சல்வா ஜூடும் – சா. திருவாசகம்
நேற்று நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சிறுகதை தொகுதியை மிகவும் விரைவாக வாசித்து முடித்தேன். அந்த சிறுகதை தொகுதியின் பெயர் சல்வா ஜூடும். நூலாசிரியரின் பெயர் சா.திருவாசகம். இவருடைய கதைகளை இப்போதுதான் முதன்முறையாக வாசிக்கிறேன். ஆனால் கதைகளை வாசிக்க வாசிக்க மனதுக்கு மிகவும் நெருக்கமாக உணரமுடிகிறது.
இந்த தொகுப்பில் மொத்தம் பதிமூன்று சிறுகதைகள் உள்ளன். அவற்றில் எட்டு கதைகள் தனியார் கல்லூரிகளை கதைக்களமாக கொண்டுள்ளது. குறைந்த சம்பளத்தில் வேலை நிரந்தரமற்று வேலைப்பார்க்கும் பேராசிரியர்களின் கனவுகள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள், பேராசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான உறவு, பணி நிரந்தரத்திலிருக்கும் பேராசிரியர்களுக்கும் இவர்களுக்குமான உறவு, ஆண் பெண் நட்புகள், பெண் பேராசிரியர்களின் சங்கடங்கள் என பலவகையான வாழ்க்கை இந்த எட்டு கதைகளிலும் பதிவாகியுள்ளது. சமகால வாழ்வின் ஒருபகுதி மிகவும் நேர்மையாகவும் உணர்வுபூர்வமாகவும் இந்த கதைகளில் பதிவாகியுள்ளது.
அடுத்தப்படியாக மூன்று சிறுகதைகள் திரைப்படத்துறையை பின்புலமாக கொண்டுள்ளது. சொல்லுக்கும் செயலுக்கும்மான வேறுபாடுகளை கொண்டுள்ள மனிதர்கள் எல்லா துறைகளிலும் காணப்படுவார்கள்தான் என்றாலும் நிறங்கள் நிறைந்த திரைத்துறையில் நிறமாறும் மனிதர்களின் எண்ணிக்கை சற்றுக் கூடுதல்தான் போலும். மனிதன் மகத்தான சல்லிப்பயல் என்ற ஜீ.நாகராஜனின் மேற்கோளை நமக்கு அடிக்கடி நினைவுப்படுத்திக்கொண்டே இருப்பார்கள் போலும் இத்துறையில் மட்டும்.
இரண்டு சிறுகதைகள் மட்டும் வேறுவேறு கதைகளன்களை கொண்டவைகளாகும். இயற்க்கைக்கும் மனிதனுக்குமான உறவு, மனிதனுக்கும் மனிதனுக்குமான உறவு என்றும் விசித்திரமானதாகும். மழையை விரும்பும் மனிதர்களுக்கு அருகிலேயே மழையை வெறுப்பவர்களும், நேசத்தை வெறுப்பவர்களுக்கு மிக அருகிலேயே நேசத்தை விரும்புகிறவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.
கதைகளில் காத்திரமான விசயங்களைப் பற்றி பேசியிருந்தாலும் கதைச்சொல்லும் முறையில் எல்லாக்கதைகளிலும் நகைச்சுவை மிளிர்கிறது. சிலக் கதைகளை தொடர்ந்து வாசிக்க முடியாது சிறிது இடைவேளை தேவைப்படும் அந்தளவுக்கு நம்மையறியாமல் வாய்விட்டு சிரிக்க வைத்துவிடுகிறார். அரசு, சாதி, மதம், பாலினம் மற்றும் வர்க்கம் சார்ந்து வெளிப்படும் வக்கிரங்களையும் வன்முறையையும் எளிய மொழியில் அதே சமயம் அதன் வலிகளை அதன் வீரியம் குறையாமல் நம்முள் கடத்திவிடுகிறார். . கதைச்சொல்லி சா.திருவாசகம் அவர்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.
இந்த தொகுதியின் தலைப்பு கதையான சல்வா ஜூடும் அண்மையில் நான் வாசித்த சிறுகதைகளில் மிகவும் முதன்மையான சிறுகதையாகும். உலகின் மிகப்பெரிய சனநாயக குடியரசு என்றும், அகிம்சாமூர்த்தி காந்தியை தன் தேசதந்தை என்றும் கூறிக்கொள்ளும் இந்திய ஒன்றியத்தின் கோரமுகத்தை இந்த சிறுகதை சிறப்பாக பதிவு செய்துள்ளது. சமூக வலைதளங்களில் போராளியாக இருக்கும் மக்கள் களத்துக்கு ஏன் வரமுடியவில்லை. வந்தால் என்ன என்ன பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும். ஒருவன் தன்னை போராளி என்று உணரும் தருணத்திலேயே அந்த எண்ணம் எப்படி காணாமல் போகிறது எல்லாவற்றுக்கும் சாட்சியாக இந்த சிறுகதை உள்ளது.
இந்த நூலை கருப்பு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 2018 ஆண்டு இந்நூலின் முதல் பதிப்பு வெளியாகியுள்ளது.
இந்நூலை வாசிக்கும் வாய்ப்பை சாத்தியமாக்கிய நண்பர் செந்தில் வேலு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். 15.03.2020.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக