3.28.2020

பதிவு . 29

கற்பனையை மிஞ்சும் உண்மைகள்.
ராஜீவ்காந்தி படுகொலை சம்மந்தமாக பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் நான் வாசிக்க வேண்டும் என்று நினைத்து நீண்ட காலமாக வாசிக்கமுடியாமல் இருந்த திருச்சி வேலுசாமியின் ‘’தூக்குக் கயிற்றில் நிஜம்’’ என்ற புத்தகத்தை இன்று வாசித்து முடித்தேன். ஒரு துப்பறியும் நாவலில் இருக்கும் திருப்பங்களை விடவும் திடுக்கிட வைக்கும் உண்மைகள் நிறைந்த புத்தகம் இது என்றால் அது மிகையாகாது.
அரசியல் அதிகாரத்திற்காகவும் மற்றும் பணத்துக்காகவும் நம் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இவ்வளவு குரூரமாக செயல்படுவார்கள் என்பதை அறியும்போது நம்முள் திகில் பரவுவதை தடுக்கமுடியாது.
காந்தி கொலைவழக்கு மற்றும் இந்திரா காந்தி கொலை வழக்குகளிலிருந்து அரசு கற்றுக்கொண்டதைக்காட்டிலும் கொலைகாரர்கள் நிறைய பாடங்களை கற்றுக்கொண்டுள்ளார்கள் என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் ராஜீவ் கொலை வழக்கு விசாரணை அப்படி நடந்து முடிந்திருக்கிறது. கொலைகாரர்களால் வழக்கு விசாரணையை திசை திருப்புவதற்கும் மற்றும் முக்கியமான ஆவணங்களை காணாமலடிக்கவும் முடிந்திருக்கிறது. அதைவிடவும் முக்கியமானது இந்த வழக்கில் யாரையெல்லாம் சிக்கவைக்க வேண்டும் என்பதையும் அவர்களே முடிவு செய்துள்ளார்கள்.
விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் வழக்கு செல்லாமல், முன்முடிவுகளுடன் யாரையெல்லாம் குற்றவாளியாக்க வெண்டுமென அவர்கள் நினைத்தார்களோ அப்படியாகவே விசாரணை நடந்து முடிந்திருக்கிறது. அப்பாவிகள் தண்டனை அனுபவிக்கிறார்கள். குற்றவாளிகள் அரசு செலவிலான பாதுகாப்பு படையின் பாதுகாப்பிலிருந்தபடியே அடுத்த குற்றத்திற்கான திட்டத்தை தீட்டியபடி வாழ்வை சொகுசாக வாழ்கிறார்கள். இந்திய ஒன்றியத்தின் சட்டம் எவ்வளவு பலவீனமாக்கபட்டிருக்கிறது என்பதனை அவர்கள் நமக்கு உணர்த்தியபடி உலா வருகின்றனர்.
ஒரு முன்னாள் பிரதமர் கொலை செய்யப்படுகிறர். அவருடைய கட்சி மிகவும் பாரம்பரியம் மிக்கது. அவரது இறப்புக்கு பிறகு அவரது கட்சியே ஆட்சிக்கு வருகிறது, ஆனாலும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு கட்சிக்காரர்களும் தலைவரின் கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளனர். தலைவர் உயிருடன் இருக்கும்போது தன்னை மிகவும் விசுவாசியாக காட்டிக்கொண்டவர்கள்தான் அவர் கொலைசெய்யப்படவும் உடந்தையாக இருந்துள்ளார்கள். இதனால்தானோ எல்லா அரசியல்வாதிகளும் வாரிசு அரசியலை ஊக்கபடுத்துகிறார்களோ என தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.
ராஜீவின் இறப்பின் காரணமாக அதிகாரத்துக்கு வந்தவர்களும் எதுவும் செய்ய முடியாத அளவுக்கு எல்லா இடங்களிலும் குற்றவாளிகளின் ஆதிக்கம் நிறைந்து இருந்திருந்திருகிறது. இந்த புத்தகத்தில் பல உண்மைகள் வெளிப்படையாக பேசப்பட்டுள்ளது. சில தலைவர்களின் அபூர்வமான நல்ல குணநலன்களும் பல தலைவர்களின் அல்பத்தனங்களும் இதில் பதிவாகியுள்ளது.
விடுதலைபுலிகளுக்கும் ராஜீவிற்குமான உறவு எப்படி இருந்தது, அவர்கள் இவரை கொன்றார் என்ற பழி யாரால் வலுப்பெறுகிறது, சுப்ரமணியசாமி யார், சந்திராசாமி யார் அவர்களின் உணமையான முகம் என்ன, வேலுசாமிக்கும் இந்த வழக்குக்குமான உறவு என்ன, அவரின் நோக்கம் என்னவாக இருக்கிறது என்பதையெல்லாம் மிகவும் தெளிவாக தர்க்கபூர்வமாக விளக்கியுள்ளார்.
அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. இந்திய ஒன்றியத்தின் சட்டம், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் எப்படி செயல்படுகிறது எனபதையெல்லம் இந்த புத்தகத்தில் எளிமையாக எல்லோருக்கும் புறியும்படி சொல்லியுள்ளார். திருச்சி வெலுசாமி சொன்ன விசயங்களை பா.ஏகலைவன் மிகவும் சிறப்பாக தொகுத்துள்ளார்.
இந்த புத்தகத்தை பேட்ரிஷியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பேட்ரிஷியா என்றால் இலத்தீன் மொழியில் கிடைப்பதற்கறிய பொக்கிஷம் என்று பதிப்பாளர் ஆபிரகாம் செல்வகுமார் சொல்கிறார். அது முற்றிலும் உண்மைதான் என்பதை புத்தகத்தை வாசித்து முடித்ததும் நம்மால் உணரமுடியும்.                                                                                                                                                                                                                                                                                                                                                                     09.01.2020.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திரைப்படங்கள் 2022.

  2022 - நான் பார்த்த படங்கள்.   01.      சனவரி : Intolerable Cruelty – Joel coen. 02.      The worst person in the world – Joachim T...