பிரபஞ்சனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – தொகுப்பாசிரியர் பி.என்.எஸ்.பாண்டியன்.
எழுத்தாளர் பிரபஞ்சனின் முதலாமாண்டு நினைவேந்தலில் வெளிடப்பட்ட இந்த சிறுகதை தொகுப்பில் மொத்தம் 14 சிறுகதைகள் உள்ளன. மனிதர்களில் பலவகையானவர்கள் இருப்பதை போலவே அந்த மனிதர்களை படைப்பில் கொண்டுவரும் படைப்பாளிகளும் பலவகையினராக இருக்கின்றனர்.
பிரபஞ்சன் அன்பானவர்களின் வாழ்வை எழுதி சென்ற அசலான அன்பான மனிதர் மற்றும் படைப்பாளி. அவருடைய கதைகளில் வரும் மனிதர்கள் மிகவும் அன்பானவர்கள். மேன்மையான குணம் கொண்டவர்கள். பிரபஞ்சன் மிகவும் மென்மையான மொழியில் தன் கதைகளை நம் மனதில் எளிதில் பதியும்படி எழுதியுள்ளார் என்றால் அது மிகையாகாது.
ஒர் அறிவு உயிரான முருங்கை மரத்துக்கும் ஒரு குடும்பத்துக்குமான உறவை சொல்லும் பிரும்மம், அஃறிணையான வேட்டிக்கும் ஒரு குடும்பத்துக்குமான உறவை சொல்லும் அப்பாவின் வேஷ்டி, கற்பிப்பதற்காக தன் வாழ்க்கையை அற்பணித்த கமலா டீச்சர், கணவனின் இரண்டாவது மனைவிக்கு நல்லது செய்துவிட துடிக்கும் யாசுமின் அக்கா, தன்னை கொல்லவந்தவனை யாருக்கும் காட்டிக்கொடுக்க விரும்பாத மக்களை நேசிக்கும் அண்ணாச்சி.
ஐந்தறிவு உயிரான பசு மாட்டுக்கும் ஒரு குடும்பத்துக்குமான உறவை சொல்லும் மனுஷி, உலகுக்கே சமத்துவம் சொல்லிய பிரெஞ்சு அரசோடு சுயமரியாதைக்காக சட்ட போராட்டம் நடத்தும் வழக்கறிஞரின் கதையை சொல்லும் பாதுகை, வழிதவறிய மாணவியை நல்வழிபடுத்தும் ஆசிரியரின் கதையை சொல்லும் மரி என்கிற ஆட்டுக்குட்டி, மத ஆதிக்கத்திலிருந்துகொண்டு மனிதநேயத்தை காக்க முடியாது என வெளியேற்றம் செய்த மடாதிபதி.
குமாரசாமியின் பகல் பொழுது கதையில் சென்னை நகர வாழ்வின் அவலத்தையும், ஒரு மதிய பொழுதில் நெரூதாவின் வாழ்வை சொல்லும் திரைப்படம் பார்க்க சென்றுவந்த அனுபவத்தையும் சொல்கின்றன. நகரத்தில் தனிமையில் வாழ நேர்ந்த மருத்துவரின் துயரை சொல்லும் குழந்தை அழுதுக்கொண்டே இருக்கிறது கதை, இறந்தவரை புகைப்படம் எடுக்க சென்றுவந்த கதையான ஒரு நெகடிவ் அப்ரோச், பிளையார் கோவிலை விலைபேசும் கதையான ஓடாத பிள்ளையாரும் ஓடிய காவேரியும்.
பிரபஞ்சன் வாழ்ந்த புதுச்சேரி, தஞ்சாவூர் மற்றும் சென்னை ஆகிய நகரங்களே அவருடைய கதைளின் களமாக உள்ளன. சின்ன சின்ன வாக்கியங்களின் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களையும், அவலங்களையும் நம்முள் எளிதாக கடத்திவிடுகிறார்.
பிரபஞ்சனின் இறுதிகாலத்தில் அவருடனிருந்து அவரை கவனித்துக்கொண்ட படைப்பாளி பி.என்.எஸ்.பாண்டியன் இந்த தொகுதிக்கான கதைகளை தேர்வு செய்து தொகுத்துள்ளார். அவருக்கு என்னுடைய நன்றிகளும் பாராட்டுகளும்.
இந்த தொகுப்பிலுள்ள எல்லாகதைகளுமே அன்பானவர்களை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. மெல்லிய நகைச்சுவை எங்கும் நிறைந்திருக்கிறது.
இந்த தொகுப்பை 2019 ஆண்டில் முதல் பதிப்பாக, Discovery Book Palace சிறந்த முறையில் வெளியிட்டுள்ளது.
இந்நூலை வாசிக்கும் வாய்ப்பை உருவாக்கி தந்த நண்பர் Jega Deesan S -க்கு என்மனமார்ந்த நன்றிகள். 31.03.2020.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக