அறிந்துகொள்ள இந்த புத்தகம் ஒரு வழிகாட்டி என்றே சொல்லலாம். இந்த புத்தக வரிசை தொடரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ஆசிரியருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்.
இந்த புத்தகத்தை செந்தூரம் பதிப்பம் (முதல் பதிப்பு 2019) வெளியிட்டுள்ளது.
- 20.05.2025

All reactio

4.29.2025

துளி - 404

இருளில் இருந்து ஒளிக்கு,

பள்ளத்தில் இருந்து மேட்டுக்கு,

அவநம்பிக்கையில் இருந்து நம்பிக்கைக்கு,

துன்பத்தில் இருந்து இன்பத்திற்கு

சிலருக்கு நேர்முகமாகவும்

சிலருக்கு எதிர்முகமாகவும்

தொடர்கிறது இந்த பயணம்.

11.04.2025.

துளி - 403

கண்ணாமூச்சு

உனது அலைபேசியில்
எனது பெயரும்
எனது அலைபேசியில்
உனது பெயரும்
பதிவு செய்யப்பட்டிருக்கிறது
நீண்ட காலத்தித்கு முன்பே
யார் முதலில் அழைப்பது
தயக்கம் இருக்கிறது
இருவரிடமும்
ஆனால்
எதிர்பாரா சந்திப்புகளில்
உரிமையோடு கேட்டுகொள்கிறோம்
நீ ஏன் அழைக்கவில்லை.
காலத்தை நடுவில் வைத்து
கண்ணாமூச்சு விளையாடுகிறோம்.

-10.04.2025.

3.31.2025

துளி. 402

எல்லாவற்றையும்

சரியாக செய்ய நினைத்து

பிழைகளுடனே செய்து முடிக்கிறேன்.

23.03.2025

துளி. 401

நீயும் நானும்

வேறுவேறு திசைகளிலிருந்து

முழு நிலவை காண்கிறோம்

முடிவில்லா கனவுகளோடு. 

13.02.2025

சிறுகதை – 3 (வரண்)

 

                                   வரண்

                                             சா.ரு.மணிவில்லன்.

’’என்ன நெனைச்சு கிட்டு இருக்க’’

’’இப்டி கேட்டா நா என்ன சொல்ல’’

‘’இல்லடா வயசு ஆயிகிட்டே போகுதுல்ல, கல்யாணம் பண்ண வேணாமா’’

‘’பண்ணனும்தான்.. பொண்ணு பாத்துகிட்டு தானே இருக்கு’’

‘’எவ்வளவு நாளைக்கு பாத்துகிட்டே இருப்ப..சட்டுபுட்டு பாத்து முடிக்க வேணாமா’’

’’முடிச்சுடலாம் முடிச்சுடலாம்’’

‘’ஒரு தடவ திருமணஞ்சேரிக்கு போய்ட்டு வாடா’’

’’இல்லண்ணே அது வேணாம்..’’

’’ஏன்..என்ன பிரச்சன’’

’’பிரச்சன ஒண்ணுமில்ல கல்யாணத்துக்கு அப்புறம் வேணும்னா போய்ட்டு வரேன்’’

’’கல்யாணம் ஆக லேட்டாகுதுன்னுதானே இப்போ போய்ட்டு வாடாங்கறேன்,, அப்புறம் போறங்கற .. நீ சொல்லறத கேக்கமாட்டே ஒன்ன நாலு வருசத்துக்கு முன்ன அந்த கம்பெனி வேலைல இருக்கப்பவே கல்யாணம் பண்ணிகடானு சொன்னேன்.. .எம் பேச்ச கேட்டியா’’

’’என்ன பண்ண அப்ப வீடு கட்டுன கடன் இருந்தது, பாப்பாவுக்கும் கல்யாணம் ஆகல..’’

’’பொல்லாத கடன் வீடுனு இருந்தா கடன் இல்லாம இருக்குமா..’’

’’கம்பெனி இப்படி திடீர்னு மூடுவாங்கனு யாருக்கு தெரியும் , எல்லாம் நல்லாதான் போய்கிட்டு இருந்தது என்னமோ இப்படி ஆயிடுச்சு..’’

’’சரி போனது போச்சு.. ஒனக்குனு ஒருத்தி இனிமே பொறக்க போறாதுல்ல சீக்கிரம் கல்யாணம் பண்ற வழிய பாரு’’

’’சரிண்ணே..’’

‘’நீங்க எப்பண்ணே மறுபடியும் வெளிநாட்டுக்கு போறீங்க..’’

‘’ரெண்டு மாச லீவுலதான் வந்திருக்கேன். அடுத்த மாச கடைசில போகனும்’’

அடுத்து என்னபேசுவது என தெரியாமல் இருவரும் அமைதியாக நின்றோம். திருப்பத்தில் பேருந்து வரும் சத்தம் கேட்டது.

‘’சரிண்ணே பஸ் வருது பாத்து போங்க..வீட்டுக்கு போயிட்டு போன் பண்ணுங்க’’ என்று சொன்னேன். அதற்குள் பேருந்து எங்கள் அருகே வந்து நின்றது.

சரிப்பா நா வரேன் என்று சொல்லிவிட்டு அண்ணன் பேருந்தில் ஏறிக்கொண்டு கையசைத்தார். நானும் கையசைத்தபடி போகும் பேருந்தையே பார்த்தேன். அண்ணன் பெரியம்மா பையன், எனக்கு நெனவு தெரிஞ்ச நாள் முதல் வெளிநாட்டில் தான் இருக்கார். அண்ணனுக்கு சித்திமேல அதாவது எங்கம்மா மேல பாசம் அதிகம். அதனால நாட்டுக்கு வரும்போதெல்லாம் எங்க வீட்டுக்கு கட்டாயம் வருவார். என்னையும் வெளிநாட்டு வேலைக்கு கூப்பிட்டார். நான் தான் போகல. சென்னையில ஒரு வெளிநாட்டு கம்பெனில நிரந்தர வேலையில்தான் இருந்தேன். திடீரென ஒரு நாள் கம்பெனிய மூடிட்டாங்க, எனக்கு வேலையில்லாமல் போச்சு. வேலைபோன பின்னால் வாழ்க்கை வேறமாதிரி ஆகிபோச்சு. இப்போ சம்பாதிக்கறது வாய்க்கும் வவுத்துக்குமே சரியா இருக்கு.

அண்ணன் வந்து போன இரண்டு நாள் கழிச்சு போன் பண்ணினார்..‘’தொளாரில் ஒரு பொண்ணு இருக்கு, அந்தபொண்ணோட அத்த நம்ம ஊருல தான் வாக்கப்பட்டு இருக்கு நீயும் அம்மாவும் உடனே கிளம்பி வாங்க நாம போய் பாத்துட்டு வரலாம்னு’’ சொன்னார்.

என்ன வயசு, என்ன படிச்சுயிருக்கு என கேட்டதுக்கு ’’எல்லாம் நேர்ல சொல்லுறேன் வாடா’’ என்றார். அண்ணன் இப்படிதான் எதையுமே முழுசா சொல்ல மாட்டார்.

அம்மாகிட்ட சொன்னதும் மிக சந்தோசமா ‘’சரிடா போயி பாத்துரலாம்’’னு சொன்னது.

ஒரு ஞாயிற்றுகிழமை காலை பெண் பார்க்க போனோம். அண்ணன், அண்ணி, பொண்ணோட அத்த, அம்மா என ஐவராக சென்றோம். பெண்ணின் ஊர் பிரதான சாலையிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தள்ளி உள்ளே இருந்தது. சாலையின் இருபுறமும் நெல் வயல்களில் நெற்கதிர்கள் நல்லா விளைந்து தலை சாய்ந்து அறுவடை நாளை எதிர் நோக்கி நின்றது.

ஊரை நெருங்க பள்ளி மைதானத்தில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். பக்கத்தில் கிளை நூலகம் பூட்டியிருந்தது. ஊருக்குள் புதிதாக நுழையும் எங்களை விநோதமாக பார்த்தார்கள்.

பெண்ணின் வீடோ அரசின் பசுமை வீடுகட்டும் திட்டதில் கட்டப்பட்ட புதிய வீடு. பச்சை வண்ணத்தில் மிளிர்கிறது. வீட்டு வாசலில் தயக்கத்தோடு நிற்கும் எங்களை பெண்ணின் அத்தை உள்ளவாங்க என உரிமையோடு வீட்டினுள் அழைத்து செல்கிறார். பெண்ணின் அம்மாவும் அப்பாவும் எங்களை வாங்க வாங்க என வரவேற்றனர். வரோம் என்றபடியே அண்ணன் முன் செல்ல நாங்கள் அவரை பின்தொடர்ந்து உள்ளே சென்றோம். விரித்து வைக்கப்பட்டு இருந்த பாயில் உட்கார சொன்னார்கள், என்னை மட்டும் அங்கிருந்த ஒரு பிளாஷ்டிக் சேரில் உட்கார சொன்னார்கள்.

தொலைக்காட்சியில் மகாபாரதம் தொடர் ஒடிக்கொண்டிருந்தது. கர்ணன் தன் அம்மா யாரென தெரிந்து கொள்ள போகும் தருணத்தில் விளம்பர இடைவேளை விழுந்தது.

எல்லோருக்கும் குடிக்க தண்ணீர் கொடுத்தார்கள். பெண்ணின் அம்மாவிடம் ஒரு தாம்பாளம் கேட்டது அம்மா, ஒரு பித்தளை தாம்பாளம் கொண்டு வந்து கொடுத்தார்கள். அண்ணி கொண்டு வந்த பூ, பழங்களை பாலித்தீன் பையிலிருந்து எடுத்து தட்டில் பரப்பி வைத்தது. அண்ணன் பெண்ணின் அத்தையிடம் ஏதோ சைகை காட்டினார்.

பெண்ணின் அத்தை பெண்ணின் அப்பாவை பார்த்து, என்னை கை காட்டி ‘’ அண்ணே இவருதான் மாப்பிள்ளை , சென்னையில வேலையில் இருக்காரு ஒரே பையன் சொந்த வீடு நெலம்லாம் இருக்கு நல்ல குடும்பம்’’னு சொன்னார்..

பெண்ணின் அப்பா என்னை மேலும் கீழும் பார்த்தார். நான் பிளாஷ்டிக் சேரில் நன்றாக சாய்ந்து அமர்ந்த படியிருந்தேன். என் எதிரே இருக்கும் இரு அறைகளில் எந்த அறையில் பெண் இருக்கும் , என்ன கலர் சேலை கட்டியிருக்கும் என தீவிரமான யோசனைகள் என்னுள் ஓடிக்கொண்டுயிருந்தது.

பெண்ணின் அப்பா என்னை பார்த்து ’’என்ன படிச்சு இருக்கீங்க’’ என்றார்.

’’நா ஐ.டி.ஐ படிச்சு இருக்கேன்’’.

’’ஐ.டி.ஐ ல என்ன படிச்சு இருக்கீங்க’’

எனக்கு எல்லாம் தெரியும் நீ சொல்லு எனும் தோரணையில் பார்த்தார். வேளைக்கு ஆளு எடுக்குற மாதிரி இருக்கே என நினைத்துக் கொண்டேன்.

‘’நா பிட்டருக்கு படிச்சு இருக்கேன்’’ என்றேன்.

ம்.. எம் பையன் என்சீனிருக்கு படிக்கிறான்’’ என்றார். எதையோ நினைத்துக் கொண்டவர் திடுமென எழுந்து என் எதிரேயிருக்கும் இடதுபுற அறைக்குள் போனார்.

தொலைக்காட்சியில் கர்ணன் அம்மாவைக் கட்டிக்கொண்டு பாசத்தில் அழுகிறான். அண்ணி பெண்ணின் அத்தையிடம் ஏதோ கிசுகிசுக்கிறது. அந்த ஹாலில் உள்ள பெஞ்சின் மீது ஆண் பெண் ஆடைகள் கலைந்துகிடந்தன.

பெண்ணின் அப்பா சென்ற அறையில் வேறு யாரும் இருப்பது மாதிரி தெரியவில்லை. அப்படினா என் எதிரேயுள்ள வலபக்க அறையில்தான் பெண் இருக்க வேண்டும் என எண்ணிக்கொண்டிருக்கும்போது பெண்ணின் அப்பா ஒரு பாலித்தீன் பையுடன் வந்து என் எதிரே உட்கார்ந்தார். பையிலிருந்து சில சான்றிதழ்களை  வெளியே எடுத்து என்னிடம் கொடுத்தார். அவரது மகன் கட்டிட பொறியாளனாக உருவாகி வருவதற்கான தடயங்கள் அதில் தெரிந்தது. அவர் மேலும் எதையோ தேடினார்.

‘’நீங்க சொன்னா சரிதான் இதுலாம் எதுக்கு இப்போ’’ என்றபடி அண்ணன் என் கையிலிருந்த சான்றிதழ்களை வாங்கி பெண்ணின் அப்பாவிடம் கொடுத்தார். பெண்ணின் அம்மா என் எதிரேயுள்ள அறைக்குள் சென்று வந்தார். அந்த அறைக்குள்தான் பெண் அலங்காரம் செய்து கொண்டிருக்கலாம் என தோன்றியது, அந்த அறைக்குள் கேஸ் அடுப்பும் இருக்கிறது. அடுப்பில் ஏதோ சூடாகிறது டீ அல்லது காபியாக இருக்கலாம்.

திடீரென பெண்ணின் அப்பா ‘’உங்க சாதகத்துல தோசம் ஏதும் இருக்கா இல்ல சுத்த சாதகமா’’ என கேட்டார்.

‘’எங்க தம்பி சாதகத்துல தோசம் எதும் இல்ல, சுத்த சாதகம்தான்’’ என்றார் அண்ணன்.

அடப்பாவமே பெண்ண எப்போ காட்டுவாங்க அதுக்குள்ள சாதகத்த பத்தி பேசுறாங்களே என யோசித்தபடியே நிமிர்ந்து உட்கார்ந்தேன். வாசலில் யாரோ இருவர் வந்து எட்டி பார்த்தனர்.

‘’என்னண்ணே’’ என்றபடி பெண்ணின் அப்பா எழுந்து வெளியே சென்றார். இருவரும் ஏதோ குசுகுசுவென பேசிக்கொண்டனர்.

தொலைக்காட்சியில் கர்ணன் அழுதபடியே தன்னை அழிக்க போகும் வரத்தை தந்ததாக  அம்மாவுக்கு வாக்கு தறுகிறான். குந்தவை அழுதபடியே அரண்மனையை விட்டு வெளியே செல்கிறாள்.

பெண்ணின் அப்பா உள்ளே வந்தார். அவருடன் இருவர் உள்ளே வந்தனர். அவர்கள் என் வயதையொத்தவர்கள். பெண்ணின் அப்பா என்னருகே பாயை விரித்து அவர்களை உட்கார சொன்னார். உடனே நா எழுந்து என்னருகே வந்தவனிடம் இதுல ‘’உட்காருங்க’’ என்று சொன்னாலும் இல்லை வேணாம் என்றபடி அவன் பாயில் உட்காருந்துகொண்டான். இவன் யாராக இருக்கும் பொண்ணுக்கு ஏதும் சொந்தகாரனா இல்லை நம்மள மாதிரியே பொண்ணுபாக்க வந்திருப்பவனா என குழம்புகிறேன்.

