12.28.2020

பதிவு. 44

 அநீதி கதைகள் – அருண்.மோ

அண்மையில் படித்து முடித்த சிறுகதை தொகுப்பு அநீதி கதைகள். அருண்.மோ-வின் முதல் சிறுகதை தொகுப்பு. இந்த தொகுப்பில் மொத்தம் பத்து சிறுகதைகள் உள்ளன. ஆறு யாதார்த்த கதைகளும் நான்கு மாய யதார்த்த கதைகளும் அடங்கிய தொகுப்பாகும். அவற்றுள் வகை மாதிரிக்கு ஒரு கதை வீதம் இரண்டு சிறுகதைகளை மட்டும் உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்.
பூனைகள் மற்றும் பூச்சிகளால் முற்றுகையிடப்படும் நகரம் என புது மாய யதார்த்த உலகை இந்த தொகுதியில் படைத்திருக்கிறார் அருண்.மோ. “பசி” கதை ஊரடங்கு காலத்தில் பசியால் வீழும் ஒரு குடும்பத்தின் கதையை மாய யதார்த்தத்தில் சொல்கிறது. பசியின் குரூரத்தையும், மக்கள் நலனில் அக்கறையில்ல அரசின் பாரமுகத்தையும் ஆசிரியர் நம் கண்முன்னே கொண்டு வருகிறார்.
இந்தியாவில் பிறந்த அனைவரும் ஏதாவது ஒரு சந்தரப்பத்தில் எதிர்கொள்ளக்கூட அதிமுக்கியமான கேள்வியாக இந்திய சமூகத்தில் கருதப்படும் ஒரு கேள்வியை முன்வைத்து “சோசியோபோயியா’’ என்ற கதையை எழுதியுள்ளார். அவர் ஒரு கல்லூரி பேராசிரியராக இருந்தும், அந்த கேள்வியால் அவர் படும் அவதியை மிகச்சிறப்பாக இந்தகதையில் அருண்.மோ பதிவு செய்துள்ளார்.
அருணின் எழுத்து நடை மிக எளிமையாகவும் இயல்பாகவும் இருக்கிறது. எல்லா படைப்புகளும் ஏதாவது ஒரு முக்கியமான சமூக பிரச்சனையே கருப்பொருளாக கொண்டுள்ளது. உள்ளதை உள்ளபடியே சொல்லிச் செல்கிறது.
அரச அடக்கு முறைக்கும் ஆளாகுபவனின் கதையானாலும், பெண்ணின் மீது அடக்குமுறையை செலுத்தும் ஆணின் கதையானாலும் யதார்த்ததை பிரதிபலிக்கிறது. ஒரு படைப்பாளியின் பணி உள்ளதை உள்ளபடி சொல்வதா அல்லது தீர்வு சொல்வதா அல்லது பாதிக்கப்படுபவனின் குரலை பதிவு செய்வதா என்ற கேள்விகள் எனக்கு அநீதிகளை படிக்கும்போது தோன்றுகிறது. என்னுடைய பதில்களும் ஒன்றுபோல் இல்லை. எனக்கு ஏன் அப்படி தோன்றுகிறது, உங்களுக்கும் அப்படி கேள்விகள் எழலாம்… வாய்ப்புள்ளவர்கள் படித்துப் பார்த்துவிட்டு சொல்லுங்கள், நாம் விவாதிக்கலாம்.
அநீதி கதைகள் தொகுப்பு மூலம் அருண்.மோ சிறுகதை ஆசிரியராக இலக்கிய வெளிக்குள் நுழைந்துள்ளார். அவருக்கு என் மனமார்ந்த பாரட்டுகளும் வாழ்த்துகளும்.
யாருவரும் பதிப்பகம் இந்த நூலை சிறப்பாக பதிப்பித்து (2020) வெளியிட்டுள்ளது.
இந்த வாசிப்பை சாத்தியமாக்கிய தோழர் பாரதிநாதன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

28.12.2020.

துளி. 318

 நிபந்தனையில்லா

பேரான்பே

எமது நிபந்தனை.

                  27.12.2020.

துளி. 317

 நாம்

ஒன்றாக இருந்த

தருணங்களில்

ஒருவருக்கொருவர்

பேரன்பை பொழிந்து கொள்ளவில்லைதான்

ஆனாலும்

நமக்கிடையேயான பிரிவு

பெரும் துன்பத்தை

பரிசளித்து செல்கிறது.


14.12.2020.

துளி. 316

பிரிவைப் போல்

பேரன்பு

வேறுண்டோ...

27.11.2020.

பதிவு. 43

 இருளின் மீது ஒளிவீசும் பூர்ணிமை.

நாம் விரும்பி படிக்கும் படைப்பாளிகள் பெரும்பாலும் கால் நூற்றாண்டுக்கு முன் தொடங்கியவர்கள் அல்லது அதற்குமுன்பே வாழ்ந்து மறைந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்று ஒரு நண்பர் சொன்னபோது எனக்கு பெரும் வியப்பாக இருந்தது. ஆனால் யோசித்து பார்த்ததில் அதில் உண்மை இருந்தது. அந்த உரையாடலுக்கு பிறகு புதிய படைப்பாளிகளை அல்லது இதுவரை படிக்காத படைப்பாளிகளின் படைப்புகளை படிக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டோம்.
இப்படியான சூழலில் அண்மையில் ஒரு நண்பரின் அலுவலகத்திற்கு சென்று இருந்தபோது க.வீரபண்டியனின் பூர்ணிமை சிறுகதை தொகுப்பை பார்த்தேன். அட்டைப்படமும் புத்தகத்தின் தலைப்பும் என்னைக் கவர்ந்தது, எடுத்துப் பார்த்தேன். அந்த படைப்பாளியின் முதல் தொகுப்பு என்று தெரிந்ததும் ஆர்வமாகி தலைப்பு கதையை படிக்க தொடங்கினேன், நல்ல தொடக்கமாக இருந்ததினால் உடனே அந்த புத்தகத்தை கடன் வாங்கி வந்துவிட்டேன்.
இந்த தொகுப்பில் மொத்தம் 12 சிறுகதைகள் இருக்கின்றன. 2017 அக்டோபர் தொடங்கி 2018 ஜீலைக்குள் இதழ்களில் ( செம்மலர், உயிர் எழுத்து, கணையாழி, காக்கைக் சிறகினிலே, காலச்சுவடு, ஆனந்த விகடன் மற்றும் நம் நற்றிணை ) வெளிவந்துள்ளது.
தெருக்களை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலார்கள், சாலையோரம் சாக்கு நிழலில் செருப்பு தைக்கும் தொழிலாளி, சாதிய ஆணவ கொலையில் காதலனை இழந்த காதலி, இரவில் சாலையோரம் நின்று வாடிக்கையாளனை தேடும் பாலியல் தொழிலாளி, பிப்பாக்கெட் அடிக்கும் சிறு திருடர்கள், மூன்று சீட்டாடுபவர்கள், கழிவு நீர் தொட்டியில் இறக்கப்பட்டு வாழ்வை இழந்த தொழிலாளிகள், மாட்டுக்கறி மற்றும் வெள்ளாட்டுக்கறி விற்பனை செய்வோர், விவசாய கூலித்தொழிலாளி மற்றும் குப்பை பொறுக்குவோர் என இந்தகதைகளின் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் எளிய அல்லது விளிம்புநிலை மனிதர்களாக இருக்கிறார்கள். இதுவே இந்த தொகுப்பின் சிறப்பாகும்.
சில கதைகள் சிறப்பாக இருக்கிறது. சில கதைகளை இன்னும் நன்றாக எழுதி இருக்கலாம் என்று எண்ணுகிறேன். இந்த கதையின் தலைப்புக்கதையான பூர்ணிமை இந்த தொகுப்பின் சிறந்த கதை மட்டுமல்ல சமகாலத்தில் நான் வாசித்த சிறுகதைகளிலும் மிகவும் சிறப்பான கதையாகும்.
அண்மையில் நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போது சமூகத்தில் பெரும் அதிர்வை உண்டாக்கிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு படைப்பை உருவாக்கும்போது படிப்பாளியின் பார்வை எப்படி இருக்க வேண்டும். இதுவரை ஊடகங்களில் வெளிவந்த தகவல்களை அப்படியே எடுத்துக் கொள்ளமுடியுமா என்றெல்லாம் விவாதித்தோம். அதற்கு விடை சொல்வது போல் பூர்ணிமை சிறுகதை விளங்குகிறது. உலகத்துக்கே தெரிந்த சம்பவத்தை எடுத்துக்கொண்டு சிறப்பான படைப்பாக உருமாற்றியுள்ளார். அந்த கதை நம்முள் பல சிந்தனைகளை தூண்டுகிறது.
க.வீரபாண்டியனின் எழுத்து நடை இயல்பாக இருக்கிறது. குறைந்த சொற்களில் காதபாத்திரத்தை நம்முன் காட்சி படுத்திவிடுகிறார். இதுதான் அவருக்கு முதல் தொகுப்பு என்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது.
புத்தகத்தின் அட்டைப்படம் நன்றாக உள்ளது. அகத்தின் அழகு முகத்தில் என்பதுபோல் புத்தகத்தின் உள்ளடக்கத்திற்கு ஏற்ற வகையில் அட்டைப்படத்தை மணிவண்ணன் சிறப்பாக வடிவமைத்துள்ளார்.
கடைசிக்கதை வெளியானதுக்கு அடுத்த மாதமே (018 ஆகஸ்ட்) இந்த கதைகள் பூர்ணிமை தொகுப்பாக வெளியாகியுள்ளது. இந்த புத்தகத்தை டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் சிறப்பாக பதிப்பித்து வெளியிட்டுள்ளது.
இந்த வாசிப்பை சாத்தியமாக்கிய நண்பர் கோவிந்தராஜ் ரங்கநாதன் அவர்களுக்கு என்மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

24.11.2020.

துளி. 315

தேவதையின் பேரன்புக்காக

காத்து கிடப்பவனின்

மனம் போல்

தனிந்து கிடக்கிறது

இந்த சாலை...

23.11.2020.

துளி. 314

உன் பேரன்பில்

நனைய

கண காலமாக

காத்திருக்கிறது

அந்த ஒற்றை மரம்.

16.12.2020.

பதிவு. 42


 வீடு : திரைக்கதை – உரையாடல்

சில புத்தகங்களை கைக்கு வந்ததுமே படித்து முடித்துவிடுவோம். சில புத்தகங்கள் நம் கைக்கு வந்து பல ஆண்டுகள் கழித்தும் படிக்காமலே வைத்திருப்போம். அந்த புத்தகத்தை தேடிப்பிடித்து வாங்கியிருப்போம் அது தனிக்கதை. வீடு திரைக்கதை புத்தகத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே புத்தக கண்காட்சியில் வாங்கியிருந்தாலும் கடந்த வாரம்தான் படித்து முடித்தேன்.
பொதிகை தொலைக்காட்சியில் வீடு படம் பார்த்தது நினைவுக்கு வந்து சென்றது. ஏன் பிடிக்கிறது என்று தெரியாமலே மனசுக்குள் நுழைந்து கொள்ளும் படங்களில் ஒன்றாகவே வீடு படம் பார்த்த அனுவம் எனக்குள் பசுமையான நினைவாக இருக்கிறது.
இந்த புத்தகம் மூன்று பகுதியாக இருக்கிறது. முதல்பகுதி வீடு படத்தின் திரைக்கதை உள்ளது. திரைக்கதையை படிக்கும்போதே படம் மனதில் ஓடதொடங்கி விடுகிறது.
இரண்டாவது பகுதி வீடு படம் பற்றிய ஒன்பது ஆளுமைகளின் கட்டுரைகள் ( விமர்சனம் மற்றும் அனுபவங்கள் ) இருக்கின்றன. குறைவான வசனங்களுடன் சிறப்பான காட்சி மொழியில் இருக்கிறது என்று ஒருவரும், வீடு படத்தில் வசனம் மிக சிறப்பாக இருக்கிறது மற்றொருவரும் கூறுகின்றனர். இரண்டு தரப்பினர் சொல்லும் விளக்கங்களையும் நாம் ஏற்றுக்கொள்வதோடு, இப்படி ஒரு பார்வை இருக்கிறதா என்று நாம் வியக்கவும் செய்வோம். ஒவ்வொருவரும் வீடு படம் பார்த்த அனுபவமே சுவராசியமானதாக இருக்கிறது.
இறுதியாக இயக்குனரின் நீண்ட நேர்காணல் உள்ளது. தன்னுடைய படங்களிலேயே நான் குறைவான தவறுகளை செய்துள்ள படங்கள் வீடு மற்றும் சந்தியா ராகம் என்று பாலுமகேந்திரா கூறுகிறார். வீடு பட கதைக்கான காரணம், நடிகர்கள் தேர்வு, படபிடிப்புக்காக ஒரு வீடு கட்டிய கதை, அந்த வீடு இன்று படபிடிப்பு தளமாக உள்ளகதை, இளையராசாவின் இசை அதன் மேன்மை என்று பலவற்றையும் மனந்திறந்து பேசுகிறார்.
இந்த புத்தகத்தை படித்ததும் வீடு படத்தை மறுபடியும் பார்த்தேன். அது சிறப்பான அனுபவமாக இருந்தது. திரைக்கதையை படித்துவிட்டு படத்தை பார்த்தால் அது படத்தை இரண்டாவது முறையாக பார்ப்பது போல் இருக்கிறது.
இந்த புத்தகத்தை வம்சி பதிப்பகம் சிறப்பாக வெளியிட்டுள்ளது.

16.11.2020.

