12.28.2020

பதிவு. 43

 இருளின் மீது ஒளிவீசும் பூர்ணிமை.

நாம் விரும்பி படிக்கும் படைப்பாளிகள் பெரும்பாலும் கால் நூற்றாண்டுக்கு முன் தொடங்கியவர்கள் அல்லது அதற்குமுன்பே வாழ்ந்து மறைந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்று ஒரு நண்பர் சொன்னபோது எனக்கு பெரும் வியப்பாக இருந்தது. ஆனால் யோசித்து பார்த்ததில் அதில் உண்மை இருந்தது. அந்த உரையாடலுக்கு பிறகு புதிய படைப்பாளிகளை அல்லது இதுவரை படிக்காத படைப்பாளிகளின் படைப்புகளை படிக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டோம்.
இப்படியான சூழலில் அண்மையில் ஒரு நண்பரின் அலுவலகத்திற்கு சென்று இருந்தபோது க.வீரபண்டியனின் பூர்ணிமை சிறுகதை தொகுப்பை பார்த்தேன். அட்டைப்படமும் புத்தகத்தின் தலைப்பும் என்னைக் கவர்ந்தது, எடுத்துப் பார்த்தேன். அந்த படைப்பாளியின் முதல் தொகுப்பு என்று தெரிந்ததும் ஆர்வமாகி தலைப்பு கதையை படிக்க தொடங்கினேன், நல்ல தொடக்கமாக இருந்ததினால் உடனே அந்த புத்தகத்தை கடன் வாங்கி வந்துவிட்டேன்.
இந்த தொகுப்பில் மொத்தம் 12 சிறுகதைகள் இருக்கின்றன. 2017 அக்டோபர் தொடங்கி 2018 ஜீலைக்குள் இதழ்களில் ( செம்மலர், உயிர் எழுத்து, கணையாழி, காக்கைக் சிறகினிலே, காலச்சுவடு, ஆனந்த விகடன் மற்றும் நம் நற்றிணை ) வெளிவந்துள்ளது.
தெருக்களை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலார்கள், சாலையோரம் சாக்கு நிழலில் செருப்பு தைக்கும் தொழிலாளி, சாதிய ஆணவ கொலையில் காதலனை இழந்த காதலி, இரவில் சாலையோரம் நின்று வாடிக்கையாளனை தேடும் பாலியல் தொழிலாளி, பிப்பாக்கெட் அடிக்கும் சிறு திருடர்கள், மூன்று சீட்டாடுபவர்கள், கழிவு நீர் தொட்டியில் இறக்கப்பட்டு வாழ்வை இழந்த தொழிலாளிகள், மாட்டுக்கறி மற்றும் வெள்ளாட்டுக்கறி விற்பனை செய்வோர், விவசாய கூலித்தொழிலாளி மற்றும் குப்பை பொறுக்குவோர் என இந்தகதைகளின் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் எளிய அல்லது விளிம்புநிலை மனிதர்களாக இருக்கிறார்கள். இதுவே இந்த தொகுப்பின் சிறப்பாகும்.
சில கதைகள் சிறப்பாக இருக்கிறது. சில கதைகளை இன்னும் நன்றாக எழுதி இருக்கலாம் என்று எண்ணுகிறேன். இந்த கதையின் தலைப்புக்கதையான பூர்ணிமை இந்த தொகுப்பின் சிறந்த கதை மட்டுமல்ல சமகாலத்தில் நான் வாசித்த சிறுகதைகளிலும் மிகவும் சிறப்பான கதையாகும்.
அண்மையில் நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போது சமூகத்தில் பெரும் அதிர்வை உண்டாக்கிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு படைப்பை உருவாக்கும்போது படிப்பாளியின் பார்வை எப்படி இருக்க வேண்டும். இதுவரை ஊடகங்களில் வெளிவந்த தகவல்களை அப்படியே எடுத்துக் கொள்ளமுடியுமா என்றெல்லாம் விவாதித்தோம். அதற்கு விடை சொல்வது போல் பூர்ணிமை சிறுகதை விளங்குகிறது. உலகத்துக்கே தெரிந்த சம்பவத்தை எடுத்துக்கொண்டு சிறப்பான படைப்பாக உருமாற்றியுள்ளார். அந்த கதை நம்முள் பல சிந்தனைகளை தூண்டுகிறது.
க.வீரபாண்டியனின் எழுத்து நடை இயல்பாக இருக்கிறது. குறைந்த சொற்களில் காதபாத்திரத்தை நம்முன் காட்சி படுத்திவிடுகிறார். இதுதான் அவருக்கு முதல் தொகுப்பு என்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது.
புத்தகத்தின் அட்டைப்படம் நன்றாக உள்ளது. அகத்தின் அழகு முகத்தில் என்பதுபோல் புத்தகத்தின் உள்ளடக்கத்திற்கு ஏற்ற வகையில் அட்டைப்படத்தை மணிவண்ணன் சிறப்பாக வடிவமைத்துள்ளார்.
கடைசிக்கதை வெளியானதுக்கு அடுத்த மாதமே (018 ஆகஸ்ட்) இந்த கதைகள் பூர்ணிமை தொகுப்பாக வெளியாகியுள்ளது. இந்த புத்தகத்தை டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் சிறப்பாக பதிப்பித்து வெளியிட்டுள்ளது.
இந்த வாசிப்பை சாத்தியமாக்கிய நண்பர் கோவிந்தராஜ் ரங்கநாதன் அவர்களுக்கு என்மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

24.11.2020.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 373.

இந்த அவசர யுகத்திலும் கலங்காமல் காத்திருக்க...