பெண்ணின் அப்பா விளம்பரம் ஒடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சியை அணைத்தார். மனைவியை பார்த்து ரெடியா என கேட்டார். மனைவி ரெடியென தலையாட்டினார். வாசலில் வயசான பாட்டி ஒருவர் எட்டி பார்த்துவிட்டு சென்றார். பெண்ணின் அத்தை என் எதிரேயுள்ள அறைக்குள் சென்றார். தட்டில் டம்ளர்களை எடுத்து வைக்கிறார். நானும் என் பக்கத்தில் உள்ளவனும் அந்த அறையையே பார்த்துக்கொண்டிருக்கிறோம். கதவு கொஞ்சமாக சாத்தப்படிருந்ததினால், உள்ளேயிருப்பது எதுவும் தெரியவில்லை. நானும் அவனும் ஒருவரை ஒருவர் அர்த்தத்தோடு பார்த்துக்கொண்டோம்.

சில கணங்களில் அந்த அறையின் கதவு திறக்கப்பட்டது. பெண்ணின் அத்தை முதலில் வந்தார். அவர் பின்னாடியே சுடிதார் அணிந்த பெண் கையில்  டம்ளர்கள் உள்ள தட்டை ஏந்தியபடி எங்களை நோக்கி வந்தாள்.

பெண்ணைப் பற்றி என்னுள் இருந்த அனைத்து எதிபார்ப்புகளும் நொருங்கி விழுந்தன. டீயை யாருக்கு முதலில் கொடுக்க என தயங்கினாள். என்னருகே அமர்ந்து இருப்பவனை கை காட்டி அவருக்கு முதலில் கொடுங்க என முனகுகிறேன். அவன் என்னை கை காட்டுகிறான். அதற்குள் அண்ணன் நீ எடுத்துக்கப்பா என்கிறார். இது நவீன சுயம்வரமோ என நினைத்தபடி முதலில் நானே டீ யை எடுதுக்கொண்டேன். எல்லோருக்கும் டீயை கொடுத்துவிட்டு அதே அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டாள். ஒரு கனத்த மெளனம் அங்கு நிலவியது. டீயை வாயில் வைத்து குடித்தேன். சுரீரென நாவை சுட்டது. அருகில் அமர்ந்து இருப்பவனை பார்த்தேன். அவன் நிதானமாக டீயை ரசித்து குடித்துக் கொண்டிருந்தான் இதற்காகவே வந்தது போல. அம்மாவிடம் அண்ணி ஏதோ ரசியமாக சொன்னது. பெண்ணின் அத்தை அவர்களையே பார்த்துக் கொண்டு இருந்தார். என் அருகே இருந்தவன் டீயை குடித்து முடித்ததும் பெண்ணின் அப்பாவிடம் சரி வரேங்க என்றபடி வாசலை நோக்கி வெளியே சென்றான். அவரும் உடன் சென்று வழியனிப்பி விட்டு உள்ளே வந்தார்.

கோழியூர் வாத்தியார் கிட்ட பொண்ணு சாதகத்த கொடுத்து இருக்கேன். தெனமும் அவரு சொன்னாருனு ஆட்கள் வந்துகிட்டே இருக்காங்க. நீங்க வரதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட ஒரு மாப்புள வந்துட்டு போனாரு, இப்போதான் நீங்க வந்தீங்க அதுக்குள்ள இன்னொரு ஆள் என்றார். இவரு பெருமை படுறாரா இல்லா சலிப்படைகிறாரா என கணிக்க முடியவில்லை.

இந்த பெண்ணுக்கே இவ்வளவு போட்டியா, உயரமும் இல்லாத குள்ளமும் இல்லாத ஒரு உயரம், செவப்பென்னும் சொல்ல முடியாத கருப்புனும் சொல்ல முடியாத ஒரு நிறம், வயசுகேத்த வளர்ச்சியுமியில்லை. நோய்யுண்ட முகதோற்றம், அந்த பொண்ண பார்த்ததும் ஈர்ப்புக்கு பதிலா கோவம்தான் வந்தது இதை எதையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் அணைக்கப் பட்ட தொலைக்காட்சிப்பெட்டி கண்ணாடியில் தெரியும் எங்கள் பிம்பங்களையே வேடிக்கை பார்த்தப்படி உட்கார்ந்து இருந்தேன்.