துளி. 313

மழை விழுந்ததும் எழும்

மண்வாசனைப் போல

ஊர் எல்லையை

நெருங்கியதும்

என்னுள் எழுகிறது

பால்ய நினைவுகள்...


12.11.2020.

துளி. 312

எந்த திசையில் நடக்க

இருளின் மையத்திலிருந்து

கேள்வி எழுப்பியவனுக்கு

மற்றவன் சொன்னான்

உனக்கான ஒளியை நோக்கி நட…

12.11.2020.

துளி. 311

 தேவதையின்

பேரன்பைப் போல்

பொழிகிறது பெருமழை...


07.11.2020.


துளி. 310

 

ஒர்

உண்மையான முகத்தை

தரிசித்து விட்டேன் என்று

நினைத்த கணத்தில்

சிறகிலிருந்து இறகு

பிரிவதுபோல்

மிக மிக இயல்பாக

அந்த முகமூடி

அந்த முகத்துடனான

உறவை முறித்துக்கொண்டு

தாழ வீழ்ந்தது

என் கண்ணெதிரிலேயே…

17.10.2020.

துளி. 309

கருப்பு

கருப்பு எனக்கு பிடிக்கும்
ஏனென்றால்
அது வெறும் நிறமல்ல
கருப்பு எனக்கு பிடிக்கும்
ஏனென்றால்
அது தேவதையின் நிறம்
கருப்பு எனக்கு பிடிக்கும்
ஏனென்றால்
அது சுயமரியாதையின் நிறம்
கருப்பு எனக்கு பிடிக்கும்
ஏனென்றால்
அது பகுத்தறிவின் நிறம்
கருப்பு எனக்கு பிடிக்கு
ஏனென்றால்
அதுதான் ஆதியின் நிறம்
கருப்பு எனக்கு பிடிக்கும்
ஏனென்றால்
அது காமத்தின் நிறம்
கருப்பு எனக்கு பிடிக்கும்
ஏனென்றால்
அது கருணையின் நிறம்.

08.10.2020.

துளி. 308

 

றெக்கை இல்லாமலே

ஆகாயத்தில் மிதக்கிறது

என் மனம்

தேவதையின் சிறு

பாராட்டை பெற்ற

மந்திர கணத்தில்.

08.10.2020.

துளி. 307

 

முன்னிருக்கையில்

அமர்ந்திருக்கும் தேவதை

சூடியிருக்கும் மல்லிகைச்சரம்

காற்றின் உதவியோடு

மனத்தடை ஏதுமில்லாமல்

பேசுகிறது என்னிடம்

அதனிடம்

எப்படி சொல்வேன்

அது பேசும்மொழி

எனக்கு புரியவில்லையென.

29.09.2020.

துளி. 306

 

தேவதையின் மெளனத்தை

எப்படி மொழிபெயர்ப்பது

சம்மதம் என்றா

நிராகரிப்பு என்றா

இல்லை

இரண்டுக்கும் இடையேயான

புதிய சொல்லா...

பெரும் குழப்பத்தில்

இருக்கிறான் அவன்.

23.09.2020.

துளி. 305

 கருப்பு

உங்களுக்கு
துக்கத்தின் அடையாளம்,
எங்களுக்கு
தன்மானத்தின் அடையாளம்.

துளி. 304

 

உங்களுக்கு

கருப்பு என்பது இருள்

எங்களுக்கு

கருப்பு என்பது வெளிச்சம்.

துளி. 303


பேரன்பு என்பதும்

பேரழகு என்பதும்

பிறர் துயர் நீக்குதலே...

14.09.2020.

துளி. 302


தீயாய்

தீண்டிச் செல்கிறது

தேவதையின் திருப்பார்வை.....

07.09.2020.

பதிவு. 42

 பெண் ஏன் அடிமையானாள் : சில குறிப்புகள்.

முன்னுரை:

பல வருடங்களாக படிக்க வேண்டும் என்று நினைத்து படிக்காமல் இருந்த பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகத்தை அண்மையில் படித்து முடித்தேன். அந்த புத்தகம் 1942-ல் வெளியாகியுள்ளது. அதில் வெளிப்படும் பெரியாரின் சிந்தனைகள் முக்கால் நூற்றாண்டு கடந்தபின்பும் இன்றும்  வலுவுள்ளதாக இருக்கிறது. அந்த புத்தகம் பற்றி எழுத நிறைய விசயங்கள் இருப்பதினால் சிறு சிறு பதிவுகளாக பதிவிடப்போகிறேன்.

இந்த புத்தகம் பத்து கட்டுரைகளின் தொகுப்பாகும். தனித்தனிக் கட்டுரைகளாக எழுதப்பட்டிருந்தாலும் அதில் பேசியிருக்கும் விசயங்கள் சார்ந்து தொடர்ச்சி இருக்கிறது. ஆண், பெண், சமூக பிரச்சனைகள் எதைப்பற்றிப் பேசினாலும் எந்த வகையிலும் ஒருவர் மற்றவரை ஒடுக்குவதை அடிமைப்படுத்துவதை எதிர்க்கும் குரலாகவே பெரியாரின் சிந்தனைகள் இருக்கின்றன. 

கருத்தியல் ரீதியாக எதிர்தரப்பில் இருந்தாலும், தான் பேசும் ஒரு கருத்துக்கு ஆதரவான கருத்து எதிர் முகாமில் இருப்பதாக தோன்றினால், அதையும் தன் கருத்து வலுசேர்க்க சேர்த்துக்கொள்கிறார். மாற்றுத் தரப்போடு விவாதிக்க எப்போதும் தயாராக இருந்திருக்கிறார் என்பதின் அடையாளத்தை இந்த புத்தகத்தில் காணலாம்.

பெரியாரின் மொழி மிகவும் எளிமையாகவும் சரளமானதாகவும் இருக்கிறது. அதே சமயம் கருத்தாழம் மிக்கதாகவும் இருக்கிறது. ஓரிடத்தில் காந்தியைப்பற்றி எழுதுகிறார், ஒரு வரியில் காந்திப்பற்றிய தன் கருத்தை வலுவாக பதிவு செய்து விடுகிறார்.

தேசிய சர்வாதிகாரியும், வர்ணாசிரமப் பித்தும், பழமைப்பற்றும் மிக்குடைய தோழர் காந்தி என்று அவர் எழுதுகிறார். காந்தியின் தீவிர ஆதரவாளராக இருந்த பெரியார் பின்பும் ஏன் காந்தியின் தீவிர எதிர்ப்பாளராக மாறினார் என்பதற்கான காரணங்கள் இந்த ஒற்றை வரியிலேயே அடங்கியிருப்பதாக நான் கருதுகிறேன்.


அத்தியாம் ஒன்று : கற்பு

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் 

வாய்நாடி வாய்ப்பச் செயல்.          (குறள்-946)

நோயை தீர்க்கவேண்டுமானால் நோய்க்கான காரணத்தையும், நோய்க்கான அறிகுறிகளையும் அறிந்துகொண்டு மருத்துவன் மருத்துவம் பார்க்கவேண்டும் என்று வள்ளுவர் சொன்னதுபோலவே சமூகத்தின் சீரழிவுக்கான காரணத்தைத்தேடி அதை தீர்க்க முனைந்தவர் பெரியார்.

மனித சமூகத்தின் சரிபாதியான பெண்கள் கற்பின் பேரால் ஒடுக்கப்படுகிறார்களே, அப்படியானால் கற்பு என்பது என்ன, அந்த சொல்லுக்கு தமிழில் உண்மையான பொருள் என்ன, ஒரு மொழியியல் பேராசிரியரைப்போல் கற்பு என்ற சொல்லின் பொருளை பலவிதமாக தேடி ஆராய்கிறார் பெரியார்.

கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை – என்கிற வாக்கியப்படி பார்த்தால் கற்பு என்பது சொல் தவறாமை, அதாவது நாணயம், சத்தியம், ஒப்பந்தத்திற்கு விரோதமில்லாமல் இருப்பது என்ற முடிவுக்கு வருகிறார். இது பெண்களுக்கு மட்டுமில்லை ஆண்களுக்கும் தேவையான(பொருந்தும்) குணங்கள்தானே பிறகு ஏன் கற்பு என்பதை என்பதை பெண்களுக்கு மட்டுமானதாக பார்க்கிறார்கள். ஆணுக்கு ஏன் கற்பை வலியுறுத்தவில்லை. பெண்ணை அடிமைப்படுத்த ஆண் கண்டுபிடித்த பொறியே கற்பு என்று கருதுகிறார். கற்பு என்பது இருபாலருக்கும் பொதுவானது என்று பெரியார் உறுதிபட நம்புகிறார். அதையே மக்களிடமும் பிரச்சாரம் செய்கிறார்.

கற்புக்காக புருஷனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டுமென்ற கொடுமையான மதங்கள், சட்டங்கள் மாயவேண்டும். கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக்கொண்டு, காதலும், அன்பும் இல்லாதவனுடன் இருக்கவேண்டும் என்கிற சமூகக் கொடுமைகள் அழியவேண்டும். இரு பிறப்பிற்கும் சமமான சுயேச்சைக் கற்புமுறை வேண்டும் என்று பெரியார் எழுதுகிறார்.

வள்ளுவரின் வாழ்க்கை துணைநலம் மற்றும் பெண் வழிச் சேரேல் அதிகாரங்களை பெரியார் நிராகரிக்கிறார். ஏன், எதனால் அவற்றை மறுக்கிறார், அதற்கான காரணங்கள் என்ன என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.


அத்தியாயம் இரண்டு : வள்ளுவரும் கற்பும்

கற்பு குறித்து பெரியார் எழுதிய கட்டுரைக்கு ஒருவர் மறுப்பு எழுதுகிறார். அந்த மறுப்பில் அவர் வள்ளுவரின் வாழ்க்கைத் துணைநலம், பெண்வழிச் சேரல் ஆகிய அதிகாரங்களையும், அவ்வையின் கூற்றுகளான தையல் சொற்கேளேல் மற்றும் பேதமை என்பது மாதர்க்கணிகலம் ஆகியவற்றை ஆதாரங்களாக முன்வைக்கிறார்.

வாழ்க்கைத் துணைநலம் அதிகாரம் கற்பு பற்றியும், பெண்வழிச் சேரல் அதிகாரம் முழுவதும் மனைவி சொல் கேட்காதே என்றும் கூறுகிறது. ஆணுக்கு கற்புப் பற்றி எதுவும் பேசவில்லை. இந்த இரண்டு அதிகாரங்களும் ஆணுக்கு சாதகமானதாகவே இருக்கிறது. வள்ளுவர் ஒரு பெண்ணாக இருந்தால் இப்படி எழுதியிருப்பார என்று பெரியார் கேள்வி எழுப்புகிறார்.

வள்ளுவரின் கருத்து ஏற்ப பல பெண்ணரசிகள் வாழ்ந்து வருவதாகவும், பெண்களுக்கு மென்மையான குணங்களும், ஆண்களுக்கு வன்மையான குணங்களும் இருக்கிறது என்று மறுப்பாளரின் கூற்றுக்கு பதிலாக பெரியார் நிறைய கூறுகிறார், அவற்றிலிருந்து சில கீழே தரப்பட்டுள்ளது. 

நாம் ஒன்றிரண்டு பெண்ணரசிகளைப் பற்றி பேசவரவில்லை என்பதையும் தற்காலத்தில் வாழும் நூற்றுக்குத் தொண்ணுற்ரொன்பதே முக்காலே மூன்று வீசமுள்ள பெண்களைப்பற்றிப் பேசுகிறோம்.

நாம் வேண்டும் பெண் உரிமை என்பது என்னவெனில் ஆணைப்போலவே பெண்ணுக்கும் வீரம், வன்மை, கோபம், ஆளும்திறம் உண்டென்பதை ஆண் மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதே ஆகும். கர்ப்பம் தரித்து பிள்ளைபெறாத காரணாத்தாலேயே ஆண் மக்களுக்கு அன்பும், சாந்தமும், பேணும்திறனும் பெண்களைவிட மாறுப்பட்டதாகி விடாதென்று சொல்வோம்.

சமூக வளர்சசிக்கு இருபாலருக்கும் நமது தோழர் குறிப்பிட்ட இருபாலர் குணங்களும் சமமாக இருக்க வேண்டும் என்பதே நமது கருத்தாகும்.

பெண்ணைக் கொள்ள ஆணுக்கு உரிமையிருந்தால், ஆணைக் கொள்ளப் பெண்ணுக்கு உரிமை வேண்டும். ஆணைத் தொழுதெழ வேண்டும் என்று பெண்ணுக்கு நிபந்தனையிருந்தால், பெண்ணையும் ஆண் தொழுதெழ வேண்டும். இதுதான் ஆண்-பெண் சம உரிமை என்பது.

பெரியார் தன் எதிர்தரப்பினருக்கு எழுதும் பதிலில் சிறந்த விவாதமுறை வெளிப்படுவதை இந்த அத்தியாத்தில் காணலாம். மறுப்பு கடிதம் எழுதியவரின் கருத்துகளின் சாரத்தை தனித்தனியாக பிரித்து, அதிலிருக்கும் குறைகளை சுட்டிக்காட்டிக் காட்டுகிறார். தன் தரப்புக்கான காரணங்களை சொல்லி தன்னுடைய கருத்தை தர்க்கரீதியக நிறுவுகிறார். 

பெரியார் வள்ளுவரின் குறள்களிலிருக்கும் காலத்துக்கு பொருந்தாத கருத்துக்களை சுட்டிக்காட்டுகிறார். வள்ளவர் குறித்தும், குறள் குறித்தும் தன்னுடைய பார்வையை கீழ்காணுமாறு பதிவு செய்கிறார்.

