12.28.2020

பதிவு. 42


 வீடு : திரைக்கதை – உரையாடல்

சில புத்தகங்களை கைக்கு வந்ததுமே படித்து முடித்துவிடுவோம். சில புத்தகங்கள் நம் கைக்கு வந்து பல ஆண்டுகள் கழித்தும் படிக்காமலே வைத்திருப்போம். அந்த புத்தகத்தை தேடிப்பிடித்து வாங்கியிருப்போம் அது தனிக்கதை. வீடு திரைக்கதை புத்தகத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே புத்தக கண்காட்சியில் வாங்கியிருந்தாலும் கடந்த வாரம்தான் படித்து முடித்தேன்.
பொதிகை தொலைக்காட்சியில் வீடு படம் பார்த்தது நினைவுக்கு வந்து சென்றது. ஏன் பிடிக்கிறது என்று தெரியாமலே மனசுக்குள் நுழைந்து கொள்ளும் படங்களில் ஒன்றாகவே வீடு படம் பார்த்த அனுவம் எனக்குள் பசுமையான நினைவாக இருக்கிறது.
இந்த புத்தகம் மூன்று பகுதியாக இருக்கிறது. முதல்பகுதி வீடு படத்தின் திரைக்கதை உள்ளது. திரைக்கதையை படிக்கும்போதே படம் மனதில் ஓடதொடங்கி விடுகிறது.
இரண்டாவது பகுதி வீடு படம் பற்றிய ஒன்பது ஆளுமைகளின் கட்டுரைகள் ( விமர்சனம் மற்றும் அனுபவங்கள் ) இருக்கின்றன. குறைவான வசனங்களுடன் சிறப்பான காட்சி மொழியில் இருக்கிறது என்று ஒருவரும், வீடு படத்தில் வசனம் மிக சிறப்பாக இருக்கிறது மற்றொருவரும் கூறுகின்றனர். இரண்டு தரப்பினர் சொல்லும் விளக்கங்களையும் நாம் ஏற்றுக்கொள்வதோடு, இப்படி ஒரு பார்வை இருக்கிறதா என்று நாம் வியக்கவும் செய்வோம். ஒவ்வொருவரும் வீடு படம் பார்த்த அனுபவமே சுவராசியமானதாக இருக்கிறது.
இறுதியாக இயக்குனரின் நீண்ட நேர்காணல் உள்ளது. தன்னுடைய படங்களிலேயே நான் குறைவான தவறுகளை செய்துள்ள படங்கள் வீடு மற்றும் சந்தியா ராகம் என்று பாலுமகேந்திரா கூறுகிறார். வீடு பட கதைக்கான காரணம், நடிகர்கள் தேர்வு, படபிடிப்புக்காக ஒரு வீடு கட்டிய கதை, அந்த வீடு இன்று படபிடிப்பு தளமாக உள்ளகதை, இளையராசாவின் இசை அதன் மேன்மை என்று பலவற்றையும் மனந்திறந்து பேசுகிறார்.
இந்த புத்தகத்தை படித்ததும் வீடு படத்தை மறுபடியும் பார்த்தேன். அது சிறப்பான அனுபவமாக இருந்தது. திரைக்கதையை படித்துவிட்டு படத்தை பார்த்தால் அது படத்தை இரண்டாவது முறையாக பார்ப்பது போல் இருக்கிறது.
இந்த புத்தகத்தை வம்சி பதிப்பகம் சிறப்பாக வெளியிட்டுள்ளது.

16.11.2020.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 373.

இந்த அவசர யுகத்திலும் கலங்காமல் காத்திருக்க...