அம்மாவிடம் சைகை மூலம் என் நிலையை சொல்லலாமென அம்மாவையே பார்க்கிறேன். ஆனா அம்மாவிடம் அண்ணி ஏதோ தீவிரமாக பேசிக்கிட்டே இருக்காங்க.

.அண்ணன் மெதுவாக ‘’அடுத்து என்ன..பொண்ணுக்கு மாப்பிள்ளை பிடிச்சு இருக்கானு கேட்டு சொல்லுங்க’’ என்றார்.

’’எங்க பொண்ணு நா சொல்லுறத கேட்கும், நீங்க மாப்பிள்ளைக்கு பொண்ண பிடிச்சு இருக்கானு கேட்டு சொல்லுங்க’’ என்றார் பெண்ணின் அப்பா.

அண்ணன் நம்மள தனியா கூட்டிட்டு போய் கேட்பார் பொண்ணு பிடிக்கலனு சொல்லிவிடலாம் எனநினைத்துக்கொண்டு இருக்கும்போதே

’’எங்க தம்பியும் அப்படிதான், நா சொன்னா போதும்’’ என்றார்.

என் நெஞ்சுக்குள் ஏதோ உடைந்து விழுவது என் காதுக்கு மட்டுமே கேட்டது. நா அப்படி இல்லனு சொன்னா அண்ணனுக்கு அவமான போகுமே இத எப்படி தடுத்து நிறுத்துவது என யோசிக்கிறேன்.

’’சரிங்க அப்படினா பையனோட சாதகத்த கொடுத்துட்டு போங்க நாளைக்கு வாத்தியார்கிட்ட காட்டி பொருத்தம் பாத்துட்டு என்னனு சொல்லுறேன்’’

அப்பாட தப்பிச்சேன். வீட்டுக்கு போய் விசயத்த சொல்லிவிடலாம்னு எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொண்டேன்.

‘’எதுக்கு நாளைக்கு தள்ளிபோடுவானே.. இப்பவே கெளம்புங்க போய் பாத்துடலாம்’’ என அண்ணன் ஆர்வமாக சொன்னார்.

அய்யோ அண்ணன் மறுபடியும் கல்லை தூக்கி தலைல போடுறாரே இப்போ என்ன செய்வது என குழம்பி போனேன்.

’’வாத்தியார் இருப்பாரோ மாட்டாரோ’’ என பெண்ணோட அப்பா தயங்கினார்.

‘’வாத்தியார் நம்பர் குடுங்க பேசிப் பாப்போம்’’ அண்ணன் வழி சொன்னார்.

இந்த பெண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்காம விடமட்டார் போலிருக்கே. அவர் நம்பர் கொடுக்க, என் மொபைலில் நானே போன்செய்து குடுக்குறேன். பெண்ணின் அப்பா பேசினார். வாத்தியார் இல்லாமல் இருக்க வேண்டுமென எனக்குள் நினைத்துக்கொண்டேன்.

’’வாத்தியார் வீட்டுலதான் இருக்காரு’’ என்றார்.

அப்பறம் என்ன நேர்ல போய் பாத்துடலாம்,.... சரி... சீக்கிறமா கிளம்புங்க’’ என்றபடி அண்ணன் ஆர்வமாக அனைவரையும் கிளம்ப சொன்னார்.

அம்மாவிடம் பெண்ணின் அம்மா அந்த பித்தளை தட்டை மறுபடியும் கொண்டு வந்து கொடுத்தார். அதில் கொஞ்சம் பழம், பூ இருந்தது. அம்மா அதையெல்லாம் தட்டிலிருந்து எடுத்து பையில் வைத்தது.

அனைவரிடமும் சொல்லிக்கொண்டு வெளியே வந்தோம். வாசலில் நின்ற பாட்டி நீதான மாப்ள என விசாரித்தது. ஆமாம் என்று தலையை ஆட்டினேன்.

’’நல்லா இருக்கியா ஆச்சி’’ என அம்மா ஆவலாக விசாரித்தது. யாரும்மா இவுங்க என அம்மாவிடம் கிசுகிசுத்தேன். நம்ம ஊருதான் இங்க வாக்கப்பட்டுருக்கு என்றது அம்மா. மூவரும் பேசியபடியே தெருவில் இறங்கி நடக்க தொடங்கி விட்டோம்.