குறள் விஷயத்திலும், குறளாசிரியர் விஷயத்திலும் நாம்  கொண்டுள்ள பக்தி நமது தோழர் கொண்டுள்ள பக்திக்கு மீறியதல்லவானாலும் குறைந்ததல்ல என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏற்க வேண்டியதை ஏற்கவும், எதிர்க்க வேண்டியதை எதிர்க்கவும் பெரியார் துணிவுடன் இருந்திருக்கிறார் என்பதை உணரமுடிகிறது.


அத்தியாயம் மூன்று : காதல்

காதல் : அன்பு, காம இச்சை, பத்தி, விருப்பு, கொல்லுகை - ந.சி.கந்தையாவின் செந்தமிழ் அகராதி.

காதல் : அன்பு, ஆசை, ஆந்தை, கெளளி முதலியவைகளின் ஒலி, ஆவல், ஒரு பாடல், கொலை, கொல்லல், தறித்தல், மகன், முறித்தல், விரகம் - நா.கதிர்வேற்பிள்ளையின் தமிழ் மொழி அகராதி.

பார்க்காமலே காதல், சொல்லாமலே காதல், பேசாமலே காதல் என விதவிதமான திரைப்படங்கள் வந்துள்ளன. மக்களும் அவற்றைக் கொண்டாடியுள்ளனர். உண்மையில் காதல் என்பதுதான் என்ன.. இந்த அத்தியாத்தில் பெரியார் காதலை முன்வைத்து சிந்திக்கிறார்.

கற்பு என்ற சொல்லை ஆராய்ந்தது போலவே காதல் என்ற சொல்லையும் பெரியார் தீவிரமாக ஆராய்ந்துள்ளார். காதல் என்ற சொல் தமிழ் சொல்லா இல்லை வடமொழிச்சொல்லா என்று கேள்விக்குட்படுத்துகிறார். நடைமுறைப்படி காதல் என்றால் அன்பு, ஆசை, ஆவல், நட்பு, நேசம், விரகம் என்றும், அகராதிப்படி காதல் என்றால் கொலை, கொல்லை, வெட்டுதல், முறித்தல் என்றும், தனித்தமிழ்ப்படி பார்த்தால் காதல் என்பது அன்பு, ஆசை, நட்பு, நேசம் என்றும் பொருள் தருவதை இனம் காணுகிறார். 

ஒருவரைப் பார்த்தவுடன் காதல் வரலாம், ஒருவரின் திறமையைப் பார்த்து காதல் வரலாம், ஒருவரிடம் இருக்கும் சொத்து அல்லது அதிகாரம் பார்த்தும் காதல் வரலாம். காதல் வர என்ன காரணம் என்று ஆராய்ந்தால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள் இருக்கும். ஆனால் எந்த காரணத்தினால் காதல் வந்தாலும் அதனால் தனக்கு இன்பம் வரும் என்று நம்புவதாலேயே காதல் வருகிறது. இது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானதாகும் என்ற நிலைப்பாட்டுக்கே பெரியார் வந்து சேர்கிறார்.

காதல் ஒருமுறைதான் வரும் என்பதோ இல்லை காதல் தெய்வீகமானது என்பதோ இயற்கைக்கு முரணானது. காதல் என்பது ஆசை, காமம், நேசம், மோகம், நட்பு, அறிவீனம், அனுபவின்மை, ஏமாற்றம் என்பவைகளைவிடச் சிறிது கூட சிறந்தது அல்ல என்று பெரியார் கூறுகிறார். 


அத்தியாயம் நான்கு : கல்யாண விடுதலை.


நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்ற கணவன், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி என்று தினந்தோறும் செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. இது இன்று மட்டுமல்ல பெரியார் காலத்திலும் இருந்திருக்கிறது. அதனால்தான் பெரியார் அதைப்பற்றி எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் நான்காவது அத்தியாம் கல்யாண விடுதலைப் பற்றியதாகும்.


நமது கல்யாண தத்துவம் எல்லாம் சுருக்கமாய்ப் பார்த்தால் பெண்களை ஆண்கள் அடிமையாகக் கொள்வது என்றே உள்ளது என்று பெரியார் எழுதுகிறார். இன்று கால மாற்றத்தில் சில பெண்களும் ஆண்களை அடிமையாக மாற்றும் சூழல் உருவாகியுள்ளன. இதற்கெல்லாம் தீர்வாக பெரியார் கல்யாண விடுதலையை முன்மொழிக்கிறார். செங்கற்பட்டு சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் கல்யாண விடுதலை செய்துக்கொள்ள உரிமை இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டுவருகிறார்.


மனிதன் இருக்கும்வரை அனுபவிக்க வேண்டியது இன்பமும் திருப்திமேயாகும். இதற்கு ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் முக்கிய சாதனமாகும் என்று பெரியார் எழுதுகிறார். அப்படி ஒருவருக்கொருவர் இணக்கமில்லாது போகும்போது அவர்கள் கல்யாண விடுதலை செய்துக்கொள்வதே சிறந்தது. அப்படி நிகழாமல் போனால் கொலையும், ஒழுக்கக்கேடும் உருவாகும் என்பதை தெளிவாக கூறுகிறார்.


பெண்களுக்கு மனிதத் தன்மையும், மனித உரிமையும், சுயமரியாதையையும், ஆண்களுக்கு திருப்தியும், இன்பமும், உண்மையான காதலும் வேண்டுமானால் கல்யாண ரத்து உரிமை வேண்டும் என்கிறார். இப்படியான புரிதல்கள் இன்றும் இல்லாததினாலையே நிறைய கொலைகளும், திருமணத்துக்கு வெளியேனா உறவுகளும் நிகழ்கின்றன.


விவாகரத்து சட்டம் இல்லாத காலத்திலேயே இவ்வளவு தீவிரமாக பெரியார் சிந்தித்துள்ளார். அரசு கல்யாண ரத்துக்குச் சட்டம் சமீபத்தில் ஏற்படாமல் போகுமாயின் கல்யாண மறுப்புப் பிரச்சாரமும், கல்யாணம் ஆன ஆண்களுக்கும், பெண்களுக்கும் பலதாரப் பிரச்சாரமும் செய்ய வேண்டி வரும் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுகிறார்.


இப்படி உருவாகி வந்த கல்யாண ரத்தை சட்டத்தை தேவையானவர்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டாலே பல குற்றங்கள் குறையும் என்று தோன்றுகிறது.



அத்தியாயம் ஐந்து : மறுமணம் தவறல்ல

இன்று ஆணுக்கும் பெண்ணுக்கும் மறுமணம் தடையில்லாமல் நடக்கிறது. ஆனால் பெரியார் காலத்தில் மறுமணம் செய்வதை சமூக சீர்திருத்தம் பேசியவர்களே எதிர்த்துள்ளார்கள். அப்படியான சூழலில்தான் பெரியார் மறுமணம் செய்து கொள்வது தவறல்ல என்று பேசியுள்ளார். 


திருமணம் என்பதே மணமக்கள் தங்கள் வாழ்க்கைச் சவுகரியத்திற்காகச் செய்துக்கொள்ளப்படும் ஒரு ஒப்பந்தம் என்கிறார் பெரியார். சவுகரியமாக வாழமுடியாதவர்கள் கல்யாண விடுதலை பெற உரிமை வேண்டும். அப்படி கல்யாண விடுதலைப் பெற்றவர்கள் மறுபடியும் மணம் செய்து கொள்வது தவறல்ல என்பதையே இந்த அத்தியாத்தில் தெளிவுப்படுத்துகிறார். இது இருபாலருக்கும் பொருந்தும் என்றும் கூறுகிறார்.


யாரெல்லாம் மறுமணம் செய்து கொள்ளலாமென ஒரு பட்டியலே போட்டுள்ளார். அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


1. மனைவி செத்துப்போன காலத்தில்.

2. மனைவி மற்றொரு ஆணிடம் ஆசை கொண்டு வெளிப்பட்டுவிட்ட காலத்தில்.

3. தீராததீராத கொடிய வியாதியில் இருக்கும் காலத்தில்.


4. புத்தி சுவாதீமில்லாமற் போய்விட்ட காலத்தில்.

5. மனைவி அறியாமையாலோ முரட்டு சுபாவத்தாலோ கணவனை லட்சியம் செய்யாமல் ஏறுமாறாய் நடந்து கொள்ளும் சூழலில்.

6. புருஷன், பெண்ணின் மனத்திற்குத் திருப்திப்படாததாலோ அல்லது வேறு காரணத்தாலோ புருஷனிடம் பெண்ணுக்கு அன்பும், ஆசையும் இல்லாமல் வெறுப்பாய் இருக்கும்போதும்.


7. மேற்கண்ட குணங்களுடன் அடிக்கடி தாய் வீடுக்குப் போய்விடும் சூழலில்.

8. புருஷனுடைய கொள்கைக்கு நேர் மாற்றான கொள்கையுடன் புருஷன் சங்கடப்படும்படி பிடிவாதமாய் நடந்துகொள்ளும் சுபாவமுடியவளாக இருக்கும்போதும்.

9. செல்வச் செருக்கால் புருஷனைப்பற்றி லட்சியமோ கவலையோ இல்லாமல் நடந்துகொள்ளும் சூழலில்.

எந்தெந்தக் காரணத்தால் புருஷனுக்குப் பெண் பிடிக்கவில்லையோ, ஒத்துவரவில்லையோ அந்தக் காரணங்களால் பெண்ணுக்குப் புருஷன் பிடிக்காதபோது, இப்போது புருஷனுக்கு இருக்கவேண்டுமென்று சொல்லப்படும் சுதந்திரமும், சவுகரிகமும் பெண்களுக்கும் வேண்டும் என்று பெரியார் கூறுகிறார்.

அத்தியாயம் ஆறு : விபச்சாரம்.

ஒரு ஆணும் பெண்ணும் காதலர்களாக இருக்கிறார்கள். காதலன் ஒரு சட்டவிரோத செயலில் ஈடுபட்டதினால் அவனை காவல்துறை தேடிக்கொண்டிருக்கிறது. அதனால் அவன் வெளிநாடு தப்பிச்செல்ல தயாராகிறான். காதலியையும் உடன் கூப்பிடுகிறான். சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்ற ஆசையிலிருக்கும் காதலி வெளிநாடு வரமுடியாது என்கிறாள். இருவருக்கும் இடையில் வேறுசில மன சங்கடங்களும் இருக்கிறது. ஆனாலும் அவ்வப்போது சந்திகொள்கின்றனர். காதலிக்கு ஒரு படத்தில் கதநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த மகிழ்ச்சியை காதலனுடன் கொண்டாடுகிறாள். அதன் உச்சமாக அவர்களுக்கு இடையே பாலியல் உறவு நிகழ்கிறது. காதலி பாலியல் உறவுக்கு ஒத்துக்கொண்டதால் அவள் தன்னுடன் வெளிநாடு வர ஒப்புக்கொண்டதாக காதலன் கருதுகிறான். அதை அவளிடம் வெளிப்படுத்தவும் செய்கிறான். ஆனால் அவள் அதை மறுக்கிறாள். தான் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்ததால் மட்டுமே இதற்கு ஒத்துக்கொண்டேன் மற்றபடி நம்முடைய பிரச்சனைகளை மறக்கவில்லை என்கிறாள். அப்போது காதலன், என்ன விபச்சாரி மாதிரி பேசுற என மிக இயல்பாக கேட்கிறான். அங்கு கனத்த அமைதி. அடுத்து இவர்கள் இப்படி இருக்கும்போது காதலியோட அம்மா வந்துவிடுகிறார். காதலி ஒருவாறு சமாளித்து காதலனை வெளியே அனுப்பி விடுகிறார். காதலன் சென்ற பிறகு காதலியின் அம்மா அவளை விபச்சாரி என திட்டுகிறாள். 

இது 2017-ல் வெளிவந்த Mayanathi என்ற மலையாள திரைப்படத்தில் வரும் காட்சியாகும்.

இருபாலரும் விரும்பி ஈடுபடும் பாலியல் உறவு பிரச்சனையாக மாறும்போது முதலில் பெண்ணை நோக்கியே விபச்சாரி என்ற வசைச்சொல் வந்து விழுகிறது. அந்த உறவில் ஈடுபட்ட ஆணை திட்டும் வசைச்சொல்கூட பழக்கத்தில் இல்லை. இன்றும் விபச்சார அழகிகள் என்று பெண்களின் படத்தோடுதான் பெரும்பாலன விபச்சாரம் சார்ந்த செய்திகள் வருகிறது. விபச்சார அழகன் என்று அந்த உறவில் ஈடுப்பட்ட ஆணை சுட்டும் சொல்லை காணோம். ஏன் இப்படியான பாகுபாடு நிலவுகிறது.

விபச்சாரம் என்று எதை அழைக்கிறார்கள். அந்த சொல்லின் உண்மையான பொருள் என்ன. பெண்களை விபச்சாரி என்று திட்டும் வசைச்சொல்லுக்கு இணையாக ஆணை குறிக்க ஏன் வசைச்சொல் இல்லை என்று பெரியார் ஆராய்கிறார். பெண்ணை அடிமை படுத்த ஆண் உண்டாக்கிய வார்த்தைகளே கற்பு, விபச்சாரம் எல்லாம். இந்த சொற்கள் ஏன் இருபாலருக்கும் பொதுவாக இல்லை என்று யோசித்தால் உண்மைநிலை புரிந்துவிடும்.