எங்களுக்கு பின்னால் அண்ணனும் அண்ணியும் பெண்ணின் அத்தையிடம் எதோ தீவிரமாக பேசிக்கொண்டுயிருந்தனர்..

பாட்டி படபடனு ஏதுஏதோ கேக்குது. தன் அண்ணன பத்தி விசாரிக்குது. தன் பிள்ளைகள் பற்றி சொல்லுது. கொஞ்ச நேரம் பொருத்து அம்மா பாக்க வந்த பொண்ண பத்தி விசாரித்தது. ’’தங்கமான பொண்ணு காடுண்டு ஊடுண்டுனு இருப்பா, பொண்ணு தந்தா கட்டிக்கடா, நல்ல வேலக்காரி காட்டு வேல ஊட்டு வேல எல்லாத்திலேயும் கெட்டிக்காரி, அதந்து ஒரு வாத்த பேசமட்டா’’ என பொண்ணை பத்தி ஏகத்துக்கும் புகழ்ந்து சொல்லிக்கிட்டே போனது பாட்டி.

’’பொண்ண பாத்தா வயசுக்கேத்த வளர்ச்சியா தெரியலையே, ஒடம்புக்கு ஏதும் பிரச்சனையா பாட்டி’’ என்றேன்.

’’அப்படி சொல்லாதப்பா..அவ ஒடம்புக்கு முடியலனு படுத்து நா பாத்ததேயில்ல..அவ தம்பி தங்கச்சி எல்லாம் படிக்க போகுது இவ மட்டும் தான் எல்லா வேலையும் பாக்கனும் அதனால அப்படி தெரியுரா வேற ஒண்ணுமில்ல என பாட்டி சமாதானம் கூறியது.

’’தம்பி நம்ம வீட்டுக்கு வந்தா நல்லா சாப்பிட வச்சி அவள பொண்ணா மாத்தறது என் பொறுப்பு நீ கவல படாதடா’’ என்றது அம்மா. அப்படினா அம்மாவுக்கு பொண்ண புடிச்சுயிருக்கு என தோன்றியது.

இப்போது எனக்குள் குழப்பம் அதிகமாகிவிட்டது. உடல் அழகு மட்டுமுள்ள பொண்ணு போதுமா குணமுள்ள பொண்ணு வேணாமா. இந்த மாதிரி சூழலில் இருந்து வரும் பொண்ணுதானே நம்ம ஊட்டுக்கு சரியா வரும் என்று என்னுள் யோசிக்க தொடங்கி விட்டேன்..

அதற்குள் பொண்ணுடைய அப்பா,அம்மா,அத்தை அனைவரும் கிளம்பி வந்துவிட்டனர். அவர்களுக்கு பின்னால் அண்ணனும் அண்ணியும் ஏதோ விவாதித்தபடியே வந்தனர். என்னருகே வரும்போது அண்ணி சொன்னாங்க..

’’முக்கியமான பொருத்தம் மட்டும் சரியா இருக்கானு பாக்க சொல்லுங்க’’

’’நீ சும்மா வா என்னதான் சொல்லுறாருன்னு பாப்பமே’’ என்றார் அண்ணன்.

’’இழுத்து புடிச்சு முடிக்க பாருங்க’’னு அண்ணி சொன்னவுடனே நான் சொன்னேன்.

’’அண்ணி அப்படிலாம் இழுத்து புடிச்சு ஒண்ணும் பண்ண வேணாம்’’

‘’ஆமா ஒனக்கு இப்பத்தான் பதினாறு வயசுனு நெனைப்பா’’

அய்யோ அவங்க விட்டாலும் இவங்க விடமாட்டாங்க போலிருக்கே. என்ன செய்யலாம் என யோசித்தபடியே அவர்களிடம் சொன்னேன்.

‘’சரி நீங்க போயி சாதகம் பாத்துட்டு வாங்க நா வீட்டுக்கு கெளம்பறேன்’’

‘’ஏன் நீயும் வாடா’’ என்றார் அண்ணன்.