இயற்கையோடு இணைந்த வாழ்வு எதுவென்பதையும், எவ்வித நாட்டுப் பற்று, நடப்புப்பற்று, பிறப்புப்பற்று என்பதெல்லாம் நடுநிலையிலிருந்து தன் அனுபவத்தையும், தன் மனதில் தோன்றும் உணர்ச்சிகளையும், ஆசைகளையும் ஒரு உதாரணமாகவும் வைத்துக்கொண்டு, பரிசுத்தமான உண்மையைக் காணுவானேயானால், அப்போதும் கற்பு, விபச்சாரம் என்னும் வார்த்தைகள் வெறும் புரட்டு என்பது, மற்றவர்களை அடிமையாக்கவும், கட்டுப்படுத்தவும் உண்டாக்கப்பட்ட சுயநலச் சூழ்ச்சி நிறைந்த தன்மை கொண்டது என்பதும் தானாகவே விளங்கிவிடும் என்று பெரியார் தெளிவுப்படுத்துகிறார். 


அத்தியாயம் ஏழு : விதவைகள் நிலைமை.

ஒரு கொள்கையை பின்பற்றும்போது அதன்படியே வாழவேண்டும் என்பதுதான் நேர்மையான செயலாகும். அப்படி எல்லோராலும் கொள்கைபிடிப்புடன் வாழமுடிவதில்லை. பெரியார் நாத்திகராக மாறியபோது அவர் வீட்டுப்பெண்களையும் கோவிலுக்கு போகாமல் இருக்க செய்தார். அவர் கள்ளுக்கடை மறையல் போராட்டம் நடத்தி சிறைக்கு சென்றப்பின் அவரின் மனைவியும் சகோதரியும் போராட்டத்தை தொடர்ந்தார்கள். வைக்கம் போராட்டத்தின் போதும் இவ்வாறாக நடந்து கொண்டார்கள் எனபது வரலாறு. இதெல்லாம் அவர் சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசமில்லாமல் வாழ்ந்தார் என்பதற்கான ஆதாரங்கள். அப்படியான மற்றொரு ஆதாரமே விதைவைகள் நிலைமைப்பற்றிய அவருடைய சிந்தனைகளும் செயல்களுமாகும். 

இந்திய நாட்டின் ஆட்சி உரிமை இந்திய மக்களுக்கே கிடைக்கவேண்டுமென அரசியல் சீர்திருத்தகாரர்களும், இந்திய மக்களுக்குள்ளிருக்கும் வகுப்பு பிரிவினையும், சாதிய வேற்றுமையும் ஒழியவேண்டுமென சமூகசீர்திருத்தகாரர்களும் போராடுகிறார்களேயன்றி, மக்கள் கூட்டத்தில் ஒரு பகுதினராகிய பெண்கள் ஒருப்பக்கம் அழுத்தப்பட்டு வருவதைப்பற்றி எவருமே போதிய கவலைக் கொள்வதாக காணோம் என்று பெரியார் முதலில் அன்றைய அரசியல் சூழ்லை விவரிக்கிறார். மற்றவர்களின் பார்வையில் போதிய கவனம்பெறாத விதவைகளின் நிலைமைக்குறித்து விரிவாக எழுதுகிறார்.

விதைவைகள் நிலைமைக்குறித்து கவலைப்படும் பெரியார் அதற்கு என்ன செய்துள்ளார்கள் என்று மற்றவர்கள் கேள்வி எழுப்பக்கூடும் என்பதை அறிந்த அவர் தன்னைப்பற்றி ஒரு அறிமுகத்தை கீழ்கண்டவாறு எழுதுகிறார்.

நான் கர்னாடக பலிஜா நாயுடு வகுப்பில் பிறந்தவன். என் வகுப்பார் பெண் மக்கள் முக்காடுடன் கோஷாவாக இருக்க வேண்டியவர்களனெவும், விதவா விவாகத்தை அனுமதிக்காப்படாத வகுப்பினரெனும் வழங்கப்படுபவர்கள். நான் பிறந்த குடும்பமோ அளவுக்கு மிஞ்சிய ஆசாரத்தையும், வைணவ சம்பிரதாயத்தையும் கடுமையாய் ஆதரிக்கும் குடும்பம். இப்படி இருந்த போதிலும் என்னுடைய ஏழாவது வயதிலிருந்தே மக்களில் உயர்வு தாழ்வு கற்பித்தலையும், ஒருவர் தொட்டதை மற்றொருவர் சாப்பிடலாகாதெனச் சொல்வதையும் நான் பரிகாசம் செய்து வந்ததோடு, எவரையும் தொடுவதற்கும், எவர் தொட்டதையும் சாப்பிடுவதற்கும் நான் பின் வாங்கியதே கிடையாது என்று பெரியார் தன்னைப்பற்றி விவரித்து எழுதுகிறார். அவர் சகோதரியின் விதைவை மகளுக்கு மறுமணம் செய்து வைக்கிறார். இது முழுக்க அவரின் முன்முயற்சியால் நடக்கிறது. அதனால் தனக்கு விதைவைகளின் நல்வாழ்வு குறித்து பேசும் யோக்கியதை இருப்பதாக கூறுகிறார்.

விதைவைகளின் விஷயம் எனது நினைவிற்கு வரும்பொழுதும் – நேரில் காண நேரும்போதும் இது உலக இயற்கை அல்ல, எளியாரை வலியார் அடக்கி ஆண்டு இம்சிப்பதேயாகும் என்றே முடிவு செய்வேன் என பெரியார் எழுதுகிறார். இதற்கு காரணம் என்ன என்று ஆராய்கிறார், மதம் மற்றும் ஆண்களின் அடக்கியாளும் குணம் பெண்களை அடக்கியாள்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறார்.

பெரியார் எதை மக்களுக்கு சொன்னாரோ அதை அவர் வாழ்வில் கடைப்பிடிக்க தயங்கவேயில்லை என்பதும், அவர் வெளிப்படைத்தன்மையோடே வாழ்ந்து தனது கொள்கையை சிந்தித்துள்ளார் என்பதும் இந்த அத்தியாத்தை படிக்கும்போது புரிந்துக்கொள்ள முடிகிறது.


அத்தியாயம் எட்டு : சொத்துரிமை.

அருளில்லார்க்கு அவ்வுலம் இல்லை பொருளில்லார்க்கு 

இவ்வுலகம் இல்லாகி யாங்கு.               – குறள் : 247.

பொருள் இல்லார்க்கு இவ்வுலம் இல்லாது போய்விடும் என்கிறார் வள்ளுவர்.

இந்திய சமூகத்தில் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டிய கொடுமைகள் இரண்டு என பெரியார் சொல்கிறார். 

முதலாவது இந்திய மக்களிலேயே பலகோடி ஜனசங்கியை உள்ள பல சமூகங்களைப் பிறவியிலேயே தீண்டாதவர்கள் என்று கற்பித்து, அவர்களை பகுத்தறிவற்ற மிருகங்களிலும் கேவலமாக உணர்ச்சியற்ற பூச்சி புழுக்களிலும் இழிவாக நடத்துவதாகும்.

இரண்டாவது இந்திய பெண்கள் சமூகத்தையே அடியோடு பிறவியில் சுதந்திரத்திற்கு அருகதையற்றவர்கள் என்றும், ஆண்களுக்கு அடிமையாகவே இருக்க கடவுளாலேயே சிருஷ்டிக்கப்பட்டவர்கள் என்றும் கற்பித்து, அவர்களை நகரும் பிணங்காளாக நடத்துவதாகும்.

மேற்கண்ட தீமைகளை ஒழிக்கவே பெரியார் நிறைய சிந்தித்தார், அதன்படியே செயல்பட்டார். இந்த அத்தியாத்தில் இரண்டாவது தீமையான பெண்களின் பிரச்சனைகள் தீர சொத்துரிமை அவசியம் என்று உறுதிபட கூறுகிறார்.

பெண்கள் தாங்கள் விரும்பிய ஆணை திருமணம் செய்துக்கொள்ளவும், திருமணத்திற்கு பிறகு கணவன் இறந்து விட்டாலோ இல்லை திருணமனபந்தத்தில் வேறு பிரச்சனைகள் ஏற்பட்டால் விவாகரத்து பெறவும், விவகாரத்திற்கு பிறகு மறுமணம் செய்துக்கொள்ளவும் பெண்களுக்கு சொத்துரிமை அவசியமாகிறது.

இந்திய ஒன்றியத்தில் அண்மையில்தான் பெண்களுக்கு சொத்துரிமை சட்டத்தை கொண்டுவந்தார்கள். தமிழ்நாட்டில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவந்தார்கள். ஆனால் பெரியார் அதற்கும் நாற்பது ஆண்டுகளுக்கு முன், அதாவது சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொந்துரிமை வேண்டும் என சிந்தித்துள்ளார். அதனால்தான் அவர் என்றும் பெரியாராக விளங்குகிறார்.



அத்தியாயம் ஒன்பது : கர்ப்பத் தடை.

மக்கள் தொகையை குறைக்க அரசு கர்ப்பதடையை ஊக்குவிக்கிறது. குடும்ப வாழ்வில் இருப்போர் தங்கடைய பொருளாதார நிலைக்கு இந்தனை குழந்தைகள் போதும் என்று கருதும்போது அவர்களாகவே முன்வந்து கர்ப்பத் தடை செய்து கொள்கின்றனர். அதிக குழந்தை பெற்றால் பெண்களின் உடல்நிலை சீர்கெடும் என்ற காரணத்துக்காகவும் கர்ப்பத் தடை செய்துகொள்கின்றனர். இப்படி கர்ப்பதடைக்கு பலவிதமான காரணங்கள் இருக்கின்றன. ஆனால் பெரியார் கர்ப்பத் தடைக்கு சொல்லும் காரணம் வேறு. 

கர்ப்பத் தடையின் அவசியத்தைப்பற்றி நாம் கருதும் காரணங்களுக்கும் மற்றவர்கள் கருதும் காரணங்களுக்கும் அடிப்படையான வித்தியாசமிருக்கின்றது. அதாவது பெண்கள் விடுதலையடையவும், சுயேச்சை பெறவும் கர்ப்பதை அவசியமென்று நாம் கூறுகின்றோம் என்று பெரியார் கர்ப்பத் தடைக்கான காரணத்தை தெளிவுப்படுத்துகிறார்.

கர்ப்பத் தடை பெண்களுக்கு விடுதலையையும், சுயேச்சையையும் பெற்று தந்துவிடுமா..?, திருமணம் செய்து கொள்ளாத அல்லது குழந்தைப்பெற்றுக்கொள்ளாத பெண்கள் சுதந்திரமாக இருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பினால் கிடைக்கும் பதில் திருப்திகரமானதில்லை.

பெரியார் முந்தைய அதியாமொன்றில் சொன்னதுபோல் மனிதனுக்கு வாழ்க்கையில் திருப்தியும், இன்பமும் முக்கியானது. அது குழந்தைப் பெற்றுக் கொள்வதிலும் இருக்கிறது. எனவே கர்ப்பத் தடை என்பது மனித இன்பத்திற்கும் திருப்திக்கும் எதிரானதாகும்.

யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும், உனது புத்திக்கும், பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே என்பது பெரியாரின் பிரபலமான மேற்கோளாகும். இந்த சிந்தனையை ஆதாரமாக வைத்துக்கொண்டு பார்க்கும்போது பெண்களுக்கு கர்ப்பத் தடை வேண்டும் என்ற பெரியாரின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் பெண்களின் விடுதலைக்கு பெரியாரின் மற்ற சிந்தனைகள் அவசியம் என்பதே நமக்கு மாற்று கருத்து கிடையாது.


அத்தியாயம் பத்து : பெண் விடுதலைக்கு “ஆண்மை” அழியவேண்டும்.

பெண் அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டுமானால் ஆண்களையும், ஆண்மை என்ற தத்துவத்தையும் சரியாக புரிந்து கொண்டு செயலாற்றினால்தான் விடுதலைப்பெற முடியும் என்பதை பெரியார் இந்த அத்தியாத்தில் விளக்கியுள்ளார்.

பெண்கள் விடுதலைக்கு ஆண்கள் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளர்வதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழியே வேறல்ல. எங்காவது பூனைகளால் எலிக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு, கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது பார்ப்பனர்காளால் பார்ப்பனரல்லாதவர்களுக்குச் சமத்துவம் கிடைக்குமா? என்று பெரியார் கேள்விகளை எழுப்புகிறார்.

”ஆண்மை” என்னும் பதமே பெண்களை இழிவுபடுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது என்பதைப் பெண்கள் மறந்துவிடக் கூடாது. அந்த “ஆண்மை” உலகிலுள்ள வரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லை என்பதை பெண்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். உலகத்தில் “ஆண்மை” நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் “ஆண்மை” என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலல்லாது பெண்களுக்கு விடுதலை இல்லை என்பது உறுதி என்று பெரியார் கூறுகிறார்.

ஆண், பெண் சமத்துவம் இருந்தால் மட்டுமே வாழ்வு இனிமையானதாக இருக்கமுடியும். அதற்குத்தேவையான சிந்தனைகளின் தொகுப்பாகவும் பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் புத்தகத்தை பார்க்கலாம். ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு ஒருவர் மீது மற்றவர் அதிகாரம் செலுத்தாமல் வாழ வழிக்காட்டும் சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள இந்த புத்தகம் உதவும் என்று உறுதியாக நம்புகிறேன்.


பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 1-11 தேதிகளில் எழுதியது.


















புத்தகங்கள் 2024

  இந்த ஆண்டில்(2024) நான் படித்த புத்தகங்கள்: நாவல்: 01. ஹமார்ஷியா – கண்ணன் ராமசாமி. 02. ஆலம் – ஜெயமோகன். 03. வேட்டை நாய்கள் பாகம்.1 – நரன்....