‘’அதான் அம்மா இருக்கு, நீங்க இருக்கீங்க அப்பறம் நா எதுக்கு நீங்களாம் பாத்துட்டு சொன்னா சரிதான்’’

‘’அதும் சரிதான் நீ கிளம்பு நா பாத்துகிறேன்’’

விட்டாபோதும் என உடனே புறப்பட்டு விட்டேன்.

வீட்டுக்கு வந்த பின்னும் அதே நினைப்பு தான். சாதகம் பொருந்தலனு சோசியர் சொல்லிட்டா பிரச்சன இல்லை. ஒருவேளை சோசியர் சரியா இருக்குனு சொல்லிட்டா என்ன பண்ணுறது. சோசியர் சரியா இருக்குனு சொன்ன பின்னாடி பொண்ணு பிடிக்கல வேணாம்னு சொன்னா அண்ணன் கோவிச்சுக்குவாரு, அப்பறம் வேற பொண்ணு பாக்கவும் வரமாட்டாரு. அதுக்கா மனசுக்கு பிடிக்காத பொண்ண கட்டிக்க முடியுமா, அந்த பாட்டி வேற பொண்ணபத்தி ரொம்ப நல்ல மாதிரி சொல்லுது. இல்ல இந்த பொண்ணையே கட்டிக்கலாமா...அழகு மட்டும் போதுமா ரொம்ம சிரமபடுற வீட்டுல இருந்து நம்ம வீட்டுக்கு வந்தா நம்ம அப்பா அம்மாவ நல்லா பாத்துக்குவா. .பாட்டி சொல்லுறத பாத்தா நம்மளுக்கு ஏத்த பொண்ணாதான் தெரியுது, இன்னும் கொஞ்சம் அழகா இருந்து இருக்க கூடாதா.. அழகா குணமா என என்னுள் ஒரு பெரிய பட்டிமன்றமே நடக்குது யாரு தீர்ப்பு சொல்லுவாங்க..

இனி இதைபத்தி யோசிக்க கூடாதுனு தீர்மானிச்சு விட்டு ஒரு சொம்பு தண்ணீர் குடித்து விட்டு வாசலில் வந்து உட்கார்ந்தேன். அம்மாவும் அண்ணனும் எப்போ வருவாங்க... என்ன செய்தி கொண்டு வருவாங்க என வாசலையே பார்த்துக்கொண்டிருக்கேன்.

நன்றி : நடுகல் இணைய இதழ். (பிப்ரவரி 2025)https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fnadukal.in%2F%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25ae%25a3%25e0%25af%258d%2F%3Ffbclid%3DIwZXh0bgNhZW0CMTEAAR0HYBGYtsYQGu2hM5CPN-XqtHxERicMvcPBfMnXEukzIrTBQn4IQK97Hdk_aem_YFSiqj7rlexIxrPDjr87dQ&h=AT2z5CELdzeNJKYtEGW_3wrdWNvKprRQ08MPQx94zuUC0byeBH9zKRJcrRvGj-V9vMS4icXZfKXBuJeN-vKlZ1UNyf96BbPqaUbxsBIo9XNHTA0hCxeQ18esza0J51vc6xbe9Hn7F49vyW0DsIsOYsKwXpCCGsah&__tn__=%2CmH-R&c[0]=AT2HT2-xLSVdflEQb2q63bCwjl3ou--0-ydv6LCzhWXhAwo8Gto_FYEfsp1NQHhpzFucykxh56b-D32CWKHs6tvxlbaK6cHllsZhiy43ZCr-4mu2mPW-KyMfW6QeUmkxoIr1Q52iKhxVTGnA2-psyYjFDUw0OFseuq6S955m0iXC2kvzGA

 

துளி. 410

நீங்கள் உங்களை புத்திசாலியாக திறமைசாலியாக எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளலாம் தவறில்லை ஆனால் எதிரே இருப்பவனை முட்டாளாக நினைப்பது புத்த...